சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் கதிர் அரிவாள் - விவசாயம் செழிக்கும்
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் ஏற்கனவே இருந்த செம்மண் அகற்றப்பட்டு கதிர் அறுக்கும் அரிவாள் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
திருப்பூர்: காங்கேயம் அருகே சிவன்மலை மீது சுப்பிரமணியசாமி கோவிலில் உள்ள ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் கதிர் அரிவாள் வைத்து பூஜை செய்ய உத்தரவு வந்ததை அடுத்து ஏற்கனவே பெட்டியில் இருந்த செம்மண் அகற்றப்பட்டு கதிர் அறுக்கும் அரிவாள் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். மலை மீது உள்ள கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது.
இந்த உத்தரவு பெட்டியில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சிலருக்கு கனவில் தோன்றும். தனக்கு வந்த கனவு பற்றி கோவிலுக்கு வந்து நிர்வாகிகளிடம் பக்தர் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள்ளைப் பூ வந்தால் பக்தர் சொன்னது உண்மை என்பது நிச்சயமாகும். இதனையடுத்தே பக்தர் சொன்னதை உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.

தங்கம் முதல் மண் வரை
இந்த ஆண்டவன் உத்தரவுபெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இரும்புச்சங்கிலி
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்படுவதால், சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என்று கூறப்பட்டது. சசிகலாவும் அவரது உறவினர்களும் சிறைக்கு போனார்கள் என்று பேசப்பட்டது.

முருகனின் அருள்
கடந்த ஜூலை மாதம் அம்பும், செம்பும் வைத்து பூஜை செய்யப்பட்டது. செப்டம்பர் மாதம் செம்மண் வைத்து பூஜை செய்ய உத்தரவிடப்பட்டதை அடுத்து கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஒரு பையில் செம்மண் வைத்து பூஜை செய்யப்பட்டது. நிலம் விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

விவசாயி கனவில் முருகன்
நேற்றுமுதல் செம்மண் அகற்றப்பட்டு 3 கதிர் அரிவாள் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதை திருப்பூர் மாவட்டம் குண்டடம் சுங்கிலியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 80 வயதான விவசாயி பி.வேலுச்சாமி என்பவர் முருகன் தனது கனவில் வந்து கூறியதாக கூறினார். இதையடுத்து பூ போட்டு பார்த்து கதிர் அரிவாள்கள் ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யப்படுகிறது.

விவசாயம் செழிக்கும்
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருட்கள் சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் என்பதை உணர்த்தும் வகையிலேயே கதிர் அரிவாள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுவதாக பக்தர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications