சிம்ம ராசிக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பணக்கார யோகம்.. காதல் திருமணம் கன்ஃபார்ம்.. குஷிதான்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் வருடாந்திர கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த மூன்று கிரகங்களின் மாற்றங்களுமே உலக மக்கள் அனைவராலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. பொதுவாக ராகு கேது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம். காலபுருஷ ராசி 12 ஆம் வீடு மீனத்தில் இருந்து 11 ஆம் வீடான கும்பத்துக்கு லாப ஸ்தானத்துக்கு ராகு வரப் போகிறார். ராகுவைப் போல கொடுப்பானில்லை. கேதுவைப் போல கெடுப்பானில்லை எனும் வாக்கு உண்டு.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கிரகம் போக காரகன், கேது கிரகம் ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறது. ராகு பகவான் இந்த ஆண்டு குருவின் விசேஷ பார்வையில் வந்து அமரப் போகிறார். 12 ஆண்டுகளுக்கு 3 முறை மட்டுமே இதுபோன்று நிகழும். ராகு சுப, அசுப இரு பலன்களையும் கொடுப்பார். தற்போது குரு பார்வை இருப்பதால் நற்பலன்கள் அதிக அளவில் கிடைப்பதற்கான காலகட்டமாக இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி என்பது ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கையையும் திருப்பிக் கொடுக்கக்கூடிய வலிமையான கிரகங்களாகும். 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்.
அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இதுநாள் வரை உங்களுக்கு 7 ஆம் பாவத்தில் சனி பகவானம் கண்டச் சனியாக இருந்து வந்தார். இப்போது 8 ஆம் பாவத்துக்கு சனி பகவான் போகிறார். 7 ஆம் பாவம் என்பது களஸ்திர ஸ்தானம். சிம்மத்துக்கு சனி என்பது ஜென்ம சத்ரு. சத்ருவிடம் மாட்டிக்கொண்ட காலகட்டமாக சிம்ம ராசியினருக்கு இருக்கும். சிக்கியிருந்த விஷயங்களில் இருந்தெல்லாம் இனி விடுதலை அடையப் போகிறீர்கள். சனி, ராகுவால் வம்பு, வழக்கு, இடம், சத்ரு, கொடுக்கல் வாங்கல் விஷயங்களால் பாதிக்கப்பட்டு வந்திருப்பீர்கள்.
திருமண யோகம்
மற்றவர்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டு அதனை வாங்க முடியாமல் பிரச்சனைகளை சுமந்து வந்திருப்பீர்கள். அஷ்டம சனி என்பதால் அச்சப்படத் தேவையில்லை. 8 ஆம் பாவத்தில் ராகு பகவான் வெளியில் வருவதால் நிறைய மேன்மைகளைக் காணப் போகிறீர்கள். குருவின் பார்வையில் ராகு வந்து அமருவதால் உங்களுக்கு திருமணம் நடக்கும். காதல் திருமணம், கலப்புத் திருமணம், மொழி, இனம், மதம் விட்டு மதம் திருமணம் செய்யும் யோகம் உண்டாகும்.
சுபகாரியம்
7 ஆம் பாவத்தில் ராகு வந்து அமரும்போது முதலில் குருவின் நட்சத்திரத்தில் வருகிறார். குழந்தைகளுக்கு பள்ளிகளுக்கு கட்டணம் கூட செலுத்த முடியாமல் இருந்தவர்களுக்கு கூட குழந்தைகள் விஷயத்தில் இனி திருப்தி, சாந்தி உண்டாகும். குழந்தைகளுக்கும் வயதை அனுசரித்து உயர்கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு, வெளிநாட்டு பயணம், சுபகாரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்டம்
ராகு பகவான் சுய சாரத்தில் வரும்போது உங்களுக்கு பாசிட்டிவான நேரம் ஏற்படும். சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வீடு, பாக்கியம், தொழில், இடம், பூமி, வாகன விஷயங்களில் அதிர்ஷ்டம் உண்டாகும். குரு பகவான் 11 ஆம் இடத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து சொந்த வீட்டையும், வெற்றி ஸ்தானத்தையும், களத்திர ஸ்தானத்தையும் பார்க்க இருப்பதால் இந்த ராகு கேது பெயர்ச்சியில் அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள்.
எச்சரிக்கை
ராசியில் கேது வந்து அமரும்போது பொதுவாகவே சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும் நீங்கள் இனி யோசித்து, நிதானமாக செயல்படுவீர்கள். எதையோ ஒரு விஷயத்தை பறிகொடுத்தது போல இருப்பீர்கள். பட்டற்ற நிலைக்குச் செல்வீர்கள். அப்போது தான் வாழ்க்கையில் எங்கே தவறு செய்தோம் என்று உணரும் காலகட்டமாக இருக்கும்.
ராசியில் கேது இருப்பதால் அலர்ஜி, தோல் பிரச்சனை, முடி கொட்டுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மெளனமாக இருப்பது காரியத்தில் ஜெயத்தை உண்டாக்கும்.
வழிபாடு
ராசியில் இருந்த கேது பகவான் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்வது, மகா கணபதி வழிபாடு, மந்திர ஜெபம் செய்வது, விநாயகர் கோயிலில் அருகம்புல் வைத்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். அனுமன் கோயில்களில் வழிபாடு செய்வது, அனுமான் சாலிசா பாராயணம் செய்வது, சனிக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்மை தரும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு 7 ஆம் பாவத்தில் ராகு பகவான் நிறைய நன்மைகளைத் தரப் போகிறார். வாழ்க்கையில் முன்னேற்றம், வளர்ச்சி மிகுந்த காலகட்டமாக இருக்கும் என்பதால் வருகின்ற வாய்ப்பை பயன்படுத்தி அதனை சாதகமாக மாற்றிக் கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications