சனிப்பெயர்ச்சி: விருச்சிகம் ராசிக்கு எடுத்த காரியத்தில் ஜெயம்.. இந்த விஷயங்களில் மட்டும் எச்சரிக்கை
சனிப்பெயர்ச்சி: சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள், பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கிரகப் பெயர்ச்சி என்றால் அது சனிப்பெயர்ச்சி தான். 2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான்.

நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள்.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் பஞ்சம சனி. சனி பகவான் 5 ஆம் இடத்துக்கு வரப் போகிறார். ஐந்தாம் இடத்தில் எந்தவொரு கிரகம் வந்தாலும் அபிராமி அந்தாதியைப் படிப்பது நல்ல பலன்களைத் தரும். அதில், 40, 59, 75 பாடல்களை படிப்பது நல்ல பலன்களைத் தரும். 4 ஆம் இடத்தில் ராகு, 10 ஆம் இடத்தில் கேது, 8 இல் குரு இருக்கிறார். வயிறு, ரத்த அழுத்தம், சத்ருக்கள் விஷயத்தில் கவனம் தேவை, தலைசுற்றல், மயக்கம் வருவதற்கான வாய்ப்புள்ளது. உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்வது நல்ல பலன்களைத் தரும். சுப விரையம் உண்டாகும். எல்லாவற்றிலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தனம், குடும்பம், வாக்கு பெருகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தாய் வழி, தந்தை வழி உறவு மேம்படும். ரத்த பந்த உறவுகளுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எடுத்த காரியத்தில் ஜெயம், அனுகூலம் காணப்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும்.
எதிர்பார்க்காத அனுகூலம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உண்டாகும். ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தைரியமாக முயற்சிகள் மேற்கொள்வீர்கள். கம்பீரமாக ஜெயம் கொள்வீர்கள். எதிரிகள் சூழ்ச்சியால் பரிதவிக்கும் சூழ்நிலை ஏற்படும்.
5 இல் சனி இருப்பதால் குல தெய்வ வழிபாடு நல்லது. வைத்தீஸ்வரன் சர்வ சத்ருக்களை நாசம் செய்யும். நல்ல நம்பிக்கை தரும். கிருத்திகையன்று முருகருக்கு அபிஷேகம் பார்ப்பது நல்ல பலன்களைத் தரும். தீர்த்தத்தை வாங்கி வந்து வீட்டைச் சுற்றி தெளிப்பது நல்லது. இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு அனைத்துவிதமான பலன்களைத் தரும்.
தனிப்பட்ட வகையில் கொடுத்த வாக்கை குடும்பத்தில், வெளியில் காப்பாற்றுவீர்கள். உன்னத ஸ்தானத்தை பெறப் போகிறார்கள். பிள்ளைகளுடன் கோபம், பிள்ளைகளின் வண்டி, வாகனம், பிள்ளைகளின் பழக்க வழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும். அபிராமி அந்தாதியைப் படிப்பது பிள்ளைகள் வழி வரும் பிரச்சனைகளைத் தடுக்கும். இந்த சனிப்பெயர்ச்சி முயற்சியையும், முன்னேற்றத்தையும் தரும் காலமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications