இதுக்கே இன்ஜின் திணறுதே.. பெட்ரோலில் எத்தனால் கலப்பிடத்தை மேலும் அதிகரிக்க.. மத்திய அரசு திட்டம்
சென்னை: பெட்ரோலில் எத்தனால் கலப்பதைப் 27% ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதையும், கார்பன் உமிழ்வைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, வாகன உரிமையாளர்கள் மத்தியில் பல்வேறு கவலைகள் எழுந்துள்ளன. எரிபொருள் செலவு அதிகரிப்பது, வாகனத்தின் செயல்திறன் மந்தமாவது, பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பது போன்ற புகார்களைப் பலர் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக பலரும் மைலேஜ் குறைந்துவிட்டது.. வண்டி திடீர் என்று பவர் இல்லாமல் குறைந்துவிட்டது என்று விமர்சனங்கள் வைக்கின்றனர். பெரும்பாலான இந்திய சாலைகளில் ஓடும் வாகனங்கள் இன்னும் E20 ஏற்றவை அல்ல என்பதால், சேவை மையங்கள் இயந்திர தேய்மானம் மற்றும் கேஸ்கெட் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதாகக் கூறுகின்றன. இதனால் நுகர்வோர் பாகங்களை மறுசீரமைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
20% எத்தனால் கலந்த பெட்ரோல்
20% எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக காரின் மைலேஜ் 11-12 கிமீ/லிட்டரில் இருந்து 7-8 கிமீ/லிட்டராகக் குறைந்ததாக பலரும் தெரிவித்துள்ளனர். 20% எத்தனால் கலந்த பெட்ரோல் எடை கூடுதலாக உள்ளது. அதோடு பவர் இல்லை. மைலேஜ் குறைந்துவிட்டது என்று கூறுகின்றனர்.
பலரும் தங்கள் காரின் மைலேஜ் 20% குறைந்ததாகவும், அத்துடன் வாகனம் தடுமாறுவது மற்றும் வேகம் குறைவாக இருப்பதையும் தெரிவித்துள்ளனர். E20 அல்லாத வாகனங்களில் எரிபொருள் சிக்கனம் சுமார் 7% குறையலாம் என்று தொழில்துறை நிர்வாகிகள் மதிப்பிடுகின்றனர். இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI) மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆய்வுகள் 1-6% மைலேஜ் குறைவதைக் காட்டுகின்றன.
கூடுதல் எத்தனால் கலப்பு
இப்படிப்பட்ட நிலையில் இந்தியா எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பசுமையான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில், பெட்ரோலில் 27% எத்தனால் கலப்பதை (E27) அறிமுகப்படுத்த அரசு முன்மொழிந்துள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் 30% கலப்பு என்ற இலக்கை நோக்கிய ஒரு படியாக இது கருதப்படுகிறது. எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் (EBP) திட்டத்தின் குறிப்பிடத்தக்க வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு 2% க்கும் குறைவாக இருந்த கலப்பு அளவு, 2022 ஆம் ஆண்டில் 10% (E10) ஐ எட்டியது. மேலும், 2025 ஆம் ஆண்டில் 20% (E20) கலப்பு என்ற இலக்கை அடைந்தது. இதை 27% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
எத்தனால் பெட்ரோல் கலப்பு - மத்திய அரசு விளக்கம்
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதால் (E20) மைலேஜ் குறையும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனால் வாகனத்திற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக பழைய வாகனங்கள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் தொடர்பான பல கவலைகள் ஊடகங்களில் எழுப்பப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் கவலைகள் பெரும்பாலும் அறிவியல் ஆதாரங்கள் அல்லது நிபுணர் ஆய்வுகளால் ஆதரிக்கப்படாத, அடிப்படையற்ற கூற்றுகள் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
எத்தனால் கலந்த பெட்ரோலால் பெரிய அளவில் மைலேஜ் குறையும் என்பது உண்மையல்ல; 4 சக்கர வாகனங்களுக்கு 1 - 2% மற்ற வாகனங்களுக்கு 3 - 6% வரை மைலேஜ் குறைய வாய்ப்பு; எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களின் என்ஜின் பாதிக்கப்படும் என்பதில் உண்மையில்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திமுக விமர்சனம்
திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் இது தொடர்பாக செய்துள்ள போஸ்டில், உங்க டூத் பேஸ்டில் உப்பு இருக்கா என்பது போல உங்க பெட்ரோல்ல எத்தனால் இருக்கா என கேட்கும் நிலையில் இருக்கிறோம். எத்தனால் கலந்தால் மைலேஜ் குறையும் என பெட்ரோலியத்துறை அமைச்சகமே அறிவிக்கை கொடுக்கிறது! மோட்டார் வாகனத்தின் பாகங்கள் பழுதுபடும் எனவும் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் யாருக்கு லாபம்? நமக்கு கண்டிப்பாக இல்லை, என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications