டிராபிக் சிக்னலில்.. கவுண்டவுன் பார்த்து இருக்கீங்களா? இனி அந்த சிஸ்டமே மாறப்போகுது.. புதிய முடிவு
சென்னை முழுவதும் 55 அடாப்டிவ் சிக்னல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையின் போக்குவரத்து சிக்னல்களில் நீண்ட நேரம் காத்திருப்பதை முடிவிற்கு கொண்டு வரும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த காலத்தில் இருந்த முறை மாற்றப்பட்டு, முழுக்க முழுக்க புதிய முறையை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். வாகனத்தைக் கண்டறியும் சென்சார்கள் இதற்காக சிக்னலில் பொருத்தப்பட உள்ளது.

இந்த சிக்னல்கள், நிகழ்நேர போக்குவரத்து பிரச்சனைகள், டிராபிக் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து காத்திருப்பு நேரத்தை தானாகவே சரிசெய்து, கவுண்டவுனை மாற்றும்.
அதாவது நீங்கள் ஒரு சிக்னலில் இருக்கிறீர்கள். நீங்கள் இருக்கும் சிக்னலில் கவுண்டவுன் 60 நொடிகள். ஆனால் உங்கள் பக்கம் மட்டும் அதிக டிராபிக் உள்ளது. மற்ற திசையில் டிராபிக் இல்லை என்றால் இதை சென்சார் கவனித்துக்கொள்ளும். இந்த சென்சார் மூலம் உங்கள் சிக்னல் உடனே மாறி.. கவுண்டவுன் 60ல் இருந்து ஜீரோவாக மாறும்.
இதன் மூலம் சீரான டிராஃபிக்கை உறுதிசெய்து தாமதங்களைக் குறைக்க முடியும். இந்த முயற்சி முதல் கட்டமாக தரமணி லிங்க் ரோடு-எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பு, எம்ஐஓடி மருத்துவமனை சந்திப்பு, நொளம்பூர் மெயின் ரோடு-பாரதி சாலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள சிக்னல்களில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிக்னல்: சென்னையில் இருக்கும் பல்வேறு முக்கிய சிக்னல்கள் நீக்கப்பட்டு உள்ள நிலையில் போக்குவரத்து பெரிய அளவில் மாற்றப்பட்டு உள்ளது.
சென்னையின் முக்கிய சிக்னல்களில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்க, 'ஸ்மார்ட் ட்ராஃபிக் சிஸ்டம்' கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திட்டம் சென்னை முழுக்க தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக U-டர்ன் அதிகப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது
இந்த திட்டத்தின் கீழ் பல சிக்னல்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூட சென்னை போக்குவரத்து போலீஸார் திட்டமிட்டுள்ளனர். நகரம் முழுவதும் 15 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் 65 சிக்னல்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த திட்டம் தற்போது ஸ்பென்சர், தேனாம்பேட்டை மற்றும் தி நகர் சிக்னல்களில் சோதனை அடிப்படையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ஓஎம்ஆர், ஈவிஆர் சாலை மற்றும் 100 அடி சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்பென்சர், நந்தனம் ஆகிய இடங்களில் சிக்னல்கள் மூடப்பட்டு, ஒருபுறம் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்கள் வலப்புறம் திரும்பவோ அல்லது U-டர்ன் எடுக்கவோ மீடியன் U-டர்ன் சந்திப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தி.நகரில் சிக்னல் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. எல்டாம்ஸ் சாலை மற்றும் தி.நகரில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலைக்கு சென்று, தேனாம்பேட்டை மெட்ரோ மற்றும் அண்ணா அறிவாலயம் சந்திப்புகளில் யு-டர்ன் எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
யு-டர்ன் அதிகரிப்பு: அதன்படி தற்போது சென்னையில் யு-டர்ன் அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதாவது சிக்னலில் நிற்க வேண்டியது இல்லை. அதற்கு பதிலாக சாலையில் நேராக சென்று தேவையான இடத்தில யு-டர்ன் போட வேண்டும். யு-டர்ன் போடும் இடத்தில் தேவையில்லாத பிளாக், டிராபிக் ஏற்படுவதை தவிர்க்க அங்கேயும் பேரிகேட் போடப்பட்டு உள்ளது.
இதனால் எதிர்பக்கம் வரக்கூடிய வாகனங்களை தடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதனால் எங்கும் சிக்னல் இல்லாமல் வாகனங்கள் மிக வேகமாக செல்ல முடியும். காவல்துறை இந்த மாற்றங்களை சோதனை அடிப்படையில் செயல்படுத்தி, பின்னூட்டத்தின் அடிப்படையில் மற்ற சிக்னல்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. OMR இல் உள்ள டைடல் பார்க் போன்ற சில சந்திப்புகளுக்கு சில கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
தேவையான மாற்றங்களைச் செய்ய நெடுஞ்சாலைகள் போன்ற பிற துறைகளுடன் நாங்கள் ஒருங்கிணைத்து வருகிறோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேரம் குறைப்பு: இப்படி சிக்னல்கள் மொத்தம் 8 இடங்களில் அண்ணா சாலையில் முதல் கட்டமாக நீக்கப்பட்டு உள்ளது. சைதாப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை முடியும் இடம் வரை சிக்னல் நீக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகனங்கள் நேராக செல்லும் வகையில் சிக்னல்கள் நீக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் இந்த சாலையில் 1.30 மணி நேர பயணம் மொத்தமாக 40 நிமிட பயணமாக குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications