நிலைமை கையை மீறிப்போகுது! இன்றும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! சென்னையில் புதிய உச்சம்!
சென்னை: பொதுமக்களின் தலையில் இடி விழுந்தது போல, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்றும் (மே 26) மேலும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் எரிபொருள் விலை, தற்போதும் கட்டுக்குள் வராமல் நுகர்வோரை நிலைகுலையச் செய்துள்ளது.

இன்றைய அதிரடி விலை நிலவரம்:
எண்ணெய் நிறுவனங்கள் இன்று காலை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் எரிபொருட்களின் சில்லறை விற்பனை விலை பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது:
பெட்ரோல் விலை: லிட்டருக்கு 24 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை: லிட்டருக்கு 23 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் டீசல் ரூ.99.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில தினங்களாகவே அடுத்தடுத்து பெரிய தொகையாக உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இன்றும் சில காசுகள் என்ற அளவில் விலையேற்றம் தொடர்வது வாகன ஓட்டிகளுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது. குறிப்பாக, டீசல் விலை 100 ரூபாயைத் தொட இன்னும் வெறும் 22 காசுகளே எஞ்சியிருப்பது சரக்கு போக்குவரத்துத் துறையினரைக் கடுமையான கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
தொடரும் உலகளாவிய நெருக்கடி:
மத்திய கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) கடல் பகுதியில் நீடித்து வரும் பதற்றமான சூழ்நிலையின் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் நீடிக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான காப்பீட்டுக் கட்டணங்கள் உயர்ந்த வண்ணமே இருப்பதால், அதன் சுமையை இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி விலை நிர்ணயக் கொள்கை மூலம் நுகர்வோர் மீது மாற்றி வருகின்றன.
பொருளாதாரத் தாக்கம்:
இந்தத் தொடர் விலையேற்றம் காரணமாக லாரி, வேன் உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் வாடகை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. இதன் நேரடி விளைவாக, கோயம்பேடு போன்ற பெரிய சந்தைகளுக்கு வரும் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பண்டங்களின் விலையும் சில்லறை சந்தையில் உயரத் தொடங்கி, சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டைக் கடுமையாகப் பதம் பார்த்து வருகிறது. அரசு உடனடியாக தலையிட்டு வரிக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் மூலம் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு வரலாறு (கடந்த 15 நாட்களில் 5 முறை)
கடந்த சில மாதங்களாகத் தேர்தல் மற்றும் பல்வேறு காரணங்களால் எவ்வித மாற்றமும் இன்றி நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலைகள், மே 15 முதல் திடீரென அதிரடியாக உயர்த்தப்படத் தொடங்கின. கடந்த இரு வாரங்களில் மட்டும் நான்கு கட்டங்களாக இந்த விலையேற்றம் நுகர்வோர் மீது திணிக்கப்பட்டுள்ளது.
மே 15, 2026 - முதல் கட்ட விலையேற்றம்: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் விலையை உயர்த்தத் தொடங்கின. முதல் தவனையாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு அதிரடியாக ரூ.3.00 உயர்த்தப்பட்டு நுகர்வோருக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டது.
மே 19, 2026 - இரண்டாம் கட்ட உயர்வு: முதல் உயர்வு தந்த அதிர்ச்சி விலகுவதற்குள், அடுத்த நான்கே நாட்களில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா 90 காசுகள் உயர்த்தப்பட்டது.
மே 23, 2026 - மூன்றாம் கட்ட உயர்வு: சர்வதேச சந்தையின் அழுத்தத்தைக் காரணம் காட்டி, மே 23 அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரிக்கப்பட்டன. இதே நாளில் டெல்லியில் சி.என்.ஜி (CNG) எரிவாயு விலையும் கிலோவுக்கு 1 ரூபாய் உயர்த்தப்பட்டது.
மே 25, 2026 (நேற்று) - நான்காம் கட்ட அதிரடி உயர்வு: கடந்த இரு வாரங்களில் இல்லாத அளவுக்கு இன்று மிகக் கடுமையான விலையேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 என மிகக் கொடூரமாக உயர்த்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications