Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10. நீதிக்கட்சி ஆட்சியைப் பிடித்தது

Subscribe to Oneindia Tamil

Theagaroya Chetty
சீராரு நமிந்திய சக்ரவர்த்தினியம்மை ஜெயம்

தின மோங்குகவே!

பாரார்கதி ரோனொளி மாழ்கலிலாப் பரிபாலன

ராச்சிய மோங்குகவே!

கொஞ்சம் புரியும்படி சொல்லலாமா?

‘மகாராணியின் அனுகூலமான என்றும் மறப்பரிய கீர்த்திமிக்க ஆட்சியின் ஐம்பது வருஷம் முடிவுபெற்றதைக் குறித்தும் சக்ரவர்த்தியிடம் முறைப்படி உண்மையான மகிழ்ச்சி தெரிவிப்பதுடன் பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளினின்றும் பிரதிநிதிகள் வந்துகூடிய இந்த ஜனசபை, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின்மீது அம்மகாராணி இன்னும் பல வருஷம் ஆளவேண்டுமென்று வாழ்த்துகிறது.’

பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியாவை மீட்கப் புறப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆண்டு மாநாடுகளில் பாடப்படும் வாழ்த்துப்பாடலும் வாழ்த்தும் தீர்மானமுமே மேலே இருப்பவை. இந்திய தேசிய காங்கிரஸின் உருவாக்கமே சுவையானது.

சிப்பாய் புரட்சி அடங்கிய பிறகும்கூட பிரிட்டிஷாருக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் புரட்சி வெடிக்கக்கூடும் என்ற பயம் அவர்களை வாட்டியது. மீண்டும் ஒரு புரட்சியில் இருந்தும் ஆபத்தில் இருந்தும் பிரிட்டிஷ் அரசு காப்பாற்றப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரு சேஃப்டி வால்வு அவசியம் என்ற கருத்து எழுந்தது. எழுப்பியவர் ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம். ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் அதிகாரி.

பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்கெனவே இந்தியன் அசோஷியேஷன் ஆஃப் கல்கத்தா. பிரசிடென்சி அசோஷியேஷன் ஆஃப் பாம்பே, சென்னை மகாஜன சபா என்று ஏராளமான சங்கங்களும் சபாக்களும் இருக்கின்றன. பம்பாயில் பேசுகிறார்கள். கல்கத்தாவில் பேசுகிறார்கள். சென்னையில் பேசுகிறார்கள். இன்னும் பல இடங்களில் பேசுகிறார்கள். அந்த அமைப்புகளில் இருப்பவர்கள் எல்லாம் படித்தவர்கள். பணக்காரர்கள். அவர்களைப் பின்பற்றுபவர்கள்தான் இந்தியாவில் நிரம்பியிருக்கிறார்கள். தனித்தனித் தீவுகளாக இருக்கும் சங்கங்களையும் சபாக்களையும் ஒரே குடையின்கீழ் திரட்டிவிட்டால் அற்புதமான சேஃப்டி வால்வு தயார். அதன் பெயர் இந்திய தேசிய காங்கிரஸ்.

வைஸ்ராய் டஃப்ரின் பிரபுவின் ஆசியுடன் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது. 28 டிசம்பர் 1885 அன்று பம்பாயில் இருக்கும் கோகுல்தாஸ் தேஜ்பல் சமஸ்க்ருதக் கல்லூரி அரங்கில் இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டம் கூடியது. உமேஷ் சந்திர பானர்ஜி முதல் தலைவர். பொதுச்செயலாளராக ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு கூடும் என்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் பொதுச்செயலாளர் பதவியில் ஹ்யூமே 1885 முதல் 1906 வரை தொடர்ந்து நீடித்தார்.

இங்கிலீஷ் ராஜ்ஜியத்தினிடம் நாம் பூர்ணமாக அன்பும் ஆதரவும் கொண்டிருக்கிறோம். அவர்கள் நமக்குச் செய்த நன்றிகளையெல்லாம் மறக்கமாட்டோம். அவர்கள் நமக்குக் கொடுத்த கல்வியினால் புதியதோர் ஒளி பெற்றோம். ஜனங்களுடைய நன்மைக்காக ராஜாவேயொழிய, ராஜாவுக்காக ஜனங்களில்லை என்று பாடம் அவர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்தார்கள். ஆசியாவின் கொடுங்கோன்மையாகிய இருளுக்கிடையே ஆங்கிலேய நாகரிகத்தின் ஒளி நமக்குக் கிடைத்தது என்று 1914ல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசினார் தாதாபாய் நௌரோஜி.

பிரிட்டிஷாருக்கு நெருக்கமாகவும் மகாராணிக்கு வாழ்த்துப்பா பாடிக்கொண்டும் இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, கிலாபத் அநீதி ஆகியவற்றின் காரணமாக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியிருந்தது. ஒத்துழையாமை என்றால் தேர்தலிலும் ஒத்துழையாமைதான். மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின்படி நடக்கும் மத்திய மற்றும் மாகாண சட்டசபைத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் போட்டியிடாது என்று அறிவித்திருந்தார் காந்தி.

தேர்தல் புறக்கணிப்பு என்பது சென்னை மாகாணக் காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தியாக இருந்தது. வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு. கொஞ்சம் அசந்தாலும் ஆட்சியைக் கைப்பற்றிவிடக் காத்திருக்கிறது நீதிக்கட்சி. கொஞ்சம் கருணை காட்டுங்கள் என்றனர் இங்குள்ள காங்கிரஸ் தலைவர்கள். அதாவது, காங்கிரஸில் இருக்கும் முக்கியப் பிராமணத் தலைவர்கள். ஒருபக்கம் காந்திக்கு விண்ணப்பம் அனுப்பிக் கொண்டே இன்னொரு பக்கம் தேர்தல் பிரசாரத்திலும் மறைமுகமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். முக்கியமாக, ‘இந்து’ கஸ்தூரி ரங்க அய்யங்கார் மற்றும் சத்தியமூர்த்தி அய்யர் இருவரும் நீதிக்கட்சியை எதிர்த்துக் காங்கிரஸைக் களமிறக்கியே தீருவது என்ற முடிவில் உறுதியாக இருந்தனர்.

தேர்தல் புறக்கணிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் காந்தி. தேர்தலும் வேண்டும். காந்தியும் வேண்டும். மதில் மேல் பூனையாக நின்றுகொண்டிருந்தனர் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்கள். பல கேள்விகளுக்குப் பதில் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் சிறப்பு மாநாடு செப்டெம்பர் 4,6,8 1920 ஆகிய தேதிகளில் கல்கத்தாவில் கூடியது. ஒத்துழையாமை இயக்கம் குறித்த இறுதி முடிவை எடுக்கவேண்டும் என்பதுதான் மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கம். அதில் பல திகைப்பூட்டும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

பிரிட்டிஷ் அரசிடம் இருந்து பெற்றுள்ள பட்டங்களைத் துறத்தல், அரசாங்க கௌரவப் பதவிகளில் இருந்து விலகுதல், அரசு விழாக்களில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தல், பிரிட்டிஷாரின் நீதிமன்றங்களை இந்திய வழக்கறிஞர்கள் புறக்கணித்தல் போன்ற பல முடிவுகள் எடுக்கப்பட்டன. எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமானது, மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் விளைவாக நடத்தப்பட இருக்கும் தேர்தலைப் புறக்கணிப்பது என்று இந்திய தேசிய காங்கிரஸ் முடிவு செய்தது. தவித்துப் போனார்கள் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்கள்.

காங்கிரஸ் கட்சியின் தீர்மானம் நாட்டு மக்களைக் குழப்பும் முயற்சி என்று விமரிசனம் செய்த நீதிக்கட்சி, சென்னை மாகாணத்தில் தேர்தலைச் சந்திக்கத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டது. தேர்தலில் போட்டியிடவில்லை என்று காங்கிரஸ் தலைமை அறிவித்தபிறகு அந்தக் கட்சியின் மறைமுக ஆதரவுடன் பல வேட்பாளர்கள் நீதிக்கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக நின்றனர். ஹோம் ரூல் இயக்கமும் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

அந்தத் தேர்தலில் சென்னைக்கு நான்கு இடங்கள் தரப்பட்டு, அனைத்தும் ஒரே தொகுதியாகக் கொள்ளப்பட்டது. ஆக, வேட்பாளர்கள் அனைவரும் சென்னை என்ற ஒற்றைத் தொகுதிக்கே போட்டியிடுவார்கள். அந்த நான்கில் இரண்டு இடங்கள் பிராமணர் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. அதன்படி வாக்காளர்கள் அனைவரும் இந்த நால்வரில் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாக்களிக்கவேண்டும்.

அதிக வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு பிராமணர் அல்லாத வேட்பாளர்கள் பிராமணர் அல்லாத இரண்டு இடங்களின் உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவர். இந்த இரண்டு பேரையும் தவிர்த்த மற்ற வேட்பாளர்களில் அதிக எண்ணிக்கை பெற்ற இரண்டு வேட்பாளர்கள் மற்ற இரண்டு இடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவர்.

பிராமணக் கொடுங்கோன்மையில் இருந்து மீளவும், மீண்டும் சுதந்தரப் பிரஜைகளாக நாம் வாழவும் இந்தத் தேர்தல் ஒரு அரிய சந்தர்ப்பம். இந்தத் தேர்தல் முடிவைப் பொறுத்தே நமது கட்சியின் எதிர்காலமும் பிராமணர் அல்லாதார் சமுதாயத்தின் எதிர்காலமும் அமையப் போகிறது. பிராமணர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்கள் தங்கள் நிலையைக் கெட்டியாக்கிக் கொள்வார்கள். அது நமக்கு என்றும் நீங்காத பாதகமாகிவிடும். இப்போது இல்லை என்றால் இனி எப்போதுமே நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்காது; கிடைக்கவே கிடைக்காது. நாம் அதிக அளவு சட்டசபைக்கு அனுப்பிவைக்கப்படவில்லை என்றால் நாம் இந்த அரிய வாய்ப்பை இழந்தவர்களாக ஆகிவிடுவோம். நமது முன்னேற்றக் கடிகாரத்தின் முள் இருபது ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளி வைக்கப்படும். கடந்த மூன்று ஆண்டுகாலப் பணி வீணாகிவிடும். எனவே நண்பர்களே, கிராமங்களுக்குப் போய் நமது வாக்கின் அருமையை எடுத்துச் சொல்லுங்கள். பிராமணர் அல்லாதோர்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். பிராமண அதிகாரி, புரோகிதன், வக்கீல் ஆகியோரின் தீங்கு பயக்கும் பின்விளைவுகளில் இருந்து ரகசிய ஓட்டுமுறை அவர்களைக் காப்பாற்றும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள் என்று பிரசாரம் செய்தார் கே.வி. ரெட்டி நாயுடு.

தேர்தலின்போது நீதிக்கட்சி கொடுத்த வாக்குறுதிகள் முக்கியமானவை.

அரசுப் பணிகள் அனைத்திலும் பிராமணர் அல்லாதார்க்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க சட்டமும் விதிகளும் இயற்றப்படும்.

கோயில் சொத்துகளைத் தனியார் கொள்ளையிடுவதில் இருந்து காப்பாற்ற சட்டம் கொண்டு வரப்படும்.

அனைத்து உள்ளாட்சித் துறைகளுக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கப்படும்.

விவசாய வளர்ச்சிக்கும் விவசாயிகளின் நலன்களுக்கும் உடனடித் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

முதல் வெற்றி

30 நவம்பர் 1920 அன்று தேர்தல் நடைபெற்றது. வன்முறைச் சம்பவங்கள், கலகங்கள், தகராறுகள் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தன. இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது பிராமணர் அல்லாத வேட்பாளர் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியிருந்தனர். ஆம். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 98 இடங்களில் நீதிக்கட்சிக்கு 63 இடங்கள் கிடைத்திருந்தன.

சென்னை தொகுதியில் நீதிக்கட்சி சார்பில் பிட்டி. தியாகராய செட்டியார், டாக்டர். சி. நடேச முதலியார், ஓ. தணிகாசலம் செட்டியார், வி. திருமலைப் பிள்ளை ஆகிய நால்வர் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து ஹோம் ரூல் சார்பில் சி.பி. ராமசாமி அய்யர், டாக்டர் யூ. ராமாராவ், சல்லா குருசாமி செட்டியார், எம். விஜயராகவலு ஆகியோர் நிறுத்தப்பட்டனர். கே. வியாசராவ் என்ற சுயேட்சை வேட்பாளரும் களத்தில் இருந்தார்.

வாக்கு எண்ணிக்கை விவரம்:

1. பிட்டி. தியாகராய செட்டியார் 4996

2. சி.பி. ராமசாமி அய்யர் 4933

3. டாக்டர் யூ. ராமாராவ் 4408

4. ஓ. தணிகாசலம் செட்டியார் 4127

5. டாக்டர் சி. நடேச முதலியார் 3311

6. வி. திருமலைப் பிள்ளை 3236

7. சல்லா குருசாமி செட்டியார் 2982

8. எம். விஜயராகவலு 1135

9. கே. வியாசராவ் 581

ஆக, அதிக வாக்குகள் பெற்ற பிராமணர் அல்லாத வேட்பாளர்களான பிட்டி. தியாகராய செட்டியாரும் ஓ. தணிகாசலம் செட்டியாரும் முதல் இரண்டு தனி இடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். இவர்களைத் தவிர்த்த மற்ற வேட்பாளர்களின் அதிக இடங்களைப் பெற்ற சி.பி. ராமசாமி அய்யரும் டாக்டர் யூ. ராமாராவும் அடுத்த இரண்டு பொது இடங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவரான டாக்டர் சி. நடேச முதலியார் சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்படாதது சோகம் என்றால் நீதிக்கட்சித் தலைவர்களுக்கு இடையே நிலவிய பிணக்குகள்தான் தோல்விக்குக் காரணம் என்பது மிகப்பெரிய சோகம்.

மதுரையில் இருந்து பி.டி. ராசன், சி. பொன்னுசாமி நாயுடு, கே.பி. கோபால மேனன் ஆகிய மூவரும் வெற்றி பெற்றனர். தென்னார்க்காடு மாவட்டத்தில் இருந்து ஏ. சுப்பராயலு ரெட்டியார் வெற்றி பெற்றிருந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் பெயரளவில் புறக்கணித்த தேர்தல் இது. ஆனால் ஹோம் ரூல் இயக்கத்தினராலும் சுயேட்சைகளாலும் அனைத்து தொகுதிகளிலும் கடுமையான போட்டியை எதிர்கொண்டது நீதிக்கட்சி. இறுதி வெற்றி நீதிக்கட்சிக்குத்தான்! 4 டிசம்பர் 1920 அன்று சென்னை மாகாண அரசை நீதிக்கட்சி கைப்பற்றியது.

பிராமணர் அல்லாதார் உரிமைக்குரல் மட்டுமே தேர்தல் பிரச்னையாகப் பார்க்கப்பட்ட இந்தத் தேர்தலில் பிராமணர் அல்லாத மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த நீதிக்கட்சி வெற்றி பெற்றது.

சென்னை மாகாண கவர்னராக இருந்த வெல்லிங்டன் பிரபு நீதிக்கட்சியின் தலைவரான பிட்டி. தியாகராய செட்டியாரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். (நீதிக்கட்சிக்கு நியமன உறுப்பினர்கள் 18 பேரின் ஆதரவும் இருந்தது) கவர்னரின் அழைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்த தியாகராயர், தனக்குப் பதிலாகக் கடலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ. சுப்பராயலு ரெட்டியார் முதல் அமைச்சராகப் பதவியேற்றுக் கொள்வார் என்று அறிவித்தார். அதைக் கடிதம் மூலமாக வெலிங்டன் பிரபுவுக்கும் தெரிவித்தார்.

ஏ. சுப்பராயலு ரெட்டியார் முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். ராமராய நிங்கார் இரண்டாவது அமைச்சராகவும் கே. வேங்கட்ட ரெட்டி நாயுடு (கே.வி. ரெட்டி நாயுடு) மூன்றாவது அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். ராமராய நிங்காருக்குத் தொழில்துறையும் கே.வி. ரெட்டி நாயுடுவுக்குக் கல்வித்துறையும் தரப்பட்டன. முதல் அமைச்சர் வசம் கல்வி, பொதுப்பணி, ஆயத்தீர்வை, பதிவு ஆகிய துறைகள் இருந்தன.

மாகாண சட்டசபையை நடத்துவதற்காக பி. ராஜகோபாலாச்சாரியை நியமித்தார் வெலிங்டன் பிரபு. அவர்தான் சட்டமன்றத்தின் தலைவர். சர். சி.பி. ராமசாமி அய்யர் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். சட்டமன்றத் துணைத் தலைவர் பொறுப்பு கூட்டி கேசவப் பிள்ளை வசம் வந்தது. ஆர்.கே. சண்முகம் செட்டியார், ஏ. ராமசாமி முதலியார், பாரிஸ்டர் தங்கவேலு ஆகிய மூவரும் அமைச்சரவைக் குழுவின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆக, 17 டிசம்பர் 1920 அன்று சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சி அமைத்தது.

திராவிட இயக்க வரலாறு (இரண்டு பாகங்கள்), ஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 400 ரூ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+