For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெஸ்டன் தீர்ப்பு

By Chakra
Google Oneindia Tamil News

நாயரின் மறைவால் உறைந்து போயிருந்த நீதிக்கட்சித் தலைவர்கள் சுதாரித்து எழுவதற்குச் சிலகாலம் பிடித்தது. கூட்டுப் பொறுக்குக் குழுவிடம் நாயர் கொடுக்க வேண்டிய அறிக்கை அப்படியே இருந்தது. அதை நாயருக்குப் பதிலாக மற்ற பிரதிநிதிகள் கூட்டுப் பொறுக்குக் குழுவின் தலைவர் செல்போர்ன் பிரபுவிடம் கொடுத்தனர்.

அந்த அறிக்கையின் சாரம் இதுதான்.

பிராமணர்கள் தாங்கள் ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வைக் கொண்டிருப்பது போலவே பிராமணர் அல்லாத மக்கள் அனைவரும் தாங்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பெருமித உணர்வோடு வாழ்ந்து வருகின்றனர். இரு இனத்தவர்களும் ஒரே விதமான இந்து சமய நெறிக் கோட்பாடுகளைப் பின்பற்றி வருகிறார்கள் என்பதைத் தவிர, மற்றபடி எண்ணம், செயல், போக்கு, நடைமுறைப் பழக்க வழக்கம் ஆகியவற்றில் தனித்தனித்தன்மை உடையவர்களாகவே இருக்கிறார்கள். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அடிப்படையில் சட்டமன்றப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை, அரசியல் சீர்திருத்தம் மூலம் அளித்து, சமூகநீதி நிலவிட வழிவகுக்க வேண்டும் என்பதுதான் பிராமணர் அல்லாத மக்களின் கோரிக்கை.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறைக்கு அரசியல் சீர்திருத்தத்தில் வழி செய்யாவிட்டால் தேர்தலில் எல்லாத் தொகுதிகளையும் ஆதிக்க அதிகாரம் கொண்ட பிராமணத் தலைவர்களே கைப்பற்றிக் கொள்வதற்கான நிலைமை ஏற்பட்டுவிடும். அரசுப் பதவிகள் அனைத்திலும் பிராமணர்களே முழு ஆதிக்கம் செலுத்தும் தன்மை உருவாகிவிடும். அதன் காரணமாக, அரசாட்சி ஆதிக்கம் முழுவதும் பிராமணர்களின் கைகளுக்குப் போய்விடும். பிராமண ஆதிக்கம் ஏற்பட்டுவிட்டது என்ற நிலைதான் இறுதியில் ஏற்படும்.

மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கையின்படியான அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுமேயானால் பிராமணர் அல்லாத மக்கள் ஆடுமாடுகளைப் போல் ஒரு எஜமானரிடம் இருந்து இன்னொரு எஜமானருக்கு விற்கப்படும் நிலைக்குத்தான் ஆளாகிவிடுவார்கள். இந்தியாவில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் சிறுபான்மைச் சமூகத்தினரான பிராமணர்கள் பெரும்பான்மைச் சமூகத்தினரான பிராமணர் அல்லாதார் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டால், எதிர்காலத்தில் எங்கு பார்த்தாலும் சட்டம் ஒழுங்கு கெட்டு, ரத்தக்களறிகள் ஏற்பட்டு விடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்திய மக்களிடையே அமைதி, மன நிறைவு, நீதி ஆகியவை ஏற்படத்தக்க வகையில் புதிய அரசியல் சீர்திருத்தம் உருவாக்கப்பட வேண்டும். இதுதான் அந்த அறிக்கையின் இறுதிப்பகுதி.

பிரிட்டிஷார் என்னதான் நல்லாட்சி நடத்தினாலும் அது எவ்வாறு இந்தியர்கள் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் சுயாட்சிக்குத் தகுந்த மாற்றாகாதோ அதைப்போலவே பிராமணர்கள் என்னதான் நல்லாட்சி கொடுத்தாலும் அது பிராமணர் அல்லாதாரின் சுயாட்சிக்குத் தகுந்த மாற்றாகாது என்பதுதான் கே.வி.ரெட்டி நாயுடு வலியுறுத்திச் சொன்ன கருத்து.

சென்னை திராவிட சங்கத்தின் சார்பாக வந்திருந்த ஏ. ராமசாமி முதலியார், ‘நாங்கள் கோரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை எப்போதுமே நீடித்து வரவேண்டி இருக்காது என்பது என்னுடைய சொந்தக் கருத்து. இடைப்பட்ட காலத்துக்குள் பிராமணர் அல்லாதார் தங்கள் வகுப்புநலனைப் பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு அரசியல் அறிவும் ஆற்றலும் பெற்று விடுவார்கள். பிராமணர் ஆதிக்கம் பற்றி இனியும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற நம்பிக்கையையும் அவர்கள் அடைந்துவிடுவார்கள். ஆகவே, இந்தக் கூட்டுப் பொறுக்குக் குழுவினர் நாங்கள் இப்போது கோரிடும் வகுப்புரிமைக் கோரிக்கையில் உள்ள உண்மையையும் அவசியத்தையும் உணர்ந்து, அந்த உரிமையை அளிக்கத் தயங்கக்கூடாது.’ என்றார்.

இவர்களுடைய சாட்சியங்களை முழுமையாகப் பெற்றுக்கொண்டாலும்கூட மேலும் சில பிராமணர் அல்லாத தலைவர்களின் சாட்சியங்களை நேரக்குறைவைக் காரணம் காட்டி பதிவு செய்ய மறுத்தது லேசான சலசலப்பை ஏற்படுத்தியது. நிலைமையை உணர்ந்துகொண்ட மாண்டேகு நீதிக்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசினார். சமரசத் திட்டங்களைத் தயார் செய்து வைத்திருந்தார். பேச்சுவார்த்தையின் போக்கைப் பொறுத்து ஒவ்வொன்றாக எடுத்து வைக்கலாம் என்பது மாண்டேகுவின் திட்டம்.

சென்னை மாகாண சட்டசபையில் ஆறு சிறப்புத் தொகுதிகளை பிராமணர் அல்லாதாருக்கு ஒதுக்குகிறேன் என்றார் மாண்டேகு. 97 சதவீதம் உள்ள பிராமணர் அல்லாத மக்களுக்கு இந்த எண்ணிக்கை வெகு சொற்பம். உடனடியாக அந்த வாய்ப்பை நிராகரித்தனர் நீதிக்கட்சித் தலைவர்கள். அடுத்து, இரட்டை உறுப்பினர் தொகுதிகளில் முப்பது தொகுதிகளைப் பிராமணர் அல்லாத மக்களுக்கு ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார் மாண்டேகு. ஆனால் அதிலும் நீதிக்கட்சியினர் சமாதானம் அடையவில்லை.

மாண்டேகுவின் முகம் சுருங்கத் தொடங்கியது. பிராமணத் தலைவர்கள் பிராமணர் அல்லாத தலைவர்கள் அமர்ந்து பேசி முடிவுக்கு வாருங்கள். பிரச்னை சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும். எனக்கு வேண்டியது அதுதான். புறப்பட்டு விட்டார் மாண்டேகு. பேச்சுவார்த்தைகள் தொடங்கின. வாதத்திறமையில் யார் வல்லவர்கள் என்பதற்கான போட்டி போல இருந்தது பேச்சுவார்த்தை. முடிவு எதுவும் எடுக்கப்படாமலேயே பேச்சுவார்த்தை முடிந்துபோனது.

தலைவர்களின் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் பணிகள் முடிந்ததும் 17 நவம்பர் 1919 அன்று கூட்டுப் பொறுக்குக்குழு தன்னுடைய இறுதி அறிக்கையை வெளியிட்டது.

‘சென்னை மாகாணத்துப் பிராமணர் அல்லாதாருக்குச் சில இடங்களை ஒதுக்கீடு செய்வதன் மூலம் தனிப் பிரதிநிதித்துவம் தரவேண்டும். பிராமணரும் பிராமணர் அல்லாதாரும் இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு காண அழைக்கப்பட வேண்டும். இந்த விதத்தில் அவர்களிடையே ஒருமித்த கருத்து உருவாகாவிட்டால் இந்திய அரசு ஒரு நடுவரை (ஆர்பிட்ரேட்டர்) நியமித்துத் தீர்ப்பு பெறவேண்டும்’

கூட்டுப் பொறுக்குக் குழுவின் இறுதி அறிக்கையை நீதிக்கட்சி கடுமையாக எதிர்த்தது. ஆனாலும் பிராமணர் அல்லாதார்க்கு சட்டமன்றத்தில் தனிப்பிரதிநிதித்துவம் என்பதைக் கொள்கை அளவில் சாதித்த மகிழ்ச்சி மட்டுமே மிச்சமிருந்தது.

பிரச்னை தீர்ந்தபாடில்லை. பஞ்சாயத்து முடிந்தபாடில்லை. இன்னொரு முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்தார் சென்னை ஆளுநர் வெல்லிங்டன் பிரபு. 13 ஜனவரி 1920. சென்னை மாகாணத்தைச் சேர்ந்த பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாத தலைவர்களின் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். கூட்டுப்பொறுக்குக்குழுவின் அறிக்கையை பிராமணர் அல்லாதவர்கள் ஏற்கவேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். இப்படிச் சொன்னதற்குப் பின்னணியில் இருந்தது சமீபத்தில் நடந்துமுடிந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் வந்திருந்த முடிவுகளும் அதில் பிராமணர் அல்லாத உறுப்பினர்களுக்குக் கிடைத்த வெற்றிகளும்தான்.

அப்படி என்ன பெரிதாக வெற்றிபெற்றுவிட்டார்கள் பிராமணர் அல்லாதவர்கள்?

மொத்தம் முப்பது இடங்களுக்கு நடைபெற்ற தேர்தல் அது. வெற்றிபெற்றவர்களில் பத்தொன்பது பேர் பிராமணர் அல்லாத இந்துக்கள். ஏழு பேர் பிராமணர்கள். கிறித்தவர்கள், முஸ்லிம்கள் தலா இரண்டு பேர். பிராமணர் அல்லாத மக்கள் இத்தனை பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்போது எதற்காக அவர்கள் தனித்தொகுதி கோரவேண்டும், எதற்காகக் கொடுக்கவேண்டும் என்பதுதான் வெல்லிங்டன் எழுப்பிய கேள்விகள். ஆனால் நீதிக்கட்சித் தலைவர்கள் வெலிங்டனின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். கூட்டம் தோல்வியில் முடிந்தது.

பிறகு ஜனவரி மாத இறுதியில் மீண்டும் ஒருமுறை இருதரப்புத் தலைவர்களையும் அழைத்துப் பேசினார். பிராமணர்களின் பிரதிநிதியாக சி.பி. ராமசாமி அய்யர் மற்றும் ராமச்சந்திர ராவ் இருவரும் கலந்துகொண்டனர். பிராமணர் அல்லாதார் சார்பில் பிட்டி. தியாகராயரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் கலந்துகொண்டனர்.

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் பிராமணர் அல்லாதார் எந்த அளவு இருக்கிறார்களோ அந்த விகிதாச்சாரத்துக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கென்று தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது நீதிக்கட்சித் தலைவர் பிட்டி. தியாகராயரின் வாதம். எட்டு பேருக்கு ஒருவராக இருக்கும் பிராமணர்களுக்கு மொத்தமுள்ள 63 சட்டமன்றத் தொகுதிகளில் ஏழு இடங்கள் மட்டுமே பிராமணர்களுக்கு மிஞ்சும். சி.பி. ராமசாமி அய்யருக்கு இந்தமாதிரியான கணக்குகள் எதுவும் பிடிக்கவில்லை. வாக்காளர் எண்ணிக்கை, மக்கள்தொகை எண்ணிக்கை எல்லாம் ஒத்துவராது, வேண்டுமானால் ஒரு குறைந்தபட்ச அளவு இடங்களை மட்டும் பிராமணர் அல்லாத மக்களுக்கு ஒதுக்கலாம் என்றார்.

வெலிங்டன் பிரபு மொத்தமுள்ள 63 இடங்களில் 31 இடங்களை பிராமணர் அல்லாத மக்களுக்கு ஒதுக்க முன்வந்தார். பிட்டி. தியாகராய செட்டியாரோ எழுபத்தைந்து சதவீதத்தில் உறுதியாக இருந்தார். அதற்கு வெலிங்டன் பிரபு சம்மதிக்கவில்லை. பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது. இனியும் தன்னால் பஞ்சாயத்து பேசிக்கொண்டிருக்க முடியாது. உடனடியாக நடுவர் ஒருவரைக் கொண்டு ஏதேனும் ஒரு முடிவுக்கு வருவதுதான் சரியாக இருக்கும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிவிட்டார் வெலிங்டன் பிரபு.

லார்டு மெஸ்டன். புதிய பஞ்சாயத்து தலைவர். அதாவது, ஆர்பிட்ரேட்டர். இனி இவர்தான் பிரச்னையை விசாரித்துத் தீர்க்கப் போகிறார் என்று அறிவித்தது பிரிட்டிஷ் அரசு.

1 மார்ச் 1920 அன்று மெஸ்டன் குழுவினரின் முன்னால் இருதரப்புப் பிரதிநிதிகளும் ஆஜராகினர்.

பிராமணர் அல்லாத மக்களின் பிரதிநிதிகளாக பிட்டி. தியாகராயர், ஏ. ராமசாமி முதலியார், எல்.கே. துளசிராம் ஆகியோர் வந்திருந்தனர். பி.கேசவப் பிள்ளை, சக்கரைச் செட்டியார், லாட் கோவிந்த தாஸ் ஆகியோர் சென்னை மாகாணச் சங்கத்தின் சார்பில் வந்திருந்தனர். பிராமணர்கள் சார்பாக சி.பி. ராமசாமி அய்யர், டி.பி. ராமச்சந்திர அய்யர், பி.வி. நரசிம்ம அய்யர், கே. ராம அய்யங்கார், பி. நாராயண மூர்த்தி, ராமச்சந்திர ராவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இருதரப்பைச் சேர்ந்தவர்களிடமும் தனித்தனியாகக் கருத்துகளைக் கேட்டார் லார்ட் மெஸ்டன். மொத்தமுள்ள 66 தொகுதிகளில் 42 தொகுதிகளை பிராமணர் அல்லாத மக்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது நீதிக்கட்சி முன்வைத்த கோரிக்கை. அதையே சென்னை மாகாணச் சங்கமும் வலியுறுத்தியது. திடீரென நீதிக்கட்சியும் சென்னை மாகாணச் சங்கமும் ஓரணியில் திரண்டது மற்ற பிராமணத் தலைவர்களை ஆச்சரியப்படுத்தியது.

நாங்களே சிறுபான்மையினர். எங்களுக்குத்தான் தனித்தொகுதி என்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. 65 தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் அவற்றில் 25 தொகுதிகள் மட்டுமே பிராமணர் அல்லாத மக்களுக்கு ஒதுக்கவேண்டும் என்பது பிராமணத் தலைவர்களின் வாதம். அதேசமயம் பிராமணர் அல்லாத மக்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்கப்படுவதையும் கடுமையாக எதிர்த்தனர்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார் லார்ட் மெஸ்டன். பிறகு 18 மார்ச் 1920 அன்று தீர்ப்பை எழுதினார்.

‘மொத்தமுள்ள 65 பொதுத் தொகுதிகளில் 28 தொகுதிகள் பிராமணர் அல்லாத மக்களுக்கு ஒதுக்கப்படும்.’

பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள் என்ற இருதரப்பு வாதங்களையும் பெயரளவில் மட்டுமே கேட்டு, பிராமணர்களின் கோரிக்கைக்கு மட்டுமே ஏற்றுக்கொண்டிருக்கிறார் மெஸ்டன் என்பது அவரது தீர்ப்பில் இருந்தும் அதற்காக அவர் அளித்த விளக்கங்களில் இருந்தும் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. அந்த விளக்கம் இதுதான்:

தேர்தலில் பிராமணர் அல்லாதார் தங்களுக்குப் பாதுகாப்பு கேட்பதன் காரணம் சிறுபான்மை இனத்தவரான பிராமணர்களுக்கு சமூகத்தில் இருக்கும் ஆதிக்கத்தாலும் தேர்தல் தந்திர உத்திகளாலும் தேர்தலில் மைனாரிட்டி ஆகிவிடுவோம் என்று அச்சப்படுவதுதான். ஆனால் வாக்காளர் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்த்தால் பிராமணர், பிராமணர் அல்லாதார் சதவீதம் 1: 8 என்ற விகிதத்தில் இருக்கிறது. இத்தனை பெரிய வித்தியாசம் இருப்பதால் பிராமணர் அல்லாத மக்களுக்கு சட்டமன்றத்தில் நிரந்தரமாகத் தனிப் பெரும்பான்மை கிடைக்க வழிசெய்யும் வகையில் தனித்தொகுதி ஒதுக்கத் தேவையில்லை. தனிப்பெரும்பான்மை கிடைப்பதற்குத் தேவையான அளவைவிடக் குறைந்த அளவு இடங்களை ஒதுக்கினால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணம் பிராமணர் அல்லாத மக்களுக்கு ஏற்படும். இதுதான் மெஸ்டன் கொடுத்த விளக்கம்.

கனவு கலைந்தது போல இருந்தது நீதிக்கட்சியினருக்கு. உண்மையிலேயே மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்தனர் பிராமணர் அல்லாத தலைவர்கள். மெஸ்டனின் தீர்ப்பு பிராமணர்களுக்கு சாமரம் வீசும் தீர்ப்பு என்று விமரிசனம் செய்யப்பட்டது.

மெஸ்டன் தீர்ப்புக்குப் பிறகு சென்னை மாகாண சட்டசபைக்குத் தேர்தல் நடத்துவதற்கான வேலைகள் தொடங்கின. தேர்தல் வேலைகளைச் செய்துமுடிக்கும் பொறுப்பு ஏ.ஆர். நாப் (A.R. Knapp) என்ற தலைமைச் செயலக உறுப்பினர் வசம் தரப்பட்டது. மாகாண சட்டசபையின் ஆயுள்காலம் மூன்று ஆண்டுகள். கவர்னர் விரும்பினால் ஆயுள்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு செய்யலாம். அதேசமயம் மூன்று ஆண்டுகளுக்குள் சட்டசபையைக் கலைக்கும் உரிமையும் கவர்னருக்கு உண்டு.

முதல்கட்டமாக சட்டமன்றத்துக்கான உறுப்பினர் எண்ணிக்கை எத்தனை இருக்கவேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் 65 தொகுதிகளுக்கும் முகமதியர் அல்லாத தொகுதிகள் என்று புதிய பெயர் வைக்கப்பட்டது. முதலில் பிராமணர் அல்லாதாருக்கான தனித்தொகுதிகள் என்றுதான் பெயர் இருந்தது. ஆனால் அதை சிலருடைய தலையீட்டின்கீழ் முகமதியர் அல்லாத தொகுதிகள் என்று மாற்றிவிட்டதாக ஒரு செய்தி இருக்கிறது.

இவைதவிர, முஸ்லிம்களுக்கு 13, இந்திய கிறித்தவர்களுக்கு 5, ஐரோப்பியர்களுக்கு 1, ஆங்கிலோ இந்தியர்களுக்கு 1, ஜமீன்தார்களுக்கு 6, ஐரோப்பிய வர்த்தகக் கழகத்துக்கு 4, இந்திய வர்த்தகக் கழகத்துக்கு 2, பல்கலைக் கழகத்துக்கு 1 என்ற அளவில் தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலே இருக்கும் 33 இடங்களும் தேர்தல் மூலமே நிரப்பப்படும். இவைதவிர, அதிகாரிகள் 7, தாழ்த்தப்பட்டோர் 10, விடுபட்ட பிரிவினர் 12 ஆகியோர் நியமனம் செய்யப்படுவார்கள். ஆக, சென்னை மாகாண சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 127.

தொகுதிகள் தயார். நல்லது. வாக்காளர்கள்? சொத்து இருப்பவர்கள், வரி செலுத்துபவர்கள், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் ஆகியோர் மட்டுமே தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். பத்து ரூபாயை நிலவரியாகக் கட்டுபவர்களுக்கு கிராமப் புறங்களில் வாக்களிக்கும் உரிமை உண்டு. நகராட்சிக்கு மூன்று ரூபாயை வரியாகச் செலுத்துபவர்கள் நகர்ப்புறங்களில் வாக்களிக்க முடியும். ஆக, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை பன்னிரண்டரை லட்சம்.

பெண்களுக்கு வாக்களிக்கத் தகுதியில்லை என்பது அதிர்ச்சி தரும் அறிவிப்பு. வேண்டுமானால் தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய சட்டமன்றம் பெண்களுக்கான வாக்குரிமை குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. பெண்கள் தவிர, பிரிட்டிஷ் குடியுரிமை பெறாதவர்கள், 21 வயதுக்குக் கீழே இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரும் தேர்தலில் வாக்களிக்க முடியாது.

1920 செப்டெம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதில் கலந்துகொள்ள நீதிக்கட்சி தயாராகிவிட்டது. அந்தச் சமயத்தில் இந்தியாவின் மிகப்பெரிய தேசிய இயக்கமான இந்திய தேசிய காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தது?
-தொடரும்...

திராவிட இயக்க வரலாறு (இரண்டு பாகங்கள்), ஆர்.முத்துக்குமார், கிழக்கு பதிப்பகம், விலை 400 ரூ.

English summary
Dravida iyakka varalaaru wrote by R.Muthukumar and published by New Horizon media dwells in the history of Dravidian movement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X