"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!
திருச்சி: முதல்வர் விஜய்யின் பெயரை சொல்லக் கூடாது என்று துணை சபாநாயகர் பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையாகி இருக்கிறது. அதற்கு பத்திரிகையாளர்கள் கட்சியினர் விஜய்யின் பெயரை சொல்லாமல் இருப்பது உங்கள் உரிமை, நாங்கள் பெயரை சொல்லலாம் என்று பதில் அளித்துள்ளனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் நாளை வரவிருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தவெகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை விஜய் ரோடு ஷோ பாணியிலேயே பெரும்பாலான பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ள சூழலில், இம்முறை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.

ஆளுங்கட்சியாக விஜய் பங்கேற்கும் முதல் கட்சி நிகழ்ச்சி என்பதால், தவெகவினர் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் கவனித்து வருகின்றனர். இதனையொட்டி கு.ப.கிருஷ்ணன் மற்றும் ரவிசங்கர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் இடத்தில் உங்களை வைத்து பார்க்கிறார்களே.. என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு குப கிருஷ்ணன், எங்கள் தளபதிக்கு நிகராக மூவுலகிலும் ஆட்கள் கிடையாது என்றார். அப்போது ரவி சங்கர் குறுக்கிட்டு, விஜய்னு பெயரை சொல்ல வேண்டாம்.. முதல்வர் அல்லது சிஎம் என்று சொல்லுங்கள் என்றார்.
அதற்கு பத்திரிகையாளர்கள், நாங்கள் விஜய்னு பெயரை சொல்லலாம். நீங்கள் தான் சொல்லக் கூடாது என்று பதில் அளித்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. "திமுக, அதிமுக போன்ற பாரம்பரியக் கட்சிகளிலேயே கூட ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கலைஞர், ஜெயலலிதா எனத் தலைவர்களின் பெயர்களைப் பத்திரிகையாளர்கள் வெளிப்படையாகக் குறிப்பிட்டுத்தான் கேள்வி கேட்பார்கள்.
தவெக இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளது. அதற்குள்ளாகவே கட்சியின் தலைவரைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது என ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பது அநாகரீகமானது" என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தவெக நிர்வாகியின் செயலை விமர்சித்து வருகின்றனர். திராவிடக் கட்சிகளின் கலாச்சாரத்தை எதிர்க்கப் போவதாகக் கூறி வந்த தவெக-வினர், தற்போது அதே 'அதிதீவிர தலைவர் பக்தி' கலாச்சாரத்திற்குள் சிக்கியிருப்பதை இந்தச் சம்பவம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


Click it and Unblock the Notifications
