அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை!
சென்னை: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் நிதின் நபின் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களுடன் நடத்திய சந்திப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசி, பாஜகவில் இருந்து விலகும் முடிவை அண்ணாமலை நேரடியாகவே தெரிவித்து விட்டார் என்கின்றார். அப்போது இரு பெண் தலைவர்கள், ஒரு முன்னாள் தலைவர், ஒரு முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட 5 பேர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வாரங்களாக அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல்கள் அரசியல் களத்தில் பரவி வருகின்றன. இதுகுறித்து நேரடியாக விளக்கம் அளிக்காமல் இருந்து வந்தார் அண்ணாமலை.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள். விரிவாக பேசுகிறேன்" என்று கூறியிருந்தார். அந்த பதில் அரசியல் ஆர்வலர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லி சென்ற அண்ணாமலை, முதலில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்தார்.

அண்ணாமலை
அதன்பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதோடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்புகளின் போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல், பாஜகவின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.
டெல்லி பயணம்
குறிப்பாக கட்சியில் தன்னை புறக்கணித்ததாக அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை, தனது அரசு பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதித்தார். பாஜகவில் இணைந்த குறுகிய காலத்திலேயே தமிழக பாஜக தலைவராக உயர்ந்த அவர், கட்சியின் முகமாக மாறினார். 'என் மண் என் மக்கள்' நடைபயணம், திமுக அரசுக்கு எதிரான தொடர் விமர்சனங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து எழுப்பிய கேள்விகள் என பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அவர் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றார்.
பாஜக
குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு தனித்த ஆதரவு உருவானது. 2024 மக்களவைத் தேர்தலில் தனி அணி அமைத்து போட்டியிட்ட பாஜக இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை பெற்றது. இதற்கு அண்ணாமலையின் தலைமையே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அதிமுக கூட்டணி அரசியல் காரணங்களால் அவர் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.
அண்ணாமலை ஆதரவாளர்கள்
மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு அண்ணாமலைக்கு கட்சியிலோ அல்லது மத்திய அரசிலோ எந்த முக்கிய பொறுப்பும் வழங்கப்படவில்லை. தேசிய அளவிலான பொறுப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடம் இருந்தது. ஆனால் அதுபோன்ற அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு மாறாக அண்ணாமலை கருத்து தெரிவித்ததும் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.
புதிய அரசியல் கட்சி
இதற்கிடையில் கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் "தலைவா வா! தரணி ஆள வா!" என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இது புதிய அரசியல் கட்சி குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அண்ணாமலை ஜூன் 4-ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு வெளியிடலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. ஆன்மிகம் மற்றும் தேசியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு புதிய அரசியல் இயக்கம் அல்லது கட்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
பாஜக மேலிடம்
மறுபுறம், அண்ணாமலையை கட்சியில் தக்க வைக்க பாஜக மேலிடம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்குவது, மாநிலங்களவை வாய்ப்பு ஏற்படுத்துவது அல்லது தேசிய அளவிலான பொறுப்பை வழங்குவது போன்ற பல்வேறு விருப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
டெல்லி சந்திப்பு
எனினும், அண்ணாமலை தனது அரசியல் எதிர்காலம் குறித்து எந்த முடிவை எடுத்துள்ளார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. டெல்லி சந்திப்புகளுக்குப் பிறகு அவர் வெளியிட உள்ள அறிவிப்பு தமிழக அரசியலில் அடுத்த பெரிய திருப்பமாக அமையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக பாஜகவிலேயே தொடர்வாரா? அல்லது தனிக்கட்சி அறிவிப்பாரா? என்பது வரும் நாட்களில் தெரியவரும்.
அமித் ஷா
இந்த நிலையில் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிய அண்ணாமலை சில முக்கிய தகவல்களை அவரிடம் பகிர்ந்து கொண்டதாக சொல்கின்றன பாஜக வட்டாரங்கள். இரு பெண் தலைவர்கள், ஒரு முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட ஐந்து பேர் பாஜகவின் முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும், அதே நேரத்தில் திமுக அதிமுகவுடன் ரகசிய கூட்டணி வைத்துக்கொண்டு தமிழக பாஜகவை வளர விடாமல் செய்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார் அண்ணாமலை.
பாஜக தலைவர்கள்
அது மட்டுமல்லாமல் கடந்த பல தேர்தல்களில் தன்னையும் மீறி வேட்பாளர்கள் தேர்வில் அவர்கள் தலையிட்டதாகவும், அதனால் தான் பல தேர்தல்களில் பாஜக மண்ணைக் கவ்வ நேரிட்டது என குற்றச்சாட்டுகளை அடுக்கியதாக சொல்கின்றனர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள். இதையெல்லாம் பொறுமையாக கேட்ட அமித் ஷா சற்று பொறுங்கள் எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் என அண்ணாமலையை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளதாக சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications