ரூ.17,200 கோடியில் புது நிறுவனத்தை வாங்கிய ஆதித்யா பிர்லா குழுமம்.. கிரீன் எனர்ஜி துறையில் மைல்கல்
நம் நாட்டின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றாக ஆதித்ய பிர்லா குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் 'கிரீன் எனர்ஜி' துறையில் இயங்கி வரும் 'ஸ்பிரிங் எனர்ஜி' எனும் நிறுவனத்தை ரூ.17,200 கோடியில் ஆதித்யா பிர்லா குழுமம் வாங்கி உள்ளது.
இந்த 'ஸ்பிரிங் எனர்ஜி' நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு முதல் ஷெல் நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஆதித்ய பிர்லா குழுமம் கையகப்படுத்தி உள்ளது. இந்த 'ஸ்பிரிங் எனர்ஜி' நிறுவனத்தை அதன் கடன் உள்பட 1.8 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,200 கோடி) செலுத்தி ஆதித்யா பிர்லா குழுமம் வாங்கி உள்ளது.

இது ஆதித்ய பிர்லா குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தனது கரத்தை விரிவுப்படுத்துவதற்கான புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி நம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் 'கிரீன் எனர்ஜி' துறையில் தன்னை வலுப்படுத்த ஆதித்ய பிர்லா குழுமம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
ஆதித்யா பிர்லா குழுமம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் 20 ஜிகாவாட் எரிசக்தி திறனை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து செயல்பட்டு வருகிறது. தற்போது அதற்கான இலக்கை நோக்கி அந்த குழுமம் சென்றுள்ளது. அதாவது இந்த 'ஸ்ப்ரிங் எனர்ஜி' நிறுவனத்தை தன்வசப்படுத்தியதன் மூலமாக ஆதித்யா பிர்லா ரினியூவபிள்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் கிட்டத்தட்ட 9.4 ஜிகாவாட்டாக உயரும். இது அதன் தற்போதைய திறனை விட சுமார் இரு மடங்காகும். ஸ்ப்ரிங் எனர்ஜி பல மாநிலங்களில் இருந்து சூரியஒளி மற்றும் காற்று மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
மேலும் புதிய திட்டங்கள் மற்றும் வியூகங்கள் வாயிலாக புதிய நிறுவனங்களை வாங்குவது உள்ளிட்டவற்றின் மூலமாக எளிதாக 20 ஜிகாவாட் எரிசக்தி திறனை அடைய முடியும். இந்த நடவடிக்கை என்பது நம் நாட்டில் மின்சார தேவையில் மாற்று வழியை நோக்கி செல்வதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் புதிய நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருவதற்கும் உதவும். அதுமட்டுமின்றி இது நம் நாட்டின் தொழில்துறை மற்றும் வணிகர்களுக்கு 'கிரீன் எனர்ஜி' துறையில் இருந்து மின்சாரம் வழங்கப்படுவதை பூர்த்தி செய்து வருங்காலத்தில் மேம்படுத்தும்.
குறிப்பாக வரும் 2030ம் ஆண்டிற்குள் Non Fossil எரிசக்தி திறனில் 500 ஜிகாவாட் அளவை எட்ட வேண்டும் என்று இந்தியா செயல்பட்டு வருகிறது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை நம் நாடு மேற்கொண்டு வருகிறது. இப்படியான சூழலில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் இத்தகைய செயல் அதற்கு வலுசேர்க்கும் வகையில் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த துறையில் முதலீடுகளை ஊக்குவிக்கவும், புதிய திட்டங்களை செயல்படுத்துவதை மேம்படுத்தவும் செய்யும்.
அதுமட்டுமின்றி பிற தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளை பெற்றவும் நம் நாட்டில் ஆதித்யா பிர்லா குழுமம் இந்தியாவின் முன்னணி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறுகையில், ''ஸ்பிரிங் எனர்ஜி நிறுவனத்தை கையகப்படுத்தியது என்பது முக்கிய மைல்கல்லாகும். இந்தியாவின் எரிசக்தி தேவையை புதுப்பிக்கத்தக்க எனர்ஜி மூலமாக கொண்டு வர வேண்டும் எனும் எண்ணத்திற்கும், நம்முடைய அதுசார்ந்த வணிக பார்வையையும் இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications