பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி
சென்னை: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அந்த கட்சியில் இருந்து விலகுவதாக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து இன்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலை புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கி தமிழகத்தில் களமாடும் திட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ள நிலையில் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க உள்ளார்? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை. இவர் கடந்த 2020ல் பாஜகவில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த வேகத்தில் மாநில தலைவர் பொறுப்புக்கு உயர்ந்தார். கடந்த ஆண்டு அதிமுக கூட்டணிக்காக அவரிடம் தலைவர் பதவி பறிக்கப்பட்டு நயினார் நாகேந்திரனிடம் வழங்கப்பட்டது.

இதனால் கடும் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை தற்போது பாஜகவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், பாஜக பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த வேளையில் கட்சியில் இருந்து விலகுவதாக அண்ணாமலை கூறியுள்ளார். அதற்கு அவர்கள் சிறிது காலம் காத்திருங்கள். கட்சியில் உரிய அங்கீகாரம் தருவதாக தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலை கட்சி நோக்கம்
ஆனால் அண்ணாமலை பாஜகவிற்கு 'குட்பை' சொல்வதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகுவதாக கூறி 5 பக்க கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபினிடம் வழங்கியதாக கூறினாலும் கூட அதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் அண்ணாமலை தொடங்கும் கட்சி குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:
திராவிடம் + தேசியம்
அதாவது அண்ணாமலை அனைத்து ஜாதி, மதங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் கட்சியை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம். பாஜக இந்து மதத்தினருக்கும், இந்து மதம் சார்ந்த நடைமுறைகளை காக்கவும் முன்னுரிமை வழங்கும் நிலையில் அந்த நிலைப்பாட்டில் இருந்து அண்ணாமலை விலகி செயல்பட திட்டமிட்டுள்ளாராம். அதன்படி மதச்சார்பற்றதாகவும், தேசிய பார்வையுடனும் கூடிய கட்சியாக தன்னை முன்னிறுத்த அவர் திட்டமிட்டுள்ளாராம். அதுமட்டுமின்றி திராவிட கட்சிகளின் சாயலையும் கட்சிக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளராம்.
கிறிஸ்தவர் - இஸ்லாமியரை...
அதன்படி திமுக, அதிமுகவை போல் தமிழக நலனை முதன்மைப்படுத்தி செயல்பட வேண்டும். அதேபோல் சிறுபான்மையினராக உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை அரவணைத்து கொள்ள திட்டமிட்டுள்ளராம். இதற்காக அனைத்து மதத்தினரையும் தமிழர் என்ற கடையின் கீழ் கொண்டு வர அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிறுபான்மையினர் நம்பிக்கை பெற..
பாஜகவிற்கு பொதுவாகவே இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் அதிகம் கிடைக்காது. பாஜக தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் நினைப்பது தான் இதற்கு காரணம். இதனால் பாஜகவில் இருந்து விலகி வரும் தன்மீது இத்தகைய முத்திரை குத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் அண்ணாமலை தெளிவாக உள்ளாராம். அதாவது சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்பதை தொடக்கத்திலேயே உடைக்க அண்ணாமலை நினைக்கிறார்.
ஏனென்றால் தமிழக மக்கள்தொகையில் சுமார் 13 சதவீதம் முதல் 16 சதவீதம் பேர் சிறுபான்மையினராக உள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்தலில் வாக்களித்து விடுகின்றனர். இதனால் தேர்தல் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்களின் சப்போர்ட் என்பது நிச்சயம் தேவை. இதனால் சிறுபான்மை, பெரும்பான்மை என்று அனைத்து மதத்தினரையும் தமிழர் என்ற அடிப்படையில் ஒருங்கிணைத்து செயல்பட அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications