சினிமாவில் இருந்தே ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி.. 300 படங்களில் நடித்தவராச்சே? இப்ப ஹேப்பி முடிவு
சென்னை: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தங்கையாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மகளாகவும் நடித்து, இன்றைய தலைமுறை ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும் அம்மாவாக நடித்து வரும் பிரபல நடிகை துளசி, முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.. தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் 3 பதிவுகளில் இந்த அறிவிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை துளசி. 1967-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான பாரியா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அப்போது துளசி 3 மாத குழந்தை.. பாரியா படத்துக்கு ஆண் குழந்தை தேவையாக இருந்த நிலையில், பெண் குழந்தையான துளசியை ஆண் குழந்தையாக்கி நடிக்க வைத்திருந்தனர்.
துளசியின் அம்மாவும், நடிகை சாவித்திரியும் தோழிகள் என்பதால், அப்படித்தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

துளசி மொத்தமாக நடித்ததே 316 படங்கள் என்றால், அதில் 100 படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துவிட்டார்.. இதனால் ஸ்கூலுக்குக்கூட துளசியால் போக முடியவில்லையாம்.கமல்ஹாசன் நடித்திருந்த அரங்கேற்றம் படத்தில் துளசி நடித்திருந்தார். பிறகு 1982-ம் ஆண்டு வெளியான சகலகலா வல்லவன் படத்தில் கமல்ஹாசனின் தங்கையாக நடித்திருந்தார்.
நல்லவனுக்கு நல்லவன்
ஆனால், 1984ல் வெளிவந்த நல்லவனுக்கு நல்லவன் படத்தில், ரஜினிகாந்தின் மகளாக நடித்தபோது, தமிழகம் முழுவதும் துளசி அறியப்பட்டார்.. இதற்கு பிறகு கார்த்தியுடன் தூரத்து பச்சை, சிவாஜியுடன் தாம்பத்யம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 1994ல் மகாநதி படத்தில் கமலுடன் நடித்திருந்தார். இதற்குபிறகு கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாகிவிட்டார்.
2010ல் ஈசன் படம் மூலமாகத்தான் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி தந்தார் துளசி.. இதற்கு பிறகு மங்காத்தா, சுந்தரபாண்டியன், ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு, சாகசம், ஆறாது சினம், மெட்ரோ, ரிச்சி, நிமிர், வெந்து தணிந்தது காடு, உள்ளிட்ட படங்களில் நடித்தார்.. இதில் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் மாநில விருதை வென்றிருந்தார் துளசி.
மாலையில் திருமணம்
துளசியின் கணவர் பெயர் ஷிவமணி. கன்னடத்தில் 26 படங்களை இயக்கிய பிரபல டைரக்டர் ஆவார்.. ஒரு படத்தில் காலை 8 மணி ஷூட்டிங்கில் நடித்து கொண்டிருந்தபோது, 11 மணிக்கு ஷிவமணி 'நாம திருமணம் செய்துக்கலாமா?’ என்று துளசியை கேட்டாராம். மாலையே திருமணமும் நடந்துவிட்டதாம்.
மகிழ்ச்சிகரமான திருமண வாழ்க்கையை நடத்தி வரும் துளசி, ஷீரடி சாய்பாபாவின் பக்தை ஆவார்.. தென்னிந்திய சினிமாவில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை துளசி, தற்போது நடிப்பில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் 3 பதிவுகள் மூலம் இதனை வெளிப்படுத்தி உள்ளார்.
சாய்பாபாவின் கால்கள்
முதலில் சாய் பாபாவின் கால்கள் படத்தை பதிவிட்டு, "என்னையும் என் மகன் சாய்-யையும் காத்து வழிநடத்தும்!! ஓ தேவா ஓ சாய்நாதா" என்று கேப்ஷன் தந்திருந்தார் துளசி..இதற்கு பிறகு 1 மணி நேரம் கழித்து, "உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். உங்கள் உணர்வுகளை நீங்கள் யாருக்கும் விளக்கவோ நியாயப்படுத்தவோ தேவையில்லை, உங்கள் உள் வழிகாட்டுதலை நம்புங்கள்; அதுவே சிறந்தது என்று தெரியும் என்று பதிவிட்டார்..
பிறகு 3வது பதிவில், "இந்த டிசம்பர் 31 ம் தேதி எனது ஷீரடி தரிசனத்திற்கு தொடர்ச்சியாக, ஓய்வு பெற விரும்புகிறேன். இனி என்னுடைய பயணத்தை சாய்நாதாவுடன் நிம்மதியாக தொடர இருக்கிறேன். வாழ்க்கையை கற்றுக் கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி சாய்ராம்" என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து துளசிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications