பராசக்தி படத்தில் நடித்த நடிகர் வீட்டில் துயரம்.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது! நெகிழ வைத்த கதை!
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம், அரசியல், உணர்ச்சி, வரலாறு ஆகியவற்றை இணைத்து சொல்லும் முயற்சியாக அமைந்துள்ளது.
ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தணிக்கை வாரியத்தின் பல கட்டுப்பாடுகள், மியூட்டுகள், கட் ஆகியவற்றுடன் இந்தியாவில் வெளியானாலும், படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 27 கோடி ரூபாய் வசூலித்து தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கதையின் மையம்
1960-களில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாக கொண்டு, ஒரு சாதாரண அரசு ஊழியர் எவ்வாறு போராட்டக்காரராக மாறுகிறார் என்பதே படத்தின் மையக் கதை. மாணவர்களின் எழுச்சி, அரசியல் அழுத்தங்கள், காவல்துறையின் அடக்குமுறை என பல அடுக்குகளில் படம் நகர்கிறது. இந்த கதையின் போக்கில், இடைவேளைக்கு முன்பு வரும் ஒரு முக்கிய கதாபாத்திரம் தான் அய்யாக்கண்ணு.
அய்யாக்கண்ணு கேரக்டர்
அய்யாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகர் கஜேந்திரன்.பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருந்தாலும், அவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை தனியாக ஈர்த்தது. இயல்பான உடல் மொழி, கண்களில் தெரியும் வலி, போராட்டத்தின் தீவிரம் - அனைத்தும் சேர்ந்து அந்த கதாபாத்திரத்தை நினைவில் நிற்க வைத்தது.
யார் இந்த கஜேந்திரன்
யூடியூப் மற்றும் ஷார்ட் ரீல்ஸ் மூலம் பிரபலமானவர் கஜேந்திரன். பல ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் போராடி வந்தவர். சில படங்களில் கம்பெனி ஆர்டிஸ்டாக பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படத்தில் கூட அவர் பின்னணிக் கலைஞராக பணியாற்றியுள்ளார். ஆனால், நடிகராக திரையில் தெரியும் முதல் வாய்ப்பு கிடைத்தது 'பராசக்தி' மூலமாகத்தான்.
வெற்றிக்கு முன் பேரிழப்பு
ஆனால், இந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. படம் வெளியாகும் மூன்று நாட்களுக்கு முன்பு, ஜனவரி 6ஆம் தேதி, நடிகர் கஜேந்திரனின் அம்மா காலமானார். பல ஆண்டுகளாக தனது மகனை திரையில் பார்க்க வேண்டும் என்று காத்திருந்த அந்த தாயின் கனவு, படம் வெளியாகும் முன்பே நிறைவேறாமல் போனது.
இந்த துயரத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள கஜேந்திரன், "என் அம்மா 10 ஆண்டுகள் காத்திருந்தார். நான் சினிமாவில் நடிப்பதை பார்க்கவேண்டும் என்பதே அவரின் ஆசை. படம் ரிலீஸுக்கு தயாராக இருந்த நேரத்தில், ஒரே இரவில் என் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது,"
என்று உருக்கமாக எழுதியுள்ளார்.

நன்றி சொல்ல மறக்காத நடிகர்
மேலும், இயக்குநர் சுதா கொங்கராவுக்கும், நடிகர் சிவகார்த்திகேயன்க்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். "என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாழ்நாள் வாய்ப்பை கொடுத்த சுதா கொங்கரா மேடமுக்கும், படப்பிடிப்பில் எனக்கு ஆறுதல் சொன்ன சிவகார்த்திகேயன் சாருக்கும் நான் என்றும் கடமைப்பட்டவன்," என்று பதிவிட்டுள்ளார்.

நெகிழ வைத்த உண்மை
'பராசக்தி' திரைப்படம் அரசியல், போராட்டம் பற்றி பேசினாலும், திரை வெளியே நடந்த இந்த உண்மை சம்பவம் ரசிகர்களை இன்னும் அதிகமாக நெகிழ வைத்துள்ளது. ஒரு நடிகரின் முதல் பெரிய வாய்ப்பும், அதே நேரத்தில் அவர் சந்தித்த மிகப் பெரிய இழப்பும் - இரண்டும் சேர்ந்து, கஜேந்திரனின் வாழ்க்கையை ஒரு உணர்ச்சிகரமான திரைக்கதையாக மாற்றியுள்ளது.
அய்யாக்கண்ணு கதாபாத்திரம் போலவே, நிஜ வாழ்க்கையிலும் அமைதியாக மனதைத் தொட்ட நடிகர் கஜேந்திரன் - அவரது பயணம் இனி மேலும் உயர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.












Click it and Unblock the Notifications