Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குப்பையில் கிடைத்த 45 பவுன்.. துப்புரவு பணியாளர் பத்மாவின் நேர்மை, தங்க சங்கிலி கொடுத்த ரஜினிகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: (Rajinikanth gift to sanitation worker)சென்னையின் பரபரப்பான தி.நகர் பகுதியில், அன்றாடம் போலவே தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணின் நேர்மை, இன்று தமிழகமே பேசும் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. மனிதநேயத்துடன் நேர்மையாக செயல்பட்ட தூய்மை பணியாளர் பத்மாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் மறக்க முடியாத பரிசு கொடுத்திருக்கிறார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணிபுரியும் பத்மா, குப்பையோடு கிடந்த ஒரு கவருக்குள் 45 பவுன் தங்க நகைகள் இருப்பதை கண்டுபிடித்தபோதும், அதை சொந்தமாக வைத்துக்கொள்ளாமல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், சமூகத்தில் மனிதநேயத்தின் மதிப்பை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.

Rajinikanth Padma Chennai News Sanitation Worker

சென்னை திருவல்லிக்கேணி - கிருஷ்ணாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயதான பத்மா, தியாகராய நகர் பகுதியில் உள்ள மகாராஜா சந்தானம் தெருவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குப்பையோடு கிடந்த ஒரு கவரை எடுத்துப் பார்த்தார். அதில் ஐஸ்கிரீம் டப்பாவுக்குள் தங்க நகைகள் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஒரு நொடி கூட தயங்காமல், அதை தனது மேற்பார்வையாளரிடம் செல்லி, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நகைகள் நங்கநல்லூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடையவை என்பது உறுதியானது. ஒரு குடும்பத்தின் வாழ்நாளில் சேமித்த சொத்தாக இருக்கக்கூடிய அந்த நகைகள், உரியவரிடம் திரும்பச் சென்றது பத்மாவின் நேர்மையால்தான்.

இந்த மனிதநேய செயலை அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பத்மாவை நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன், ரூ.1 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையும் வழங்கினார். "இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்ட நேர்மை தான் சமூகத்துக்கு தேவை" என்ற வார்த்தைகளுடன் முதல்வர் வழங்கிய பாராட்டு, பத்மாவுக்கு மட்டுமல்ல, நேர்மையை நம்பும் ஒவ்வொருவருக்கும் கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.

அரசு மட்டுமல்லாமல், சமூகத்தின் பல தரப்பிலிருந்தும் பத்மாவுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்து வருகின்றன. அந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் பத்மாவை தனது இல்லத்திற்கு அழைத்து, அவருக்கு தங்க செயின் அணிவித்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். எளிய பின்னணியில் இருந்து வரும் ஒரு தூய்மைப் பணியாளரின் நேர்மையை ஒரு சூப்பர் ஸ்டார் நேரில் அழைத்து பாராட்டியது, பலரையும் நெகிழ வைத்துள்ளது.

மேலும், சில வாரங்களுக்கு முன்பே ரஜினிகாந்தின் ரசிகர்கள் பத்மாவுக்கு ரூ.25,000 ரொக்கமாக வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இது, ரசிகர் அமைப்புகள் மட்டுமல்ல, பொதுமக்களும் பத்மாவின் செயலை எவ்வளவு மதிக்கிறார்கள் என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது.

"கையில் பணம் இல்லாத நேரத்திலும் நேர்மை கைவிடக்கூடாது" என்பதற்கு பத்மாவின் செயல் ஒரு உயிர்ப்பான உதாரணமாக மாறியுள்ளது. அன்றாட வாழ்க்கையில் பொருளாதார சிரமங்களை சந்திக்கும் தூய்மைப் பணியாளர்கள் பலர், இப்படிப்பட்ட ஒரு பெரிய மதிப்புள்ள பொருள் கிடைத்தபோது என்ன செய்வது என்று தயங்கக்கூடிய சூழலில், பத்மா எடுத்த முடிவு சமூகத்திற்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. அவர் செய்த நல்ல செயலால் இன்று அவர் ஒருவரின் உதாரணமாக மட்டுமல்ல, ஒரு நம்பிக்கையின் சின்னமாகவும் மாறியுள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. "நேர்மை இன்னும் உயிருடன் தான் இருக்கிறது" என்ற கருத்துகளுடன் பலரும் பத்மாவை பாராட்டி பதிவுகள் பகிர்ந்து வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களை நாம் தினமும் பார்க்கிறோம். ஆனால் அவர்களின் வாழ்க்கை, அவர்களின் மதிப்புகள் பற்றி நாம் பெரிதாக சிந்திப்பதில்லை. பத்மாவின் இந்த ஒரு செயல், அந்த உழைப்பாளர்களின் மனிதநேயத்தை அனைவருக்கும் நினைவூட்டியுள்ளது.

ஒரு குப்பை கவருக்குள் கிடந்த தங்க நகைகள், இன்று ஒரு சமூகத்தின் மனசுக்குள் நேர்மையின் மதிப்பை மீண்டும் விதைத்திருக்கிறது. பத்மாவின் நேர்மை, அவரது வாழ்க்கையை மட்டும் மாற்றவில்லை; "நல்லது செய்தால் நல்லதே திரும்ப வரும்" என்ற நம்பிக்கையை பலரின் மனதில் உறுதி செய்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+