அடிப்படை மரியாதை கூட கிடைக்கவில்லை.. அதனால் எடுத்த முடிவு! எமோஷனலாக பேசிய நடிகை சிம்ரன்
சென்னை: தமிழ் சினிமாவின் எவர் கிரீன் நடிகைகளில் ஒருவராக திகழும் சிம்ரன், பாலிவுட்டில் அதிகமாக நடிக்காததற்கான காரணங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது திரையுலகிலும், சமூக வலைதளங்களிலும் பரவலாக விவாதிக்கப்படுகின்றன.

நடிகை சிம்ரன் பேட்டி
தென்னிந்திய சினிமாவில் நீண்ட காலம் முன்னணி நடிகையாக ஆதிக்கம் செலுத்திய அவர், தனது அனுபவங்களை ஓபன் ஆக பகிர்ந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் வெற்றிகரமாக நடித்த சிம்ரனுக்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க பலமுறை வாய்ப்புகள் வந்திருக்கிறதா. ஆனால் எதற்காக தான் நடிக்கவில்லை என்பது பற்றி சமீபத்தில் பேசியிருக்கிறார்.
ஹிந்தியில் நடிக்காத காரணம்
"அங்குள்ள சிலர் தென்னிந்திய நடிகர்களின் சாதனைகளையும், அவர்களின் பாரம்பரியத்தையும் மதிப்பதே இல்லை. அது என்னை மிகவும் பாதித்தது". நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை சினிமாவுக்காக அர்ப்பணித்திருக்கிறேன். அதற்குப் பிறகும் அடிப்படை மரியாதை கூட கிடைக்கவில்லை என்றால் அது என்ன அர்த்தம்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
சிம்ரன் குற்றச்சாட்டு
குறிப்பாக, சில தயாரிப்பு நிறுவனங்கள் தங்கும் வசதி, பயண ஏற்பாடுகள், கூடவே வரும் உதவியாளர்கள் எண்ணிக்கை போன்ற விஷயங்களில் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஹோட்டல் வசதி முதல் விமான டிக்கெட் வரை பேரம் பேசும் சூழல் ஏற்பட்டது தான் மனதளவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அனுபவங்களே பாலிவுட்டில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தை குறைத்ததாக சிம்ரன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் பெற்ற மரியாதையும், ரசிகர்களின் அன்பும், தனது சினிமா பயண இடத்திற்கு போதுமானது என்று அவர் நினைத்து விட்டார் போல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நடிகை சிம்ரன் சினிமா பயணம்
சிம்ரனின் திரைபயணத்தைப் பார்த்தால், 90-களின் இறுதிப் பகுதி முதல் 2000-களின் தொடக்கம் வரை அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக நடித்து வந்தார். விஜய், அஜித், சூர்யா, கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை வழங்கியுள்ளார். டான்ஸ் மற்றும் நடிப்பில் தனித்துவமான பாணியை உருவாக்கியவர் என்ற பெயரையும் பெற்றார்.
திருமணத்திற்குப் பிறகு சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகியிருந்த அவர், பின்னர் குணச்சித்திர வேடங்கள் மூலம் மீண்டும் திரும்பி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். தற்போது திரைப்படங்கள் மட்டுமின்றி, டெலிவிஷன் நிகழ்ச்சிகள் மற்றும் வெப் தொடர்களிலும் அவர் நடித்து வருகிறார். காலத்திற்கேற்ற வகையில் தன்னை மாற்றிக்கொண்டார்.

ரசிகர்கள் கருத்து
இந்த நிலையில் சிம்ரன் பகிர்ந்துள்ள இந்த கருத்துகள், தென்னிந்திய கலைஞர்களுக்கு தேசிய அளவில் கிடைக்கும் மரியாதை குறித்து விவாதத்தை கிளப்பியுள்ளன. பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவுக்கு இடையேயான அணுகுமுறைகளில் உள்ள வித்தியாசம் குறித்து பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications