‘சிறை’ படத்தில் வர குற்றவாளி நிஜத்தில் ஒரு இந்து.. முஸ்லிமாக காட்ட காரணம் இதுதான்! இயக்குனர் ஓபன்
சென்னை: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் 'சிறை'. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்திருந்தாலும், இந்த படம் குறித்து பேசும் பலரும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறார்கள். "இந்த படத்தின் உண்மையான கதை, போலீஸ் அதிகாரியை விட அந்த கொலை குற்றவாளியும் அவனுடைய காதலியும் தான்."
அந்த கொலை குற்றவாளி கதாபாத்திரம், படத்தில் ஒரு முஸ்லிம் இளைஞராக காட்டப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து தற்போது இயக்குனர் தமிழ் அளித்த விளக்கம், 'சிறை' படத்தை இன்னும் ஆழமாக புரிந்துகொள்ள உதவுகிறது.

இயக்குனர் தமிழ்
'சிறை' படத்தின் கதையை பற்றி இயக்குனர் தமிழ் பேசும்போது, இந்த கதைக்கு அடிப்படையாக இருந்த நிஜ வாழ்க்கை சம்பவத்தில், அந்த இளைஞன் முஸ்லிம் இல்லை. அவர் ஒரு இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர்.
திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த அந்த இளைஞன், பஞ்சம் பிழைக்க வேறு இடத்திற்கு வந்து, தன்னுடைய அம்மாவுடன் ஒரு வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அங்கேயே அவருக்கு காதல் ஏற்பட்டதாகவும் இயக்குனர் கூறியுள்ளார்.
ஆனால் அந்த கதாபாத்திரத்தை திரையில் முஸ்லிம் இளைஞராக மாற்றியதற்கு காரணம் என்ன என்றும் அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். இன்றைய சமூக சூழ்நிலையில், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை விடவும் மோசமான நிலையில் இஸ்லாமியர்கள் பார்க்கப்படுகிறார்கள். ஒரு பெயர், ஒரு மத அடையாளம் போதும், ஒருவரை சந்தேகிக்க, ஒதுக்க, தண்டிக்க," என்று அவர் கூறியுள்ளார்.
அதனால்தான், அந்த கதாபாத்திரத்தை இஸ்லாமியராக மாற்றி, அவர்களைப் பற்றிய நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த மாற்றத்தை செய்ததாகவும் அவர் விளக்கியுள்ளார். இந்த விளக்கம், 'சிறை' படத்தில் வரும் பல காட்சிகளுக்கும் வசனங்களுக்கும் புதிய அர்த்தத்தை கொடுக்கிறது.
'சிறை' படத்தில், குற்றம் நிரூபிக்கப்படாமலேயே ஒரு முஸ்லிம் இளைஞன் ஆண்டுகள் கணக்கில் சிறையில் இருக்கிறான். "Gun ஏன் லோடாக இருக்கு?, "சார்... அவன் முஸ்லிம் சார்..." என்கிற வசனம், வெறும் டயலாக் இல்லை; அது சமூகத்தின் மனநிலையை பிரதிபலிக்கும் ஒரு வாக்கியம்.
அதேபோல், அப்துல் ரவூஃப்ன்ற பேரை வச்சுக்கிட்டு நான் எங்க சார் தப்பிச்சுப் போய்ர முடியும்?" என்கிற வசனம், 1996-2000 காலகட்டத்தை அனுபவித்தவர்களுக்கு மிகவும் ஆழமாகப் புரியும் ஒன்றாக அமைந்துள்ளது.
சிறை படத்தின் கதை
'சிறை' படத்தின் கதை, ஒரு கொலை குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, நீண்ட தூரம் பயணம் செய்யும் மூன்று காவல் அதிகாரிகளையும், அவர்களுடன் பயணிக்கும் அந்த கைதியையும் சுற்றி நகர்கிறது. பயணத்தின் போது, அந்த கைதியின் வாழ்க்கை, அவனுடைய காதல், அவன் எதிர்கொள்ளும் சமூக பாகுபாடு ஆகியவை மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன. அதே நேரத்தில், காவல்துறைக்குள் இருக்கும் நல்ல போலீஸும், மனிதநேயமற்ற போலீஸும் ஒரே படத்தில் காட்டப்படுகின்றனர்.
சிறை பட நடிகர்கள்
விக்ரம் பிரபு, போலீஸ் அதிகாரியாக மிகவும் நிதானமான, யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். கொலை குற்றவாளி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர், பெயர் தெரியாமல் போகும் அளவுக்கு அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போயிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. காதலி, அம்மா, நீதிபதி உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களும் படத்தின் உணர்வை தாங்கி நிற்கின்றன.












Click it and Unblock the Notifications