ரோபோ சங்கருக்கான தமிழக அரசு விருது.. மேடையில் மனைவி விருதை வாங்க போன போது நடந்த சம்பவம்! நெகிழ்ச்சி
சென்னை: தமிழக அரசு சார்பில் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும் மாநில விருதுகள், பல வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேடையேறி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறார்.
அதில், 2009 முதல் 2012 வரையிலான திரைப்பட விருதுகள் 183 பேருக்கும், 2009 முதல் 2013 வரையிலான சின்னத்திரை விருதுகள் 101 பேருக்கும், 2008-09 முதல் 2013-14 வரையிலான மாணவர் விருதுகள் 30 பேருக்கும் இன்று கலைவாணர் அரங்கில் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, 2015 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் 34 பேருக்கும், 2014-15 ஆம் ஆண்டுக்கான மாணவர் விருதுகள் 5 பேருக்கும் மார்ச் 6, 2024 அன்று அடையாறு முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன.

தற்போது 2016 முதல் 2022 வரையிலான திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரையிலான சின்னத்திரை விருதுகள் மற்றும் 2015-16 முதல் 2021-22 வரையிலான மாணவர் விருதுகள் தேர்வு செய்யப்பட்டு அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சமூக சிந்தனைகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கும் தொடர்கள் மற்றும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
சிறந்த நடிகர், நடிகைகள் - சிறந்த படங்கள்
திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர்களாக விஜய்சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சிறந்த படங்களாக மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ரோபோ சங்கருக்கான விருது
இந்த விழாவில் மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்க்கு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகர் விருது வழங்கப்பட்டது. அவர் மறைந்த நிலையில், அந்த விருதை அவரது மனைவி பிரியங்கா சங்கர் மேடைக்கு வந்து பெற்றுக் கொண்டார்.
அப்போது அவருடன் அவரது பேரனும் மேடைக்கு வந்திருந்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அந்த சிறுவனின் கழுத்தில் பதக்கத்தை அணிவித்து, பின்னர் ரோபோ சங்கருக்கான விருதை பிரியங்கா சங்கரிடம் வழங்கினார். "என் கணவர் என் பேரன் வடிவில் எப்போதும் என் அருகில்தான் இருக்கிறார்" என்று பலமுறை பேசியிருக்கும் பிரியங்கா, அதே உணர்வோடு இந்த விழாவிலும் பேரனுடன் சேர்ந்து விருதைப் பெற்றது பலரையும் உருக்க வைத்தது.
ஒரே மேடையில் அப்பா - மகளுக்கான விருது
ரோபோ சங்கர் மறைவுக்குப் பிறகு அவருக்கு கிடைத்த இந்த விருது, அவரது நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் இந்த விழாவில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர்க்கும் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒரே மேடையில் அப்பா மற்றும் மகளுக்கான விருதுகள் வழங்கப்பட்ட தருணம், பார்வையாளர்களிடையை நெகிழ்ச்சி தருணத்தை உருவாக்கியது. "இந்த வெற்றித் தருணத்தை நேரில் காண ரோபோ சங்கர் இருந்திருந்தால் இன்னும் பெருமையாக இருந்திருக்கும்" என்று பலரும் சமூக வலைத்தளங்களில் உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டு வருகின்றனர்.
கலைஞர்களுக்கு அரசு வழங்கும் அங்கீகாரம்
பல ஆண்டுகளாக தாமதமாகியிருந்த மாநில விருதுகள் மீண்டும் வழங்கப்படுவது கலைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படம், சின்னத்திரை மற்றும் மாணவர் துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு அரசு வழங்கும் இந்த அங்கீகாரம், புதிய தலைமுறைக்கு மோட்டிவாக அமையும் என கலைத்துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications