"ஸ்டாலின் அண்ணா, துர்கா அண்ணி.." மகளிர் உரிமை மாநாட்டில் சுப்ரியா சுலே.. முதல்வர் ரியாக்ஷனை பாருங்க
சென்னை: இன்று நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, திமுக சார்பில் தனக்குப் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தேசியளவில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராகச் சோனியா காந்தி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே பேச்சு பலரையும் கவனிக்க வைத்தது.
சுப்ரியா சுலே: இந்த மாநாட்டில் பேசிய தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, "செந்தமிழ் நடெனும் போதினிலே... இன்ப தேன் வந்து பாயுது காதினிலே" என்று கூறி அவர் தனது உரையை ஆரம்பித்தார். தொடர்ந்து பேசிய அவர், "ஸ்டாலின் அண்ணா, துர்கா அண்ணிக்கு வணக்கம்" என்று கூற அரங்கமே அதிர்ந்தது. இந்த மாநாட்டில் கீழே அமர்ந்திருந்த முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை பார்த்து அவர் வணக்கம் சொன்னார்.
மேடையில் அமர்ந்திருந்த ஸ்டாலினும் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதைக் கேட்டதும் அவரது முகத்திலும் சட்டென புன்னகை தோன்றியது. தொடர்ந்து பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே, "இங்குள்ள மல்லிப்பூ எனக்கு மிகவும் பிடிக்கும்.குறிப்பாகச் சென்னை வரும்போதெல்லாம் இரண்டு கிலோ மல்லிப்பூ வாங்குவேன்" என்றார். மேலும், தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்குச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். இறுதியில் அவர் திமுக சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
சமூக நீதி: இந்த மாநாட்டில் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே, "தமிழ்நாட்டு நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட மாநிலம். இங்கே சாதி மத வேறுபாடுகள் இல்லாமல் மொழி மீதுதான் பற்று இருக்கிறது. பெரியா, அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்திய சமூக நீதி கொள்கையிலும் இந்தியாவிற்கே தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.
பெண்கள் உரிமைகளை வலியுறுத்தி பெரியார் முதலில் சுயமரியாதை மாநாட்டை நடத்தினார். இப்போது அதே வழியில் இந்த மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாட்டிற்கும் எனது மாநிலமான மகாராஷ்டிராவுக்கும் பாரம்பரிய தொடர்பு இருக்கவே செய்கிறது. மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர் ஆகியோரின் நூற்றாண்டை நாங்கள் மகாராஷ்டிராவில் கொண்டாடும் நிலையில், தமிழ்நாடு இங்கே கருணாநிதி நூற்றாண்டைக் கொண்டாடுகிறது.
திமுகவுக்குப் பாராட்டு: தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மக்கள் உரிமை சார்ந்த பிரச்சினைகளைத் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள்.. கூட்டாட்சிக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் தமிழ்நாட்டைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். மக்களவையில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் எப்போதும் என்னைச் சுற்றி திமுக எம்பிக்களே இருப்பார்கள்.
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. நாடாளுமன்றத்தில் கனிமொழியைக் கண்டாலே பாஜகவினருக்குப் பயம் வந்துவிடும். இதன் காரணமாகவே அவர் பேச எழுந்தால் உடனடியாக பாஜகவினர் அமளியில் ஈடுபடுவார்கள். பெண்கள் என்றாலே அன்பு. கருணை என்று எங்களைப் போற்ற வேண்டாம் என்றும் ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்று கனிமொழி எப்போதும் கூறுவார்.
வாய்ப்பு கேட்ட சுப்ரியா சுலே: தமிழ்நாட்டில் பெண்கள் நலனுக்காகத் தமிழ்நாடு முதல்வரும், எனது அண்ணனுமான ஸ்டாலின் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அவரது திட்டங்கள் பெண்கள் வாழ்க்கையை முன்னேற்றியுள்ளது.
மகாராஷ்டிராவில் எங்கள் கட்சியில் சிக்கல் இருப்பது உங்களுக்குத் தெரியும். எங்கள் தேசியவாத காங்கிரஸ் சின்னத்தைத் தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறுவதில் பிரச்சினை இருக்கிறது. இதனால் அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட எனக்கு அண்ணன் ஸ்டாலின் வாய்ப்பு தர வேண்டும்" என்று அவர் சொல்ல ஆச்சரியப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications