Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதயத்தோடு இணங்கி வாழ்வோம்

Subscribe to Oneindia Tamil

Heart
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இதயநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதய நோய்களும், பக்கவாதமும் உலகில் இறப்புகளுக்கான முக்கியமான காரணம் என்பதையும் அது வருடமொன்றுக்கு 17.2 மில்லியன் உயிர்களைக் காவு கொள்கிறது என்பதையும் உலக மக்களுக்கு அறிவிப்பதற்காகவே உலக இதயநோய் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான (2009) உலக இதய நோய் விழிப்புணர்வு தினத்தின் (செப். 27) தொனிப்பொருள் "இதயபூர்வமாக செயல்படு' என்பதாகும். அதாவது, நாம் எந்த வேலையையும் முழு மனதுடன், ஈடுபாட்டுடன், மகிழ்ச்சியுடன் செய்தால் நம் இதயம் 100 ஆண்டுகளை ஆரோக்கியமாகக் கடந்து நமக்காகச் செயல்படும். எனவே இதயத்தோடு இணங்கி செயற்படுவோம் என்ற செய்தியை ஊட்டுவதற்காக 2009 உலக இதயநோய் தினம் உலகளாவிய ரீதியில் உணர்வலைகளை அவிழ்த்துவிட்டுள்ளது.

இதய நோய் பற்றி ஆராய முன்பு 'இதயம்' பற்றிச் சிறு விளக்கமொன்றைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதயம் தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் வேலை ரத்தத்தைக் குருதிக் குழாய்களின் வழியாக சுழற்சி முறையில் சீரான வேகத்தில் உடல் முழுதும் செலுத்துவதாகும். இதயம், விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை, இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுறை, வெளிப்புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் ஒருவித பாய்மம் இருக்கும். இது, இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத் திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும்.

இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது. இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன. மேல்பக்கம் இருக்கும் இரண்டு அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச் சுவரும், கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு அறைகளை, கீழ்ப்புற இதயத் தடுப்புச் சுவரும் பிரிக்கின்றன.

இதயம் இயங்கும்போது, இதயத்தில் இருந்து ரத்தம் வெளியே உந்தித் தள்ளப்படும். அப்படி தள்ளப்படும் ரத்தம் ஒரு வழியாகவே செல்லும். மீண்டும் அதே வழியில் திரும்பி வருவதில்லை. இவ்வாறு வெளியே தள்ளப்படும் ரத்தம், மீண்டும் வராமல் தடுக்க இதய அறைகளில் வால்வுகள் உள்ளன.

வலது மற்றும் வலது இதய அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு முக்கூர் வால்வு என்றும், இடது மற்றும் வலது இதய அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு இருகூர் வால்வு என்றும் வழங்கப்படும்.

வலது அறையில் இருந்து வலது இதய அறைக்குச் செல்லும் இரத்தம் மீண்டும் வலது அறைக்குத் திரும்பாமல் 'முக்கூர் வால்வு" தடுக்கிறது. அதேபோல், இடது அறையில் இருந்து இடது இதய அறைக்குச் செல்லும் இரத்தம் மீண்டும் இடது அறைக்குத் திரும்பாமல் இருகூர் வால்வு" தடுக்கிறது.

வலது இதய அறை சுருங்கும்போது, அவ் அறையில் இருக்கும் ரத்தம் நுரையீரல் நாடியில் பாயும். அது திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு நுரையீரல் அரைமதி வால்வு என்று பெயர். அதேபோல், இடது இதய அறை சுருங்கும்போது, பெருநாடிவில்லினூடு செல்லும் ரத்தம் திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு 'பெருநாடி அரைமதி வால்வு" என்று பெயர்.

உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் இதயம் இயங்குவதற்குப் போதுமான சக்தி, ஆக்சிஜன் போன்றவை அவசியம். அதற்குத் தான் இதயத்துக்கே ரத்தத்தைத் தரும் ரத்தக் குழாய்கள் உள்ளன. இவை வலது, இடது எனப் பிரிந்து இதயத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைவிட்டு பரவியிருக்கும். இவை முடியுருநாடி எனப்படும். இதன்மூலம், இதயம் தனக்குத் தேவையான ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த ரத்தக் குழாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போதுதான் 'மாரடைப்பு" ஏற்படுகிறது.

உலகெங்கிலும் நாளாந்தம் பல்வேறு வகையான புதிய புதிய தொற்று நோய்கள் பற்றிக் கேள்வியுறுகின்றோம். பன்றிக் காய்ச்சல், டெங்கு, எய்ட்ஸ் போன்ற தொற்று நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகள், அவற்றைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி நாம் நன்கு அறிந்திருக்கிறோம். பொதுவாக தொற்று நோய்களைத் தடுப்பதற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் தொற்றா நோய்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் தொற்றா நோய்கள் என்பவை எவை என்பதை அறிந்திருப்பது முக்கியமானது.

இதயம் மற்றும் குருதிக்குழாய்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, நீண்ட காலம் நீடிக்கும் சுவாசப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோய்கள், புற்றுநோய் என்பனவற்றை தொற்றா நோய்களாக வகைப்படுத்தலாம். உலகில் ஏற்படும், மரணங்களுக்கான முதன்மைக் காரணியாக இருதய நோய்களும், பாரிசவாதமும் அமைகின்றன.

முழு உலகிலும் இந்நோய்களால் வருடாந்தம் 17.2 மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். உலக இருதய கூட்டமைப்பானது அதன் அங்கத்தவர்களோடு இணைந்து இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு காரணமாகவும் பக்கவாதம் காரணமாகவும் நிகழும் அகால மரணங்களுள் குறைந்த பட்சம் 80 சதவீதத்தை முக்கிய ஆபத்துக் காரணிகளான புகையிலைப் பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளல் உடல் செயற்பாடின்மை போன்றவற்றைக் கட்டுப்படுத்தவுதன் மூலம் குறைக்க முடியும் எனும் செய்தியைப் பரப்புகின்றது.

நமது உடலில் உறுப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதாவது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கினால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும். ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான்.

ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது? இதயம் 'துடிக்கவில்லை" என்றால் அசுத்த ரத்தம் தூய்மையாகாது. உடல் இழையங்களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது. போதுமான சத்து கிடைக்காமல் இழையங்கள் பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த மனித உடலே இறந்துபோகும்.

இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது.

இதயம் தன்னிச்சையாக செயல்படக் கூடியது. கண், காது, கால், கை போன்ற உறுப்புகளைப்போல் நமது விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ப இதயத்தை இயக்க முடியாது. ஆனால், இதயத்தைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு, தன்னியக்க நரம்பு மண்டலம் அல்லது பரிவு நரம்பு மண்டலம் என்று பெயர். இந்த நரம்பு மண்டலம் தவிர, உயிரி ரசாயன சுரப்பு நீர்களும் இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+