தமிழகத்தில் இனக்கலவரம் நடத்தலாம் என மோடி, அமித்ஷா கனவு காண்கிறார்கள்.. மு.க.ஸ்டாலின் திடுக் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இனக் கலவரம் நடத்தலாம் என பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கனவு காண்கிறார்கள்; இந்த கனவுக்கு முடிவு கட்டும் தேர்தல்இது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, இராதாபுரம், நாங்குநேரி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

 DMK President MK Stalin slams PM Modi, Home Minister Amit shah

திக்கெட்டும் புகழ் பரப்பும் நெல்லைச் சீமைக்கு கலைஞரின் மகனாக, வந்திருக்கிறேன். வீரத்திற்கு பூலித்தேவன், கல்விக்கு பாளையங்கோட்டை, ஆன்மீகத்திற்கு நெல்லையப்பர் என்று அனைத்து சிறப்பையும் பெற்றிருக்கும் இந்த நெல்லைச் சீமைக்கு கலைஞருடைய மகனாக உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.

முதலமைச்சர் பழனிசாமி அவர்களுக்கு, அவர் எவ்வாறு முதலமைச்சர் ஆனார் என்று சொன்னால் கோபம் வந்துவிடும். அவரைப்பற்றி நான் மட்டுமல்ல எல்லோரும் பேசியிருக்கிறார்கள். பேசியது மட்டுமல்ல, வலைதளங்களில் பார்த்திருக்கிறார்கள், தவழ்ந்து... ஊர்ந்து... சசிகலாவால் முதலமைச்சர் ஆனார் என்பதை நான் பல கூட்டங்களில் சொன்னேன். அதை நான் அவமானப்படுத்துவதற்காக சொன்னேன் என்று அவரும் நினைக்கவேண்டாம். நீங்களும் நினைக்க வேண்டாம். நடந்த செய்தியைச் சொன்னேன்.

ஆனால் அவருக்கு கோபம் வந்து விட்டது. அதற்கு அவர் நான் சசிகலாவால் முதலமைச்சராகவில்லை. எம்.எல்.ஏ.க்களால் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று சொல்லி உள்ளார். அதற்கு நான் விளக்கமாகவும் சொன்னேன். நீங்கள் சசிகலாவின் தயவில்தான் முதலமைச்சர் பதவியை வாங்கினீர்கள் என்று சொன்னேன். நீங்கள் இல்லை என்று மறுக்கிறீர்கள். ஊர்ந்து போனது உண்மையா? இல்லையா? முதலில் அதை சொல்லுங்கள். நீங்கள் தவழ்ந்து போனது உண்மையா? இல்லையா? அதை சொல்லுங்கள்.

நான் மட்டுமா பார்த்தேன். இந்த நாடே அதைப் பார்த்து சிரித்தது. அதை நான் தவறாக சொல்லியிருந்தால் பழனிசாமி அவர்களே என் மீது வழக்குப் போடுங்கள். என் மீது மட்டுமல்ல, அதைப் பார்த்த அனைவர் மீதும் நீங்கள் வழக்கு போடுங்கள். உங்களுக்கு முதலில் அதற்கு தைரியம் இருக்கிறதா? என்று கேட்டேன். இப்போது திடீரென்று அவர், நான் என்ன பாம்பா? பல்லியா? ஊர்ந்து போவதற்கு என்று சொல்லியிருக்கிறார்.

இப்போது அ.தி.மு.க. என்பது பா.ஜ.க.வின் கிளைக்கழகமாக மாறிவிட்டது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கையைக் கட்டிக் கொண்டு வாயைப் பொத்திக்கொண்டு. இப்போது தேர்தல் வரும் காரணத்தால் அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்திருக்கிறார். நான் கேட்கிறேன், கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போட்ட தேசத்துரோக வழக்குகளை வாபஸ் வாங்கினீர்களா? இதுவரை வாபஸ் வாங்கவில்லை. உதயகுமார், முகிலன், புஷ்பராஜ் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் வாங்கினீர்களா? இல்லை. 2011 முதல் இந்த பகுதியையே ஒரு எமர்ஜென்சி பகுதியைப் போல உருவாக்கி வைத்திருக்கிறார்களே தவிர, வேறு ஒன்றும் அல்ல.

நான் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் பல மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்தேன். அதேபோல இந்த மாவட்டத்துக்கு வந்தபோது இந்தப் பிரச்சினையைச் சொன்னார்கள். அதை வாபஸ் வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். நான் அப்போது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தேசத்துரோக வழக்குகள் மற்றும் உதயகுமார், முகிலன், புஷ்பராஜ் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்று சொன்னேன். இப்போதும் நான் உறுதியோடு அதனைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இன்றைக்கு நாளுக்கு நாள் விலைவாசி விஷம் போல் விண்ணை முட்டும் வகையில் சென்று கொண்டிருக்கிறது. அதைப்பற்றி இந்த ஆட்சியும் மத்திய அரசும் கவலைப்படவில்லை.

இந்த நிலையை விட மோசமானது என்னவென்றால் ரேஷன் கடைகளில் தரமில்லாத பொருட்களை வழங்கி மக்கள் தலைகளில் கட்டவேண்டும் எனக் கட்டாயப்படுத்திச் செய்வதுதான். தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் 34,000-க்கும் மேற்பட்ட கடைகளில் அரிசி, சர்க்கரை தவிர்த்து தேவையில்லாத பொருட்களை மக்கள் தலைகளில் கட்டுமாறு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி, இன்றைக்கு அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி எந்த அளவிற்கு மோசமான நிலையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த உதாரணமே போதும்.

 DMK President MK Stalin slams PM Modi, Home Minister Amit shah

பழனிசாமி சொல்கிறார், மக்களைக் குழப்பி அதில் வெற்றி பெறுவதற்காக ஸ்டாலின் சதி செய்கிறார் என்று. நான் சதி செய்யவில்லை. மக்களை நான் குழப்பவில்லை. மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். தெளிவாக இருப்பதால் தான் இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருக்கிறது. தி.மு.க.வை ஆட்சிக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற உறுதியோடு தான் இங்கு வந்திருக்கிறீர்கள், இந்த அடியேனை முதலமைச்சராக்க வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறீர்கள்.

நம்முடைய வேட்பாளர்களுக்கு நான் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன் என்றால் நானும் இப்போது ஒரு வேட்பாளர் தான் - முதலமைச்சர் வேட்பாளர். இவர்கள் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கடந்து போயிருக்கும் பத்தாண்டுகாலச் சீரழிவைச் சரிசெய்ய முடியும் என்று மக்கள் தெளிவாகக் கருதுகிறார்கள். எனவே இப்போது அ.தி.மு.க. ஆட்சியை மட்டுமல்ல, பா.ஜ.க.வையும் உள்ளே விடக்கூடாது.

இது தமிழ்நாடு. தந்தை பெரியார் பிறந்த மண் - அண்ணா வாழ்ந்த மண் - தலைவர் கலைஞர் அவர்கள் பயிற்றுவித்த மண், இந்த மண். எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர்களை உள்ளே விடக்கூடாது. அதை மக்கள் தெளிவாக உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.

ஒன்றை மறந்துவிடக்கூடாது, நீங்கள் ஏதோ மற்றவர்களுக்கு வாக்களிக்கிறோம் என்ற எண்ணத்திற்கும் சென்றுவிடக்கூடாது. அப்படி வாக்களிப்பது என்பது யாருக்கு சாதகமாக முடியும் என்பதை தயவுசெய்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும், அதனால் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்குத் தான் நீங்கள் உங்களுடைய ஆதரவை வழங்க வேண்டும்.

பிரச்சாரத்தின்போது பழனிசாமி அவர்கள் இன்னொன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பயணத் திட்டத்தை அறிவித்து, நாம் ஆட்சி பொறுப்பேற்ற அடுத்த நாளிலிருந்து 100 நாட்களில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்போம் என்ற உறுதியுடன் ஒவ்வொரு தொகுதிக்கும் நான் சென்றேன்.

அந்த தொகுதியில் இருக்கும் மக்களை ஒன்றுதிரட்டி அவர்களிடத்தில் கோரிக்கை மனுக்களை கேட்டு வாங்கி, ஒரு அடையாளச் சீட்டு கொடுத்திருக்கிறோம். 100 நாட்களுக்கு பிறகு உங்கள் பிரச்சினை ஏதாவது முடியாமல் இருந்தால் அந்த அட்டையுடன், யாருடைய அனுமதியும் இன்றிக் கோட்டைக்குள் இருக்கும் முதலமைச்சர் அறைக்கு வரலாம். அந்த அளவிற்கு அந்த அட்டைக்கு மதிப்பு இருக்கிறது என்று சொல்லி, அந்தப் பயணத்தை நான் தொடர்ந்து நடத்தினேன் என்பது உங்களுக்கு தெரியும்.

அதை முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் கேலி செய்து, கிண்டல் செய்து, '100 நாட்களில் பிரச்சினைகளைத் தீர்க்க அவரால் எப்படி முடியும். பொய் சொல்கிறார். யாரும் நம்பாதீர்கள்' என்று பேசி இருக்கிறார்.

உங்களால் முடியாது. நீங்கள் 10 வருடங்கள் அல்ல, 20 வருடங்கள் இருந்தாலும் அது நடக்கவே நடக்காது. உங்களுடைய கொள்கை எல்லாம் கரப்ஷன் - கமிஷன் - கலெக்ஷன் இதுதான். அதனால் மக்களைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை.

ஆனால் மக்களைப் பற்றி கவலைப்பட்டு ஐந்து முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி நடத்திய தலைவர் கலைஞருடைய மகன் நான். எனவே மக்களைப் பற்றித்தான் நான் கவலைப்படுவேன். எனவே உங்களுக்கு இதெல்லாம் தெரியாது.

நான் ஆதாரத்தோடு சொல்கிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் 2006-ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருக்கும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வேன் என்று உறுதிமொழி கொடுத்தார். கலைஞர் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்து, முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அதே மேடையில் 7000 ரூபாய் கோடி ரூபாய் விவசாயக் கடன் தள்ளுபடி என்று கையெழுத்திட்டார்.

அதேபோல ரேஷன் அட்டை வைத்திருக்கும் அத்தனை பேருக்கும் கலர் டி.வி. கொடுப்பேன் என்று அறிவித்தார்கள். இன்றைக்கும் பல வீடுகளில் அந்த கலர் டி.வி.யை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் கொடுத்த கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் எல்லாம் காயலான் கடைக்கு சென்று விட்டது. இப்போதும் ஏதோ அறிவித்திருக்கிறார்கள். மக்கள் அதை யாரும் நம்ப தயாராக இல்லை.

அதே போல, எம்.ஜி.ஆ.ர் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது மறைந்த நாராயணசாமி அவர்கள் தலைமையில் விவசாய சங்கத்தை சேர்ந்தவர்கள் மின்சார கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அன்றைக்கு இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சி அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

 DMK President MK Stalin slams PM Modi, Home Minister Amit shah

ஆனால், 1989-ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக வந்து சட்டமன்றத்தில் விவசாயப் பெருங்குடி மக்கள் இனிமேல் மின்சாரக் கட்டணமாக ஒரு பைசாகூட தர வேண்டிய அவசியம் இல்லை. இலவச மின்சாரம் என்று அறிவித்தார்.

எனவே கலைஞரைப் பொறுத்தவரையில் சொன்னதைச் செய்வார், செய்வதைத் தான் சொல்வார். அந்த உறுதிமொழிகள் எல்லாம் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும்.

எனவே அவர் வழி வந்திருக்கும் அவருடைய மகன் ஸ்டாலினும் நிச்சயமாக அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கையை திரும்பத் திரும்ப உங்களிடத்தில் நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

2006-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் தரப்படும் என்று சொன்னார்கள். ஆனால் யாருக்கும் தரப்படவில்லை என்று ஒரு ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் சொல்லியிருக்கிறார்.

அவர் அந்தக் கோப்புகளை, விவரங்களைப் பக்கத்தில் இருக்கும் திறமையான அதிகாரிகளைக் கேட்டிருந்தால் விளக்கத்தைச் சொல்லி இருப்பார்கள். ஆனால் அவர் அதை எதையும் செய்யாமல் வாய்க்கு வந்த படியெல்லாம் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல.

நான் ஆதாரத்தோடு சொல்கிறேன். 2006-ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 719 ஏக்கர் நிலத்தை, ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 159 விவசாயிகளுக்கு நிலத்தை வழங்கிய ஆட்சிதான் கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க. ஆட்சி.

இதை இல்லை என்று அவர் மறுக்கட்டும். நான் சொல்வது தவறு என்றால் என் மீது வழக்கு போடட்டும். அதை சந்திப்பதற்கு நான் தயார். 'தான் திருடி பிறரை நம்ப மாட்டான்' என்பது ஒரு பழமொழி.

அதேபோல, 2011 மற்றும் 2016-இல் தேர்தலைச் சந்தித்தபோது அ.தி.மு.க. பல்வேறு உறுதிமொழிகளை சொன்னது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் சொன்னார்கள். இதுவரையில் ரத்து செய்கிற எந்த முயற்சியிலும் அவர்கள் ஈடுபடவில்லை. அனைவருக்கும் செல்போன் கொடுப்போம் என்று சொன்னார்கள். இதுவரையில் கொடுக்கப்படவில்லை. இப்போது 2021 தேர்தல் அறிக்கையில் மிகப்பெரிய பொய், யாராலும் செய்ய முடியாத ஒன்றை பழனிசாமி அவர்கள் வெளியிட்டிருக்கிறார். அதாவது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு என்ற ஒரு அற்புதமான கற்பனையை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.

இன்றைய தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் இருக்கிறது. அதாவது அவர்கள் ஒரு கோடியே 97 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியுமா? நடக்கவே நடக்காது.

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. நம்முடைய தேர்தல் அறிக்கை எப்போதும் கதாநாயகன் தான். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், இளைஞர்களுக்கு - மாணவர்களுக்கு - படித்த பட்டதாரிகளுக்கு - வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு என அனைவருக்குமான திட்டங்களை மிகத் தெளிவாக அறிவித்திருக்கிறோம்.

அரசு ஊழியர்கள் ஓய்வு ஊதியம், 70 வயது நிறையும் போது 10 விழுக்காடும், 80 வயது நிறையும் போது 10 விழுக்காடும் உயர்த்தி வழங்கப்படும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவோம், மாநில நிர்வாக தீர்ப்பாயமும் தலைமைச் செயலாளர், துணைச் செயலாளர், துறைத் தலைவர் தலைமையிலான கூட்டு ஆலோசனைக் குழுக்கள் மீண்டும் அமைக்கப்படும், இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என அ.தி.மு.க. ஆட்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். இப்போது சொல்கிறேன் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நாம் இந்தத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறோம்.

அம்பாசமுத்திரம், கல்லிடைகுறிச்சி புறவழிச் சாலை அமைக்கப்படும். ராதாபுரம், பனங்குடி ஆகிய ஊர்களில் புறவழிச் சாலையில் மேம்பாலங்கள் கட்டப்படும். நாங்குநேரியில் அரசு கலை அறிவியல் கல்லூரி. திருநெல்வேலியில் அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி. இராதாபுரம் தொகுதியில் அரசு மகளிர் கல்லூரி. திருநெல்வேலியில் சித்த மருத்துவப் பல்கலைக் கழகம். எல்காட் மென்பொருள் நிறுவனம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் அரசு மருத்துவமனையும், பேருந்து நிலையமும் அமைக்கப்படும். விக்கிரமசிங்கபுரம் இ.எஸ்.ஐ மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்தில் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும். விவசாயத்திற்காக பாபநாசம் அணையிலிருந்து ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும்.

இது அனைத்தும் ஐந்து ஆண்டு கால திட்டத்திற்கான வாக்குறுதிகளாக நாம் அளித்திருக்கிறோம்.

கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் ஒரு மாபெரும் மாநாடு போல ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அந்தச் சிறப்புக் கூட்டத்தில் நான் ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். 'ஸ்டாலினின் ஏழு வாக்குறுதிகள்' என்ற தலைப்பில் ஏழு உறுதிமொழிகள் அறிவித்தேன்.

பத்தாண்டுகாலத் தொலைநோக்குப் பார்வையோடு ஏழு அறிவிப்புகளை நான் அறிவித்தேன். தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட் தேர்வைத் திணித்து, மதவெறியைத் தூண்டும் அவர்களுக்கு நான் சொல்வது, இது திராவிட மண். ஒருபோதும் அது நடக்காது. உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு எடுபடாது.

எனவே நான் உங்களை அன்போடு கேட்பது, தமிழக மக்கள் வாக்களிக்கப் போகும் முன் நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். டெல்லியில் இருந்து கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மிரட்டலுக்கு அடிபணிந்து, தாங்கள் அடித்த கொள்ளைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள இங்கே பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி அடிபணிந்து அனைத்திற்கும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருக்கிறது. தேர்தலில் எவ்வளவு சீட் என்பதைக் கூட அவர்கள் தான் நியமிக்கிறார்கள். கூட்டணி யார் என்பதை அவர்கள் தான் நியமிக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை. அந்த நிலைமை தொடரலாமா? என்பது தான் என்னுடைய கேள்வி.

இந்தத் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் தான். மேலும் நம்முடைய சுயமரியாதையைக் காப்பாற்றபட வேண்டும் என்பதற்காக நடக்கின்ற தேர்தல். அதை நீங்கள் மறந்து விடக்கூடாது. மதவெறியைத் தூண்டி, நாட்டைக் குட்டிச் சுவராக்கி, இனக்கலவரத்தை நடத்தலாம், சாதிப் பெயரைச் சொல்லிக் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று திட்டமிட்டு மத்தியில் இருக்கும் மோடியும் அமித்ஷாவும் இன்றைக்குக் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் கனவை முடிவு கட்டும் தேர்தல்தான் இந்தத் தேர்தல். அதற்கு உங்களுடைய வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும் நம்முடைய கூட்டணி வேட்பாளர்கள் சின்னத்திலும் நீங்கள் வெற்றியைத் தேடித்தர வேண்டும்.

வேலை வாய்ப்புகளைப் பெருக்க, மாநில உரிமைகளைப் பாதுகாக்க, நெல்லைச் சீமையைக் காப்பாற்ற, நாம் இழந்த உரிமைகளை மீட்க - தலைவர் கலைஞர்தான் அடிக்கடி சொல்வார் உடன்பிறப்பே என்று. உடன்பிறப்பு என்றால் கழக உடன்பிறப்புகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழகத்தில் இருக்கும் அத்தனை பேரையும் உடன்பிறப்புகள் என்று கருதித்தான் தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள் - அந்த உரிமையோடு கேட்கிறேன். நாம் இழந்து நிற்கும் மரியாதையை மானத்தைக் காப்பாற்ற உரிமையை மீட்க இந்தத் தமிழகத்தை மீட்க வேண்டும். அதற்கு நீங்கள் எல்லாம் ஆதரவுதர வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். நன்றி. வணக்கம்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+