முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் விடுபட்டுப் போன தியாகிகள் பெயர்கள்.. டாக்டர் ராமதாஸ் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய சுதந்திர தின உரையில் தேச விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர்கள் பெயர் விடுபட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை: இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களின் பங்களிப்பு குறித்த முழுமையான ஆவணம் ஒன்றை தமிழக அரசு தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது கண்டிப்பாக செய்ய வேண்டிய பணி என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஆனால், அதில் எந்தத் தலைவரின் பெயரும் விடுபடாமல் இருக்க வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியமாகும். சென்னை கோட்டைக் கொத்தளத்தில் நடைபெற்ற இந்தியாவின் 75ஆவது விடுதலை நாள் விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் விடுதலைக்காக போராடி தியாகங்களைச் செய்த தமிழ்நாட்டு தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்டார்.

Dr Ramadoss urges TN Govt should include All Freedom Fighters Name in Documentary

அலட்சியம்?
யாருடைய அலட்சியம்?

கடந்த ஆண்டு விடுதலை நாள் விழாவில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக் கொடியேற்றி வைத்து உரையாற்றிய போது குறிப்பிடப்பட்ட தலைவர்களின் பட்டியலில் இடம் பெறாத பாரதியார் உள்ளிட்ட 12 தலைவர்களின் பெயர்களை இன்றைய முதல்வர் கூடுதலாகக் குறிப்பிட்டார். இந்திய விடுதலைக்கு பங்களித்த எந்தத் தலைவரின் தியாகத்தையும் அலட்சியப்படுத்தி விடக் கூடாது என்பது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் கூடுதலாக 12 தலைவர்களின் பெயர்களை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்ததற்காக, கடந்த ஆண்டு விடுதலை நாள் விழா உரையில் அப்போதைய முதலமைச்சரால் நினைவு கூறப்பட்ட 15 தலைவர்களின் பெயர்கள் நடப்பாண்டு விடுதலை நாள் விழாவில் முதலமைச்சர் உரையில் இடம்பெறாதது மிகவும் வேதனையளிக்கிறது. இது அரசின் தவறா... அல்லது அதிகாரிகளின் அலட்சியமா? என்பது தெரியவில்லை.

இரட்டை மன்னர்கள்
போராடிய மன்னர்கள்

ஆனால், விடுதலைப் போராட்டத் தலைவர்களின் பெயர்களை நினைவு கூறத் தவறுவதை ஏற்க முடியாது. மாயூரம் நாகப்பன் படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர், காந்தவராயன் & சேந்தவராயன், தீரர் சத்தியமூர்த்தி, கண்ணியமிகு காயிதே மில்லத், வ.வே.சு அய்யர் உள்ளிட்ட தலைவர்கள் இந்திய விடுதலைக்கு ஆற்றிய பங்கை எவராலும் மறுக்க முடியாது. ஆனால், இவர்களின் பெயர்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் உரையில் இடம்பெறவில்லை. இவர்களில் மாயூரம் நாகப்பன் படையாட்சி மகாத்மா காந்தியடிகளின் அறப்போராட்டத் தோழர்; ஆங்கிலேயர்களின் இனவெறிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிர் நீத்தவர்; சத்தியாக்கிரகத்தில் உயிர்த்தியாகம் செய்த முதல் இந்தியர்; தென்னாப்பிரிக்காவில் அவரது நினைவிடத்தை காந்தியடிகளே அமைத்து திறந்து வைத்தார்; இப்போதும் தென்னாப்பிரிக்காவில் அவருக்கு நினைவுச் சின்னங்கள் உள்ளன என்பது போன்ற பல சிறப்புகள் நாகப்பன் படையாட்சிக்கு உண்டு.

ஆதிகேசவலு நாயக்கர்
சர்தார் ஆதிகேசவலு நாயக்கர்

சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் சென்னையிலுள்ள தமது சொத்துகளை ஏழைகளுக்கு வாரி வழங்கியவர்; விடுதலைப் போரில் 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்; இவரது வீரத்தையும், தீரத்தையும் பார்த்து வியந்த காந்தியடிகள், அவருக்கு சர்தார் பட்டத்தை வழங்கினார். சர்தார் வல்லபாய் படேலுக்கு இணையாக இந்தப் பட்டத்தை காந்தியடிகளிடம் பெற்ற இரு தமிழர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் யார்?
விடுபட்டவர்கள் யார்?

இவர்களைப் போலவே இரட்டை மன்னர்கள் காந்தவராயன், சேந்தவராயன், பகதூர் வெள்ளையத்தேவன், வீரன் அழகு முத்துக்கோன், வீரத்தாய் குயிலி, விருப்பாட்சி கோபால நாயக்கர், தியாகி சீனிவாசராவ், தியாகி விஸ்வநாத தாஸ், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், ரெபல் முத்துராமலிங்க சேதுபதி, வ.வே.சு அய்யர், ஜெய்ஹிந்த் செண்பகராமன், தீரர் சத்தியமூர்த்தி ஆகியோரும் இந்திய விடுதலைக்காக செய்த தியாகங்கள் ஏராளம். அந்த தியாகங்களும், அவர்களும் மறக்கப்படக்கூடாது; மறைக்கப்படக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் ஆகும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்திய விடுதலைக்காக போராடிய இந்த தலைவர்களின் பெயர்கள் முதலமைச்சரின் உரையில் விடுபட்டது தொடர்கதையாகிவிடக்கூடாது. இனிவரும் விடுதலை நாட்களில் இவர்களின் பெயர்கள் நினைவுகூறப்பட வேண்டும். இதுவரை விடுதலை நாள் விழா உரைகளில் குறிப்பிடப்படாத விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் போன்றவர்களின் பெயர்களும் விடுதலை நாள் விழாக்களில் போற்றப்பட வேண்டும்.

நினைவிடங்கள்
நாகப்பன் படையாட்சி யார்?

தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட உள்ள இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு என்ற தலைப்பிலான வரலாற்று ஆவணத்தில் இந்தத் தலைவர்கள் உள்ளிட்ட விடுதலைக்காக போராடிய அனைத்து தலைவர்களின் பங்களிப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும். இவர்களில் மாயூரம் நாகப்பன் படையாட்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் உள்ளிட்ட எந்தெந்த தலைவர்களுக்கெல்லாம் தமிழ்நாட்டில் நினைவிடங்கள் அமைக்கப்படவில்லையோ, அவர்கள் அனைவருக்கும் நினைவிடங்கள், உருவச்சிலைகள் போன்றவற்றை அமைத்து அவர்களை பெருமைப்படுத்துவதற்கும் அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நாகப்பன் படையாட்சியின் வரலாறு: தென்னாப்பிரிக்காவில் 1906-ம் ஆண்டு டிரான்சுவால் காலனி அரசாங்கம் அங்கு வாழ்ந்த இந்தியர்கள் தமது பெயரை அரசாங்கத்திடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்கிற ஏசியாடிக் பதிவு சட்டத்தை கொண்டுவந்தது. இச்சட்டம் இந்தியர்களை துன்புறுத்துவதாகவும் கண்ணியத்தை குலைப்பதாகவும் இருப்பதாகக் கூறிய காந்தி அடிகள், இந்தியர்கள் அதனை எதிர்க்க அழைப்பு விடுத்தார். அதை ஏற்று ஏசியாடிக் பதிவு சட்டத்தை எதிர்த்து போராடிய நாகப்பன் படையாட்சி 1909-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் நாள் கைது செய்யப்பட்டு 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலும் ஆங்கிலேயரை எதிர்த்ததால் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். 10 நாள் கொடுமைக்குப் பிறகு ஜூன் 30-ம் நாள் விடுதலை செய்யப்பட்ட அவர், சித்திரவதையின் விளைவுகளால் ஜூலை 6-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கான நினைவிடத்தை தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளே உருவாக்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+