அமெரிக்காவின் 'வியூக பல்டிகளும்'-இந்தியாவி்ன் கவலையும்!

Subscribe to Oneindia Tamil

-ஏ.கே.கான்

(ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த கட்டுரை தொடர்ச்சி)

2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசிய அஹமத் ஷா மசூத் கூறியது இது தான்: ''சோவியத்தை வென்றுவிட்டோம் என்ற இறுமாப்பில் ஆப்கானி்ஸ்தான் பிரச்சனையை மிக லேசாக எடுத்துக் கொள்ளாதீ்ர்கள். அங்கு தலிபான்களின் பிடியில் மகா கொடுமைகள் நடக்கின்றன. அதை தடு்க்க வேண்டிய பொறுப்பு ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் உண்டு.

தலிபான்கள் உதவியோடு அங்கு பின் லேடனின் அல்-கொய்தா பலமாகிக் கொண்டிருக்கிறது. மேலும் அவர்கள் அமெரிக்காவில் பயங்கர தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகவும் எனக்கு வரும் உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிக விரைவிலேயே அமெரிக்காவில் மாபெரும் தாக்குதல் நடக்கப் போகிறது'' என்றார் மசூத்.

ஆனால், தலிபான்களுக்கு எதிராக மசூத் ஏதோ உளறுகிறார் என்ற அளவோடு அவரது பேச்சை ஐரோப்பிய நாடுகளும் மதிக்கவி்லலை, அமெரிக்காவும் மதிக்கவில்லை.
---------------------------------------------

செப்டம்பர் 9, 2001
இடம்-கிவாஜே பாஹா ஓ டின், வடக்கு ஆப்கானிஸ்தான்

அஹமத் ஷா மசூதை சந்திக்க இரு அரபு நாட்டு டிவி 'நிருபர்கள்' வந்து ஒரு வாரமாகக் காத்திருக்கின்றனர். போர் முனையில் இருக்கும் மசூத், 9ம் தேதி காலை அவர்களை சந்திப்பதாக அப்பாயின்மெண்ட் தருகிறார்.

சொன்னபடியே அந்த தினத்தில் கிவாஜே பாஹா ஓ டின், பகுதிக்கு வருகிறார். வந்தவுடன் அந்தப் பகுதியின் நிலைமை குறித்து தனது தளபதிகளுடன் பேசிவிட்டு 'நிருபர்களை' சந்திக்க மகிழ்ச்சியாக வருகிறார்.

'நிருபர்களுக்கு' தனது கையால் டீயை பரிமாறிவிட்டு பேச அமர்கிறார். அடுத்த நொடியே டிவி கேமராவில் இருந்த மிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்து சிதறுகிறது. அந்த இடமே சுக்குநூறாகிறது. அங்கிருந்த இரு நிருபர்களில் ஒருவர் உள்பட பலரும் பலியாகிவிட, மசூத் மிக பலத்த காயமடைகிறார்.

உயிரோடு இருக்கும் ஒரு 'நிருபர்', உடனே தனது சேட்டிலைட் போனில் யாரையோ தொடர்பு கொண்டு மசூத் படுகாயமடைந்த விஷயத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு சொல்கிறார்.

குண்டுவெடிப்பு சத்தம் கேட்டு ஓடி வந்த மசூதின் பாதுகாவலர்கள் அந்த 'நிருபரை' அங்கேயே சுட்டுத் தள்ளுகின்றனர்.

வந்தவர்கள் நிருபர்கள் அல்ல.. பின் லேடன் அனுப்பிய தறகொலைப் படையினர்.

மசூத் படுகாயமடைந்த செய்தி ரஷ்யா, ஈரான், இந்தியத் தலைவர்களுக்கு வந்து சேருகிறது. அவருக்கு வடக்கு ஆப்கானிஸ்தானி்ல் உள்ள இந்திய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காயங்கள் மிக பலமாக இருப்பதால் அவரை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ரஷ்யா கொண்டு செலகின்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறக்கிறார்.

மசூத் இல்லாத நிலையில் ஆப்கானி்ஸ்தானில் தலிபான்களை எதிர்த்துப் போரிட யாரும் இல்லாத ஒரு வெற்றிடம் உருவாகிறது.

மசூத் பலியான விவரத்தை வெளியிடாமல் மூடி மறைக்கலாம் என்று ரஷ்யா-இந்தியா-ஈரான் திட்டமிட, இந்த விவரம் அமெரிக்க, ஐரோப்பிய உளவுப் பிரிவுகளுக்குப் போய்ச் சேருகிறது.

ஆனால், அப்போதும் கூட இதெல்லாம் 'ஆப்கானி்ஸ்தான்ல சகஜமப்பா' என்று தான் பிரச்சனையை எடுத்துக் கொண்டனரே தவிர, அந்தக் கொலைக்கு எந்த முக்கியத்துவத்தையும் தரவி்ல்லை.
--------------------------------------------------

இரண்டு நாட்களுக்குப் பின்..
செப்டம்பர் 11, 2001
நியூயார்க்

பின் லேடன் அனுப்பிய 19 அல்-கொய்தா தீவிரவாதிகள் 4 விமானங்களைக் கடத்தி நியூயார்க்கை சிதறடிக்கின்றனர். அமெரிக்கா நிலைகுலைகிறது, உலகமே அச்சத்தில் உறைகிறது.
---------------------------------------------------

அமெரிக்காவைத் தாக்கிய பின் என்ன நடக்கும் என்பதை யூகித்த பின் லேடன் மிகக் கச்சிதமாகக் கணக்கிட்டு முதலில் மசூதின் கதையை முடித்தார். மசூதுக்கு அமெரிக்க ஆயுத உதவி கிடைத்தால், அடுத்த சில மாதங்களிலேயே (அல்லது ஆண்டுகளிலேயே) அவரால் தலிபான்களை விரட்டியடித்து அவர்கள் வசம் இருக்கும் பகுதியை மீட்டுவிட முடியும் என்பது பின் லேடனுக்குத் தெரியும்.

ஆப்கானிஸ்தானின் மூலை முடுக்கையெல்லாம் அறிந்தவர் என்பது மட்டுமல்ல, சோவியத் யூனியனுக்கு எதிராக முஜாகிதீன்களுடன் இணைந்து மண்ணிலும் மலைகளிலும் புரண்டு போர் நடத்தியவர் மசூத். தலிபானை சமாளிப்பது அவருக்கு அத்துப்படி.

அதே நேரத்தில் மசூத் இல்லாத நிலையில், அமெரிக்காவால் தரையில் வந்து தாக்கி தலிபான்களை ஒடுக்குவது இயலாத காரியம் என்பதும் லேடனுக்குத் தெரியும்.

இதனால் தான் அமெரிக்காவைத் தாக்கும் முன் முதலில் மசூதி்ன் கதையை முடித்தது அல்-கொய்தா.
-------------------------------------------------

பின் லேடன் கணக்கிட்டது போலவே இப்போது ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்டு அமெரிக்கா படும் பாடு அவர்களைத் தவிர யாராலும் விவரிக்க முடியாது.

இரண்டு அமெரி்க்க ஜனாதிபதிகள்.. 3 ஆட்சிகளையும் தாண்டி ஆப்கானிஸ்தான் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போது 'நேடோ படைகள்' என்ற பெயரில் ஆப்கானி்ஸ்தானில் அமெரிக்கா மட்டும் தான் அங்கு சண்டை போட்டுக் கொண்டுள்ளது. மற்ற அமெரிக்க ஆதரவு நாடுகள் எல்லாம் வரிசையாகக் கழன்று கொண்டுவிட்டன.

இங்கிலாந்து மட்டும் தான் அமெரிக்காவுடன் நிற்கிறது. ஆனாலும் போதிய அளவில் வீரர்களைத் தர மறுக்கிறது.

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியே ஆக வேண்டிய நிலைக்கு அமெரி்க்கா தள்ளப்பட்டுவிட்டது. ஆனால், ஆப்கானிஸ்தானை அப்படியே விட்டுவிட்டுப் போய் விடாதீ்ர்கள் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிடம் கெஞ்சிக் கொண்டுள்ளன.

காரணம், ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறினால் அந்த நாடும் தலிபான்களும் மீண்டும் பாகிஸ்தான் உளவுப் பிரிவின் கட்டுப்பாட்டில் வந்துவிடுவார்கள் என்ற அச்சம் தான்.

ஆனால், அமெரிக்கா பொறுமை இழந்துவிட்டதாகவே தெரிகிறது. இந்தக் கட்டுரையின் முதல் பாகத்தின் துவக்கத்தில் நான் சொன்னதை இங்கே நினைவுகூர்வது அவசியம்.

இரு வாரங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து லண்டனில் நடந்த ஒரு மாநாட்டில் அமெரிக்கா ஒரு மிக முக்கிய முடிவை எடுத்தது என்று சொல்லியிருந்தேனே.

அது இது தான்..

ஆப்கானிஸ்தானி்ல் உள்ள 'நல்ல' தலிபான்களுடன் (!!) ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வது. ஆட்சியை அவர்களிடம் தருவது அல்லது ஆட்சியில் அவர்களுக்கும் பங்கு தருவது.

அதன் பின்னர் தனது படைகளை படிப்படியாக வாபஸ் பெற்றுக் கொண்டு இனிமேல் தவறிப் போய் கூட ஆப்கானிஸ்தான் பக்கமே திரும்பிப் பார்க்காமல் இருப்பது... இது தான் அமெரிக்கா எடுத்துள்ள புதிய முடிவு!.

இந்த முடிவுக்கு அமெரிக்கா வர முக்கியமாக விளங்கியது பாகிஸ்தான் தான்.

''இன்னும் 50 வருடம ஆப்கானி்ஸ்தானில் படைகளை நிறுத்தி வைத்தாலும் உங்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. இந்த விவகாரத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்... எங்களுக்குத் தேவையான ஆயுதங்கள், நிதியைக் கொடுக்க வேண்டியது தான். தேவைப்பட்டால் எங்களது ராணுவத்தோடு ரகசியமாக இணைந்து தலிபான்களை கட்டுப்படுத்தும் வேலைகளைப் பாருங்கள். இனியும் ஆப்கானிஸ்தானில் படைகளை நிறுத்தி வைத்துக் கொண்டு நேரடியாக தலிபான்களுடன் சண்டை போட்டு உங்கள் பணத்தையும் நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்காதீர்கள்... வேண்டுமானால் தலிபான்களில் ஒரு பிரிவினரை உங்களுடன் கைகோர்க்க வைக்கிறோம். அவர்கள் வசம் நாட்டை ஒப்படைத்துவிட்டு நடையைக் கட்டுங்கள்.. அவர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்யுங்கள்.. அவர்கள் மற்ற தலிபான்களை சமாளித்துக் கொள்வார்கள்..''

இது தான் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் போட்டுத் தந்துள்ள பிளான்.

அமெரிக்கா எப்படி தலிபான்களுடன் கைகோர்க்க முடியும் என்ற கேள்வி எழும் அல்லவா.. அதற்கு அமெரிக்காவும் பாகிஸ்தானும் உருவாக்கி வைத்துள்ள பதில் தான் 'நல்ல தலிபான்'.

அதாவது இதுவரை தலிபான்கள் என்றாலே மோசமானவர்கள் என்று சொல்லி வந்த அமெரிக்கா.. அதில் ஒரு தரப்பினரைப் பிரித்து அவர்களுடன் ஒரு அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகிறது. அவர்களுக்கு 'நல்ல தலிபான்' என்று பெயர் சூட்டப் போகிறது.

இந்த 'நல்ல தலிபானும்', பாகிஸ்தானும் அமெரிக்காவின் கண்காணிப்பில் கீழ் இணைந்து செயல்படுவார்கள்.

இந்த 'நல்ல தலிபானிடம்' அமெரிக்கா வைக்கப் போகும் ஒரே கோரிக்கை.. எங்கள் நாட்டுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்படும் களமாக ஆப்கானி்ஸ்தான் இருக்கக் கூடாது. அதை நீங்கள் உறுதி செய்தால் போதும்.. நீங்கள் அதைச் செய்தால் உங்களுக்கு எங்கள் ஆதரவும் உதவியும் தொடரும்.

இதை ஏற்றுக் கொண்டு, பிற தலிபான் குழுக்களை ஒடுக்க முன் வரும் தலிபான் பிரிவுகளுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சில தலிபான் பிரிவுத் தலைவர்களோடு பேச்சு நடத்தவும் ஆரம்பித்துவிட்டு சிஐஏ. இதற்காக அவர்களை தீவிரவாதிகள் லிஸ்டில் இருந்து நீக்கிவிட்டதோடு, ஐ.நா. மூலமாக அவர்கள் மீது போடப்பட்ட தடைகளையும் நீக்கியுள்ளது. (மொத்தம் 268 அல்-கொய்தா, 137 தலிபான் தலைவர்கள் மீது இந்தத் தடைகள் அமலில் உள்ளன)

அதில் முக்கியமானவர் வகீ்ல் அஹமத் முட்டாவகீல். தலிபான் ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் இவர். இவர் இப்போது சிபிஐவின் தீவிரவாத லி்ஸ்டிலும் இல்லை, இவர் மீது ஐ.நா. விதித்த தடைகளும் கடந்த வாரத்தில் திடீரென காணாமல் போய்விட்டன. (அமெரிக்கக் கோரிக்கைப்படி நீக்கப்பட்டுவிட்டன)

அதே போல மேலும் 5 முக்கிய தலிபான் தலைவர்கள் மீதான தடைகளும் நீக்கப்பட்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கான வேலைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

ஆனால், தலிபான்களின் மிக முக்கியத் தலைவரான முல்லா ஒமர் உடனோ அல்லது இப்போது அமெரிக்கப் படைகளை மிகத் தீவிரமாக தாக்கி வரும் ஹக்கானி நெட்வொர்க் (Haqqani network) பிரிவு தலிபான்களுடன் எந்தக் காரணம் கொண்டும் பேச்சு அமெரி்க்கா பேச்சு நடத்தாதாம். இவர்கள் மீதான தடைகளும் தொடருமாம்.

மேலும் பல தலிபான் பிரிவுகளையும் தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு வர வைக்கும் நெருக்கடி உத்திகளில் ஒன்றாக, கடந்த 10ம் தேதி முதல் ஆப்கானி்ஸ்தானில் மிக பயங்கரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டுள்ளது அமெரிக்கா (ஆப்கனில் அதி தீவிர தாக்குதலுக்கு தயாராகும் நேட்டோ).

எங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திவிட்டு பேச்சு நடத்த வந்தால் நீங்கள் 'நல்ல தலிபான்' லிஸ்டில் சேருவீர்கள்.. இல்லாவிட்டால் 'உதை தான்' என்பதைத் தான் தனது இந்த லேட்டஸ்ட் தாக்குதல் மூலம் சொல்கிறது அமெரிக்கா.

இவ்வாறு, ஆப்கானில்தான் விவகாரத்தில் அமெரிக்கா அடிக்க ஆரம்பித்துள்ள 'வியூக பல்டிகளை' மிகக் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியா.

இதில் இந்தியாவுக்கு என்ன பிரச்சனை...?

(தொடரும்)

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+