2014 நாடாளுமன்றத் தேர்தல்... 12 பிரதமர்கள் ரெடி!

Subscribe to Oneindia Tamil

2014: The Countdown begins
-ஏ.கே.கான்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் இருந்தாலும், பிரதமர் பதவிக்கு கிட்டத்தட்ட ஒரு டஜன் 'கேண்டிடேட்டுகள்' தயாராகிவிட்டனர்.

கடந்த இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி இப்போது மிக மிக பலவீனமாக நிலையில் உள்ளது. விலைவாசி உயர்வும், ஊழல் குற்றச்சாட்டுகளும் காங்கிரஸ் கூட்டணி அரசை கலகலக்க வைத்துவிட்டது.

ஆதர்ஷ், காமன்வெல்த், இஸ்ரோ என பல ஊழல்கள் காங்கிரஸ் கூட்டணி மீது கறையாகப் படிந்து நின்றாலும் ஊழலுக்கெல்லாம் ஊழலாக நிற்பது ஸ்பெக்ட்ரம் ஊழல் தான். இதற்குக் காரணமான திமுக மீது நடவடிக்கை எடுத்து கனிமொழி, ராசாவை உள்ளே தள்ளினாலும் கறை இன்னும் போகவில்லை.

ஆனாலும், மத்தியில் ஆட்சியில் நீடிக்க திமுகவின் ஆதரவு நிச்சயம் தேவை என்ற நிலையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் சுமையோடு திமுகவையும் சேர்த்துக் கொண்டு காங்கிரஸ் சுமந்து நிற்கிறது.

இதை வைத்து அரசியல் லாபம் அடையும் நிலையில் பாஜக இல்லை. அந்தக் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல்கள் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த விஷயத்தில் காங்கிரஸையே வென்றுவிட்டது பாஜக. மாநிலத்துக்கு மாநிலம் பல கோஷ்டிகள் என்றால், தலைமையிலும் பல கோஷ்டிகள்.

அருண் ஜேட்லியும் சுஷ்மா சுவராஜும் ராகுல் காந்தியைக் கூட பிரதமராக ஏற்றுக் கொள்வார்களே தவிர, சுஷ்மா பிரதமராவதை ஜேட்லியோ, ஜேட்லி பிரதமராவதை சுஷ்மாவோ ஏற்க மாட்டார்கள்.

அதே போல, அத்வானி பிரதமராகிவிடாமல் தடுக்க கட்சியில் ஏராளமானோர் வரிசை கட்டி நிற்க, நரேந்திர மோடியை தடுக்கவும் அத்வானி கோஷ்டி என்றும் தயார்.

இது தவிர கர்நாடகத்தில் பாஜக அரசில் நடந்துள்ள ஊழல்கள், அந்தக் கட்சி எந்த ஊழலைப் பற்றியும் பேசக் கூட முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டது. தென்னிந்தியாவின் முதல் பாஜக அரசு என்ற பெருமையோடு ஆட்சிக்கு வந்த பாஜக, கர்நாடக அரசியல் வரலாற்றிலேயே மிகப் பெரும் ஊழல்களைச் செய்த பெருமையோடு நிற்கிறது.

மேலும் பாஜகவை காங்கிரசுக்கு மாற்றான கட்சியாக மக்கள் கருதவில்லை என்பதும் கடந்த ஆண்டு நடந்த பிகார், ஒரிஸ்ஸா சட்டமன்றத் தேர்தல்களும் சமீபத்தில் நடந்த உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களும் நிரூபித்துவிட்டன.

பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எவ்வளவு தான் அசிங்கப்படுத்தினாலும் விடாமல் அதன் மீது ஒட்டிக் கொண்டு நின்றதால், தான் மரியாதைக்குரிய இடங்களில் பாஜக வென்று கூட்டணி ஆட்சியில் இடம் பிடித்தது.

ஒரிஸ்ஸாவில் பாஜகவைக் கழற்றிவிட்டதால் தான் பிஜூ ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக் வெல்லவே முடிந்தது, ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

இதே நிலை தான் சமீபத்தில் பஞ்சாப் தேர்தலிலும் நடந்துள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த தேர்தலைவிட குறைந்த இடங்களில் தான் பாஜக வென்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான அகாலிதளம் கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் வென்றதால் தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடிந்துள்ளது.

உத்தர்கண்ட் மாநிலத்திலும் பாஜக அரசு மீது ஏராளமான ஊழல் புகார்கள். இதனால் கடைசி நேரத்தில் முதல்வரை மாற்றி தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைக்கு அந்தக் கட்சி தள்ளப்பட்டது. ஆனாலும் தோல்வியே மிஞ்சியது.

உத்தரப் பிரதேசத்தில் சொல்லவே வேண்டாம். அயோத்தி அலையில் மட்டுமே ஆட்சியைப் பிடித்த பாஜக மீண்டும் அங்கு எழவே இல்லை. இரண்டாம் இடத்துக்குப் போய், இப்போது 3வது இடத்துக்குப் போய்விட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4வது இடத்துக்கும் போனது பாஜக.

கிட்டத்தட்ட 80 எம்பிக்களை, அதாவது நாடாளுமன்றத்தில் மொத்த எம்பிக்களில் 7ல் ஒருவரைத் தேர்வு செய்யும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் நிலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பாஜக இத்தனை இடங்களில் நிச்சயம் வெல்லும் என்று சொல்ல முடியாத நிலை தான் உள்ளது.

இதைவிட மோசமான நிலையில் உள்ளது காங்கிரஸ். ராகுல் காந்தி தான் அடுத்த தலைமுறைக்கான தலைவர் என்று காங்கிரஸ்காரர்களால் ஊதப்பட்டு, உத்தரப் பிரதேசத்தில் முன் நிறுத்தப்பட்ட ராகுல் என்ற பலூன், இப்போது புஸ்!.

இது அடுத்த தேர்தலில் காங்கிரசுக்கு கிடைக்கப் போகும் அதிர்ச்சிக்கு ஒரு முன்னோட்டம் என்றெ சொல்லாம்.

காங்கிரஸ் கூட்டாளியான திமுகவின் நிலைமையும் படுமோசம். சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் திமுக வென்று காட்டினால் அதன் மீதான ஊழல் கறை கொஞ்சம் கரையலாம். படுதோல்வியை சந்தித்தால், திமுக மீண்டு எழுவதற்குள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வந்து போய்விடும்.

இப்படியாக தேசியக் கட்சிகளான காங்கிரசும் பாஜகவும் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டிருக்க மீண்டும் 4வது அணி குறித்த பேச்சுக்கள் பலமாகி வருகின்றன.

1989ம் ஆண்டில் வி.பி.சிங் போட்டுத் தந்த கோட்டில் தான் இப்போதைய மத்திய அரசியலே நடந்து கொண்டுள்ளது. அவர் வகுத்துத் தந்த மாநில கட்சிகளின் ஆதரவுடனேயே மத்தியில் ஆட்சி என்ற சித்தாந்தம் இன்று வரை பலத்துடன் நிற்கிறது.

அவர் அமைத்த தேசிய முன்னணி பார்முலா தான் இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸோ அல்லது பாஜகவோ யாராக இருந்தாலும் மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சியை நடத்தி வருகின்றன.

அடுத்த தேர்தலிலும் மாநிலக் கட்சிகளே அடுத்த பிரதமரை தீர்மானிக்க உள்ளன. வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணியை உருவாக்கிய கட்சிகளே இப்போதும் இதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

முலாயம் சிங், லாலு பிரசாத், என்.டி.ராமா ராவ், கருணாநிதி, பிஜூ பட்நாயக், தேவி லால், முப்தி முகம்மத் சயீத், சரத் யாதவ், நிதிஷ் குமார், அஜீத் சிங், எஸ்.ஆர்.பொம்மை, அஸ்ஸாம் கன பரிஷத்தின் பிரபுல்ல குமார் மொகந்தா, ராமகிருஷ்ண ஹெக்டே, சந்திரசேகர் போன்ற தலைவர்களை ஒருங்கிணைத்து ஒரு அரசியல் வானவில்லை உருவாக்கிக் காட்டினார் வி.பி.சிங். அப்போது லாலு, முலாயம், தேவ கெளடா, ஹெக்டே, பொம்மை, நிதிஷ் குமார், சரத் யாதவ், அஜீத் சிங் ஆகிய சோஷலிஸ்டுகள் ஜனதா தளம் என்ற அணியில் இருந்தனர்.

இவர்களில் பிரதமர் பதவிக்கு அலைந்த தேவி லால், சந்திரசேகர் ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் வி.பி.சிங்கை தலைவராக ஏற்றனர். அவரே பிரதமராக ஆதரவும் கொடுத்தனர்.

அப்போதைய தேர்தலில் சுமார் 145 இடங்களைப் பிடித்து காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆட்சியைப் பிடித்தார் வி.பி.சிங். அந்தத் தேர்தலில் தான் முதன்முதலாக பாஜக 89 இடங்களில் வென்றது. பாஜக-இடதுசாரிகள் என அரசியலின் இரு வேறு துருவங்களில் நிற்கும் இரு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கும் வந்தார் வி.பி.சிங்.

ஆனால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமலாக்கியதால், அவரை பெரிய வில்லனாக சித்தரித்தன மீடியாக்கள். இதையடுத்து ராமர் கோவில் கட்ட ரத யாத்திரை நடத்தி, வி.பி.சிங்கின் ஆட்சியையும் பாஜக கவிழ்த்தது.

இதையடுத்து சந்திரசேகர் சில காலம் ராஜிவ் காந்தி ஆதரவோடு ஆட்சி நடத்த, அதையும் கவிழ்த்தது காங்கிரஸ். தொடர்ந்து 1991ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது ராஜிவ் காந்தி கொல்லப்பட, அந்த அனுதாப அலையில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் சார்பில் நரசிம்ம ராவ் ஆட்சிக்கு வந்தார். அதுவும் கூட்டணி ஆட்சி தான்.

பின்னர் 1996ம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணி வெல்ல ஆட்சிக்கு வந்த பிரதமர் வாஜ்பாயால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியவில்லை. இதனால் 13 நாட்களில் ஆட்சியை இழந்தார்.

இதையடுத்து திடீரென யாரும் எதிர்பாராத வகையில் தேவ கெளடா பிரதமராகி, காங்கிரஸ் ஆதரவுடனான கூட்டணி ஆட்சியை நடத்தினார்.

அவரை காங்கிரஸ் கவிழ்க்க, ஐ.கே.குஜ்ரால் பிரதமரானார். அதுவும் கூட்டணி ஆட்சியே. (அந்தத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் என்ற ஒன்று புதிதாகக் கேட்டது. இதனால் மூப்பனாரில் தமிழ் மாநில காங்கிரசும் திமுகவும் கூட்டணி அமைத்து 37 எம்பி பதவிகளைப் பிடித்தன. அதிமுக வெறும் 2 இடங்களில் தான் வென்றது.)

இதையடுத்து 1998ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தது பாஜக. ஆனால், 13 மாதத்தில் அந்த ஆட்சியைக் கவிழ்த்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதைத் தொடர்ந்து 1999ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சிக்கு வந்தது. மீண்டும் 3வது முறையாக பிரதமரானார் வாஜ்பாய். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தது.

2004ம் ஆண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது, 2009ம் ஆண்டிலும் கூட்டணிக் கட்சிகளுடன் தான் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இவ்வாறாக வி.பி.சிங்குக்குப் பின் இந்தியாவில் எந்தத் தனிக் கட்சியும் ஆட்சிக்கு வரவில்லை.

இந் நிலையில் 2014ம் ஆண்டில் நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் மீண்டும் தனியாக ஒரு அணி அமைக்கும் வேலையில் இறங்கியுள்ளன.

இந் நிலையில் பிரதமர் பதவியை எதிர்நோக்கி பாஜக, காங்கிரஸ், புதிதாக உருவாகப் போவதாக சொல்லப்படும் அணி ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 1 டஜன் பேர் குறி வைத்து காத்துக் கொண்டுள்ளனர்..

ஜெயலலிதா
நரேந்திர மோடி
அத்வானி
சுஷ்மா சுவராஜ்
அருண் ஜேட்லி
முலாயம் சிங்
சந்திரபாபு நாயுடு
நவீன் பட்நாயக்
மம்தா பானர்ஜி
நிதீஷ் குமார்
ராகுல் காந்தி
மீண்டும் மன்மோகன் சிங்..

கடந்த வாரம் வரை இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருந்தவர் மாயாவதி. ஆனால், உத்தரப் பிரேதச தேர்தல் முடிவுகள் அந்தக் கனவைக் கலைத்துவிட்டன.

இவர்கள் தவிர இன்னொருவரும் மிக ஆவலாய் காத்திருக்கிறார்.. அவர் தேவ கெளடா. இவர் நம்புவது மக்களையோ அல்லது கூட்டணிகளையோ அல்ல.

''நீங்கள் மீண்டும் பிரதமர் ஆவீர்கள்'' என்று ஒரு ஜோசியக்காரர் சொல்லியிருக்கிறாராம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+