FACT CHECK: போர் பதற்றம்.. நாடு முழுவதும் ஏடிஎம்கள் 2 டூ 3 நாட்கள் மூடப்படுகிறதா? உண்மை என்ன?
சென்னை: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் 2 முதல் 3 நாட்களுக்கு ஏடிஎம்கள் மூடப்பட இருப்பதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த தகவல் உண்மையா என்பது குறித்து பிஐபி விளக்கம் அளித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல் பாகிஸ்தானுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அடாவடியாக இந்தியாவை நோக்கி நேற்று முன் தினம் தாக்குதலை முன்னெடுத்தது.

இந்தியா பாகிஸ்தான் மோதல்
இந்தியாவின் எல்லையோர நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன்களை ஏவியது. இவற்றை இந்தியாவின் வான் தடுப்பு பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக அழித்தது. பாகிஸ்தான் திட்டத்தை எல்லாம் தவிடுபொடியாக்கியுள்ளது. இதனால் மேலும் டென்ஷன் ஆகியுள்ள பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இந்தியாவின் அதி நவீன பாதுகாப்பு கேடயங்கள் இத்தகைய தாக்குதல் முயற்சியை முறியடித்து பாகிஸ்தானுக்கு பதிலடியை கொடுத்து வருகிறது.
பாகிஸ்தானின் போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் உள்ளது. இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில் கடந்த சில தினங்களாக போலி செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. பொய்யான தகவல்களுடன் மக்களை மேலும் அச்சப்படுத்தும் விதமாக பரப்பபடும் தகவல்களை சமூக வலைதளங்களில் மக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஏடிஎம்கள் மூடப்படுகிறதா
இந்த நிலையில்தான், நேற்று பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீரில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. குறிப்பாக எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்தது. எனினும் விழிப்புடன் இருந்த இந்திய ராணுவம் அவர்களது நடவடிக்கைகளுக்கு உடனுக்குடன் இடைமறித்து அழித்தனர். எனினும் தொடர் பதற்றம் காரணமாக எல்லை மாநிலங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது. முக்கியமான விமான நிலையங்கள் மூடப்பட்டன.
பாதுகாப்பு கருதி நாட்டில் 27 விமான நிலையங்கள் 10 ஆம் தேதி வரை மூடப்பட்டது. இத்தகையை பதற்றத்துக்கு நடுவே தான், நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு ஏடிஎம்கள் செயல்படாது என்ற செய்தி வாட்ஸ் அப்களில் பரவியது. போர் நெருக்கடிக்கு மத்தியில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுவிட்டதோ என அச்சப்பட்ட நெட்டிசன்கள், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை அனுப்பி வைத்தனர். இதனால், இத்தகைய தகவல் காட்டுத்தீ போல பரவியது.
உண்மை என்ன?
இந்த நிலையில், இதுபோன்ற ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவும் ஏடிஎம்கள் நாடு முழுவதும் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்ற தகவல் போலியானது. வழக்கம் போல அனைத்து ஏடிஎம்களும் செயல்படும் என்று மத்திய அரசின் பிஐபி விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த போலியான தகவலை யாருக்கும் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுள்ளது.
அதேபோல, ஜம்மு விமானப்படை தளத்தில் வெடிபொருள் வெடித்ததாக நேற்று ஒரு தகவல் பரவியது. சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த தகவல் பொய்யானது என்று பிஐபியின் பேக்ட் செக் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. காபூல் விமான நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தாக்குதல் சம்பவத்தின் படத்தை வைத்து இது போல போலி செய்தி பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications