Fact check: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? ஷாக் அடிக்கும் வதந்தி.. உண்மை இதுதான்!
சென்னை: வீடுகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மின்சாரத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வதந்திகள் வேகமாக பரவி வருகின்றன.
அதிமுக ஆட்சியில், வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஒரு வீட்டில் இரண்டு இணைப்புகள் இருந்தால், அந்த வீட்டின் உரிமையாளரும், வீட்டில் வாடகைக்கு உள்ளவர்களும், 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தைப் பெற்று வந்தனர்.

தற்போது, வீட்டின் உரிமையாளர் பெயரில் ஒரு மின் இணைப்பு மட்டுமே அனுமதிக்க உள்ளதாகவும், அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு வீட்டில் இரண்டு மின் இணைப்பு இருந்து, மின் வாரிய ஊழியர்கள் கணக்கெடுப்புக்கு வரும்பொழுது, வீட்டு உரிமையாளர் ஒரு பகுதியிலும், வாடகைக்கு இருப்பவர் மற்றொரு பகுதியிலும் குடியிருந்தால், இரண்டு மின் இணைப்புகளுக்கும் தற்போதுள்ள 100 யூனிட் விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.
ஆனால், வாடகைக்கு இருப்பவர் அந்த வீட்டை காலி செய்துவிட்டால் உடனடியாக வீட்டு உரிமையாளரின் பெயரில் உள்ள இரண்டு மின் இணைப்புகளில் ஒரு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ஒரு மின் இணைப்பு மட்டுமே வழங்கப்படும். மீண்டும் அந்த வீட்டில் வாடகைக்கு வேறொருவர் வந்தால், அந்த உரிமையாளர், வாடகைதாரர் வந்துள்ளதாகக் குறிப்பிட்டு, மீண்டும் புது மின் இணைப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதை குறிப்பிட்டுதான் சமூக வலைத்தளங்களில், 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்று பேசப்பட்டு வருகிறது. இரண்டு மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக மாற்றுவதிலும் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.
அதாவது மேற்குறிப்பிட்டதை போல, ஹவுஸ் ஓனருக்கு மட்டும்தான் மின் இணைப்பு என்றால், மீண்டும் துண்டிக்கப்பட்ட இணைப்பை பெற, மீண்டும் வைப்புத் தொகை, முன்பணம் போன்ற மின்சாரக் கட்டணங்களை செலுத்தி, புது மின் இணைப்பு வருவதற்குள் வாடகைக்கு வந்தவர் வீட்டையே காலி செய்துவிட்டுப் போய்விடுவார்கள்.
எனவே, வீட்டு உரிமையாளர்கள் தங்களிடம் இருக்கும் ஒரே மின் இணைப்பில் வாடகைதாரர்களுக்கும் மின் வசதி வழங்கி, வாடகைதாரர்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு அதிக மின் கட்டணம் வசூலிக்கும் வாய்ப்புகள் அதிகம் உருவாகும் என்று சொல்லப்படுகிறது.
இப்படி இருக்கையில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக வதந்தி பரப்பப்படுவதாகவும், அப்படியான திட்டம் ஏதும் இல்லை என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுகிறது.
முடிவு
வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருப்பின் அது ஒன்றாக இணைக்கப்படும். 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படமாட்டாது என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.












Click it and Unblock the Notifications