FACT CHECK - 142 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்டை வரவேற்கிறோம்.. எடப்பாடி பழனிசாமி இப்படி சொன்னாரா?
டெல்லி: மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தது சரிதான் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக ஒரு செய்தி பகிரப்பட்டு வருகிறது. அதன் உண்மைத் தன்மை குறித்து பார்ப்போம்.
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலர் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கர்நாடக மாநிலம் மைசூர் தொகுதி பாஜக எம்.பி. பார்வையாளர் மாடத்துக்கான டிக்கெட் வழங்கியது சந்தேகத்தை கிளப்பியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கு விளக்கமளிக்க வலியுறுத்தியும், இது தொடர்பாக பாஜக எம்பி மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவசைகளிலும் அமளியில் ஈடுபட்ட நிலையில், அடுத்தடுத்து எம்பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்த்து மொத்தமாக 142 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் நாடாளுமன்றத்துக்கே வராத எம்பிக்களும் அடக்கம் என்று கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எதிர்க்கட்சி எம்பிக்களில் மூன்றில் 2 பங்கு எம்பிக்கள் இல்லாமல் நடந்து வருகிறது.
எதிர்க்கட்சி எம்பிக்கள் இல்லாமலே பல முக்கிய மசோதாக்களை மத்திய அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றி வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சி எம்பிக்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இடைநீக்கம் சரிதான் என்று அதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் ஒரு முன்னணி ஊடகத்தின் லோகோவுடன் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது.
அதில், "142 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தது சரியே! மக்களவையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை மத்திய அரசே சரி செய்துவிடும். இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தக் கோரியது ஜனநாயகத்திற்கு விரோதமானது. நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்! - எடப்பாடி பழனிசாமி" என்று இருந்தது. அரசியல் பழகு என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டது.
இதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட ஊடகத்தின் சமூக வலைதள பக்கத்தில் இதை தேடினோம். அதில் இந்த கார்டு பகிரப்படவில்லை. வேறு ஊடகங்களிலும் இதுபோன்ற செய்தி வெளியாகவில்லை. அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமியின் சமூக வலைதள பக்கங்களில் தேடியபோதும் இதுபோன்ற கருத்துக்கள் அதில் குறிப்பிடப்படவில்லை. ரிவர்ஸ் இமேஜ் தேடலில் நாம் பார்த்தபோது கடந்த 20 ஆம் தேதி இது முதலில் பகிரப்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட ஊடகமும் இதுபோன்ற கார்டை வெளியிடவில்லை என மறுத்து உள்ளது. இதன் மூலம் இது தவறான செய்தி என்பது உறுதியாகிறது.

Fact Check
வெளியான செய்தி
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 142 எதிர்க்கட்சி எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ததற்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
முடிவு
எடப்பாடி பழனிசாமி இப்படி சொன்னதாக பகிரப்பட்ட நியூஸ் கார்டு போலியானது












Click it and Unblock the Notifications