யுபிஎஸ்சி தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றாரா லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா மகள்? உண்மை என்ன?
டெல்லி: லோக்சபா புதிய சபாநாயகராக பாஜகவின் எம்பியான ஓம்பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஓம்பிர்லாவின் அஞ்சலி பிர்லா தேர்வு எழுதாமலே யுபிஎஸ்சி பணிக்கு சேர்ந்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது உண்மையா? வாங்க பார்க்கலாம்.
தொடர்ந்து 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராகி உள்ளார். மத்தியில் கடந்த 2 முறை பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்தது. ஆனால் இந்த முறை தனி மெஜாரிட்டி இல்லை. இதையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமைந்துள்ளது.

இதையடுத்து 28 ம் தேதி லோக்சபா சபாநாயகர் தேர்தல் ஜுன் 26ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடந்த தேர்தலில் லோக்சபா சபாநாயகராக குரல் வாக்கெடுப்பு மூலம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓம்பிர்லா வெற்றி பெற்றார். அவர் ‛இந்தியா' கூட்டணி வேட்பாளரான கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சுரேசை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஓம்பிர்லா 2வது முறையாக லோக்சபா சபாநாயகராகி உள்ளார். ஏற்கனவே அவர் கடந்த 2019 முதல் 2024 வரை சபாநாயகராக இருந்த நிலையில் அடுத்த 2 ஆண்டுகள் சபாநாயகராக செயல்பட உள்ளார். ஓம்பிர்லா ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் அந்த மாநிலத்தில் கோட்டா தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியான நிலையில் தற்போது 2வது முறையாக சபாநாயகராகி உள்ளார்.
இந்நிலையில் தான் தற்போது வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அதாவது ஓம்பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா தேர்வு எழுதாமலேயே யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக துருவ் ரதி (பரோடி) என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் அஞ்சலி பிர்லாவின் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதில், ‛‛இந்தியா நாட்டில் மட்டும் தான் யுபிஎஸ்சி தேர்வு எழுதாமலே பாஸ் ஆக முடியும். ஆனால் அதற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவின் மகளாக பிறக்க வேண்டும். ஓம்பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா யுபிஎஸ்சி தேர்வு எழுதாமலேயே அதில் பாஸாகி உள்ளார். அவர் அடிப்படையில் மாடல். மோடி அரசு கல்வி முறையை கேலிக்கூத்தாக்கி வருகிறது'' என விமர்சனம் செய்திருந்தார்.
அதேபோல் பலரும் பேஸ்புக் மற்றும் த்ரெட்ஸ் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் ஓம்பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா யுபிஎஸ்சி தேர்வு எழுதாமலே பாஸ் செய்தாரா? அவர் என்னவாக இருக்கிறார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:
அதாவது ஓம்பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா இவர் டெல்லி ராம்ஜாஜ் கல்லூரியில் டிகிரி முடித்தார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வை எழுதினார். அதன்பிறகே அவர் யுபிஎஸ்சி பணிக்கு தேர்வாகி உள்ளார். மேலும் அவர் யுபிஎஸ்சி தேர்வு எழுதிய முதல் முயற்சியிலேயே பாஸாகி உள்ளார். அதாவது கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி யுபிஎஸ்சி தேர்வு நடந்தது. இதில் அஞ்சலி பிர்லா பங்கேற்று தேர்வு எழுதினார். அவரது ரோல் நம்பர் 0851876 என்பதாக உள்ளது.
அதன்பிறகு 2019ல் முதன்மை தேர்வும், 2020 ஜனவரி 14ம் தேதி யுபிஎஸ்சி மெயின் தேர்வும் ரிசல்ட் வெளியானது. அதிலும் அஞ்சலி பிர்லாவின் ரோல் நம்பர் இருக்கிறது. அதாவது மொத்தம் 829 பேர் வரை தேர்வு எழுதினர். அதன்பிறகு போஸ்ட்டிங் வழங்கப்பட்டது. 2021 ஜனவரி 4ம் தேதி 89 பேர் ரிசர்வ் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அதில் அஞ்சலி பிர்லாவின் பெயர் உள்ளது. இது யுபிஎஸ்சி ரிசல்ட் பக்கத்தின் மூலம் உறுதியாகி உள்ளது. இதன்மூலம் அஞ்சலி பிர்லா யுபிஎஸ்சி தேர்வு எழுதிதான் தேர்ச்சி அடைந்துள்ளார். தற்போது அவர் இந்தியன் ரயில்வே அக்கவுண்ட் சர்வீஸ் பிரிவில் பணியாற்றி வருகிறார். இதன்மூலம் ஓம்பிர்லாவின் மகள் யுபிஎஸ்சி தேர்வு எழுதாமல் பணிக்கு சென்றார்? என்பதில் உண்மையில்லை.

Fact Check
வெளியான செய்தி
லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா யுபிஎஸ்சி தேர்வு எழுதாமலே பணிக்கு தேர்வாகி உள்ளதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது
முடிவு
ஓம்பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா 2019ல் நடந்த யுபிஎஸ்சி தேர்வு எழுதி பாஸாகி 2021ம் ஆண்டு ஒருங்கிணைந்த ரிசர்வ் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications