ஜி20 இரவு விருந்தில் அதானி, அம்பானி? தீயாக பரவும் தகவல்.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. உண்மை என்ன
டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டில் இன்று நடக்கும் இரவு விருந்தில் 500 டாப் பிஸ்னஸ்மேன்கள் கலந்து கொள்வதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. அமெரிக்கா தொடங்கி உலகின் பல டாப் தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொள்ள டெல்லிக்கு வந்துள்ளனர். இதனால் டெல்லியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பைடன், ட்ரூடோ, ரிஷி சுனக் என உலக நாடுகளின் பல தலைவர்களும் இந்த தலைவர்களும் இதில் பங்கேற்கிறார்கள். இந்த ஜி20 உச்சி மாநாட்டில் இன்று இரவு விருந்து கொடுக்கப்படுகிறது.
பரவிய தகவல்: இதில் பல உலக தலைவர்கள் கலந்து கொள்வதால் இது ரொம்பவே முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த இரவு விருந்தில் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி என மொத்தம் சுமார் 500 இந்தியத் தொழிலதிபர்களும் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் பரவியது. பாரத மண்டபத்தில் நடக்கும் டின்னரில் இவர்களும் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் பரவியது.
இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், குமார் மங்கலம் பிர்லா மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனர் தலைவர் சுனில் மிட்டல் என மொத்தம் 500 பிஸ்னஸ்மேன்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
500 பிஸ்னஸ்மேன்கள்: மேலும் அதில், "இந்த இரவு விருந்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.. உச்சி மாநாட்டில் இந்த இரவு விருந்து முக்கியமானதாக இருக்கும்" என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. மேலும், ஊடகங்களுக்கு அனுமதி தரப்படாத இந்த நிகழ்வில் பல பிஸ்னஸ்மேன்களும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டனர். அரசு செலவில் நடக்கும் விழாவில் எதற்காக 500 பிஸ்னஸ்மேன்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பினர். சமூக வலைத்தளங்களில் இது டிரெண்டிங் ஆன நிலையில், இது குறித்து மத்திய அரசே விளக்கம் கொடுத்துள்ளது.
உண்மை என்ன: அதாவது இந்த செய்தியில் உண்மை இல்லை என்று மத்திய அரசின் பேக்ட் செக் அமைப்பான பி.ஐ.பி விளக்கம் கொடுத்துள்ளது. இது குறித்து பி.ஐ.பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "செப். 9ஆம் தேதி பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஜி20 சிறப்பு விருந்தில் முக்கிய பிஸ்னஸ்மேன்கள் அழைக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் கட்டுரை அடிப்படையில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இதில் உண்மை இல்லை. இரவு விருந்தில் பிஸ்னஸ்மேன்களுக்கு அழைப்பு இல்லை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங் மற்றும் எச்.டி.தேவே கவுடா ஆகியோரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கும் இந்த இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அனைத்து முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள்.
சர்வதேச அளவில் பார்க்கும் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இதில் கலந்து கொள்கிறார்கள்.

Fact Check
வெளியான செய்தி
ஜி20 மாநாட்டில் இன்று நடக்கும் இரவு விருந்தில் 500 பிஸ்னஸ்மேன்கள் கலந்து கொள்வதாகத் தகவல் பரவி வருகிறது.
முடிவு
இன்றைய இரவு விருந்தில் பிஸ்னஸ்மேன்களுக்கு யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications