ஆடாத ஆட்டம் ஆடிய தங்கம்.. இனி ஒன்னும் பண்ண முடியாது! ஸ்டெடியான உலக மார்க்கெட்! இது மட்டுமே காரணம்?
சென்னை: அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதற்றம் குறையலாம் என்ற நம்பிக்கை உருவான நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்றத்தாழ்வின்றி நிலையாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று தெரிவித்ததையடுத்து, தங்க சந்தையில் பெரிய ஏற்றம் அல்லது சரிவு இல்லாமல் தடுமாற்றமின்றி தொடர்கிறது.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா-ஈரான் மோதல் காரணமாக உலக சந்தைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இந்த போர் காரணமாக எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற அச்சங்கள் உருவானதால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்தனர்.

பொதுவாக உலகளவில் பதற்றம் அதிகரிக்கும் நேரங்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால், அந்த காலத்தில் தங்க விலை வேகமாக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு குறித்து டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளதால், தங்கம் விலை மேலும் உயராமல் நிலையாகக் காணப்படுகிறது.
தங்கம் விலை
இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 4,795 அமெரிக்க டாலர் அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், டொனால்ட் டிரம்ப் கூறிய தகவல் காரணமாக, நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த முக்கிய கடல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஹார்மூஸ் நீரிணை
இந்த ஹார்மூஸ் நீரிணை உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான பாதையாக இருப்பதால், இது திறக்கப்பட்டால் உலக சந்தைகளில் நிலைத்தன்மை ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதற்கிடையில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயும் 10 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த தகவலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா ஈரான் பதற்றம்
இதனால் மேற்காசியப் பகுதியில் பதற்றம் தற்காலிகமாக குறையும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. மற்றொரு பக்கம், எண்ணெய் விலை குறைந்துள்ளதும் தங்கத்தின் விலையை பாதித்த முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, எரிபொருள் விலை குறைந்ததால், பணவீக்கம் குறையும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது. இதனால் தங்கத்தின் மீது இருந்த அழுத்தம் சில அளவு குறைந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க மத்திய வங்கி
அதே நேரத்தில் அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகள் வட்டி விகிதங்கள் குறித்து இன்னும் தெளிவான முடிவுகளை அறிவிக்கவில்லை. எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் வாய்ப்பு இருந்தாலும், தற்போதைய சூழலில் அதிகமான எதிர்பார்ப்பு உள்ளதால் உடனடி மாற்றங்கள் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக வட்டி விகிதங்கள் உயர்ந்தால் தங்கத்தின் மீது முதலீடு குறையும் என்பதால், இந்த அம்சமும் தங்க விலை தீர்மானிக்கும் முக்கிய காரணமாக உள்ளது.
அமெரிக்கா-ஈரான்
மொத்தத்தில் பார்க்கும் போது, அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை உலக சந்தைகளில் ஓரளவு அமைதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக தங்க விலை திடீர் மாற்றமின்றி சமமான நிலையில் உள்ளது. ஆனால் இறுதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும்? மேற்காசியப் பகுதியில் பதற்றம் முழுமையாக குறையுமா? என்பதை பொறுத்து தான் தங்கத்தின் விலை மேலும் உயருமா? அல்லது குறையுமா?என்பது உறுதியாகும் என பொருளாதார நிபுணர்கள் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications