சில மாதங்களில்.. தங்கம் ஒரு சவரன் ₹2 லட்சம்? .. கோல்ட் குரு’ சாந்தகுமார் தரும் முக்கிய வார்னிங்! கவனம்!
சென்னை: இன்று ஒரு விலை, நாளை ஒரு உச்சம் என தங்கம் சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த விலை உயர்வுக்குப் பின்னால் இருக்கும் சர்வதேச அரசியல், ரகசிய 'கோல்டு பிளான்' மற்றும் 2026-ல் தங்கத்தின் எதிர்கால விலை குறித்து 'கோல்ட் குரு' சாந்தகுமார் வழங்கிய இரண்டு முக்கிய நேர்காணல்களின் தொகுப்பு இதோ:

விலையைத் தீர்மானிக்கும் சர்வதேச சக்திகள்
தங்கம் விலையை நம்மூரில் யாரோ ஒரு தனிநபரோ அல்லது கடையோ முடிவு செய்வதில்லை. இந்தியாவில் வடக்கே 'IBJA' அமைப்பும், தெற்கே 'MJDA' அமைப்பும் விலையை அறிவிக்கின்றன. ஆனால், இதற்கான அடிப்படை லண்டனில் உள்ள 'LBMA' (London Bullion Market Association) அமைப்புதான். அங்குள்ள ஜாம்பவான்கள் நிர்ணயிக்கும் டாலர் மதிப்போடு, நம் நாட்டு வரி மற்றும் GST-யைக் கூட்டித்தான் விலை கணக்கிடப்படுகிறது.
விலை உயர்வின் பின்னால் இருக்கும் ரகசிய 'கோல்டு பிளான்'
தங்கம் விலை குறையாமல் இருப்பதற்கு மிக முக்கியக் காரணங்களாக சாந்தகுமார் கூறுபவை:
மத்திய வங்கிகளின் வேட்டை: கடந்த ஆண்டில் மட்டும் போலந்து, உஸ்பெக்கிஸ்தான், இந்தியா, சீனா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை வாங்கி குவித்துள்ளன.
டாரிக் வரி (Tariff War): அமெரிக்கா இந்தியா மற்றும் சீனா மீது விதித்த வரி விதிப்புகள் உலகப் பொருளாதாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி, முதலீட்டாளர்களைத் தங்கம் பக்கம் திருப்பியது.
டாலர் பலவீனம்: அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும்போது டாலர் மதிப்பு சரிந்து, தங்கம் பலம் பெறுகிறது.
போர் பதற்றமும் விலையும்: ஒரு முரண்!
பொதுவாகப் போர் வந்தால் தங்கம் விலை உயரும். ஆனால், ஈரான் - இஸ்ரேல் பதற்றத்தின் போது விலை சற்று குறைந்த விந்தை நடந்தது. இதற்குக் காரணம் கச்சா எண்ணெய் (Oil Price). எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயரும்போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை விட்டுவிட்டு ஆயில் பக்கம் திரும்பினர். இருப்பினும், இது தற்காலிகமானதே (சுமார் 6% - 7% சரிவு). தங்கம் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.
2026-ல் தங்கம் விலை என்னவாகும்?
நகைப்பிரியர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் என்னவென்றால், 2026-ம் ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ₹1.35 லட்சம் முதல் ₹1.50 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாகச் சாந்தகுமார் கணித்துள்ளார். சர்வதேச வங்கிகளான ஜே.பி.மார்கன் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் கணிப்புகளும் இதையே உறுதிப்படுத்துகின்றன.
முதலீட்டாளர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் டிப்ஸ்:
வெள்ளி நகைக்கும் கடன்: ஏப்ரல் 1 முதல் ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் வெள்ளி நகைகளை அடமானம் வைத்து ₹10 லட்சம் வரை கடன் பெறும் வசதி அமலுக்கு வந்துள்ளது. ஆனால், வெள்ளிப் பொருட்கள் அளவில் பெரியதாக இருப்பதால், வங்கிகளில் பெரிய லாக்கர் வசதிகள் வரும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
திருமணத் தேவைக்கு: * 3-6 மாதங்களில் திருமணம்: விலை குறையும் என்று காத்திருக்காமல் இப்போதே நகையாக வாங்குவது பாதுகாப்பானது.
5-6 ஆண்டுகள் கழித்து தேவை: இப்போது நகையாக வாங்காமல் டிஜிட்டல் தங்கம் அல்லது SGB (Sovereign Gold Bond) முறையில் முதலீடு செய்து, தேவைப்படும் போது அப்போதைய ட்ரெண்டிற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
சேமிப்பு முறை: மொத்தமாக வாங்காமல், விலை குறையும் போதெல்லாம் சிறுகச் சிறுகச் சேமிப்பதே லாபகரமானது.












Click it and Unblock the Notifications