இந்த ஊரில் தண்ணீர் வாங்க கூட "தங்கம்" வேண்டும்.. தடாலடியாக வந்த மாற்றம்! காரணம் டிரம்ப் தான்!
டல்லாஹஸ்ஸி: பல காலத்திற்கு முன்பு நாம் தங்கத்தைத் தான் கரன்சியாக பயன்படுத்தி வந்தோம். ஆனால், இப்போது அந்த நிலை மாறி ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக கரன்சி இருக்கிறது. எந்தவொரு நாடும் இப்போது தங்கத்தை கரன்சியாக பயன்படுத்துவதில்லை. ஆனால், இந்த ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் மீண்டும் தங்கத்தை கரன்சியாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் தங்கத்தைத் தான் நாணயமாகப் பயன்படுத்தி வந்தோம். சில இடங்களில் வெள்ளியும் கூட சேர்ந்தே கரன்சியாக பயன்படுத்தப்பட்டு வந்தன. அதாவது இப்போது நாம் எப்படி ரூபாய் நோட்டைக் கொடுத்து பொருட்களை வாங்குகிறோமோ.. அதுபோல தங்கம், வெள்ளி நாணயத்தை வைத்து பொருட்களை வாங்கினர்.

கரன்சி
பிறகு பல்வேறு காரணங்களால் இந்த நிலை மாறியது. தங்கம், வெள்ளிக்குப் பதிலாக கரன்சி நோட்டுகள் வந்தன. இந்தியாவில் ரூபாய், அமெரிக்காவில் டாலர், இங்கிலாந்தில் பவுண்ட் என ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கரன்சி இப்போது இருக்கிறது. இந்த கரன்சியை கொடுத்தே நாம் தங்கம், வெள்ளியைக் கூட வாங்குகிறோம். ஆனால், இங்கு ஒரு மாகாணம் மீண்டும் பழங்கால நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கவுள்ளனர். தங்கம், வெள்ளியைக் கொடுத்து பச்சைத் தண்ணீர் முதல் சொகுசு கார் வரை எல்லாம் இங்கு வாங்கலாம்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. CS/HB 999 என்ற இந்த சட்டம் தங்கம், வெள்ளியையும் சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்கிறது. இதற்கான கோப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புளோரிடா ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கையெழுத்திட்டார். இதன் மூலம் அன்றாட பரிவர்த்தனைகளுக்குத் தங்கம் மற்றும் வெள்ளியை சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரித்த முதல் மாகாணமாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது.
மீண்டும் கரன்சியாகும் தங்கம்
இது தொடர்பாக புளோரிடா கவர்னர் டிசாண்டிஸ் கூறுகையில், "இந்த மசோதா தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களை சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்கிறது. இந்த நடவடிக்கையை எடுக்கும் முதல் பெரிய மாகாணம் நாங்கள் தான். இது அமெரிக்காவின் அரசியலமைப்பிலிருந்து கூறப்பட்டதையே நாங்கள் செய்துள்ளோம். குறிப்பிட்ட அளவுக்குத் தூய்மையாக இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை கரன்சியாக ஏற்கவுள்ளோம்" என்றார்.
அதேநேரம் எந்தளவுக்குத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை அவர் குறிப்பிடவில்லை. மேலும், இந்த சட்டத்திற்கு கவர்னரான இவர் கையெழுத்துப் போட்டாலும் கூட இது உடனடியாக அமலுக்கு வராது. அடுத்தாண்டு அதாவது 2026 ஜூலை 1ம் தேதி முதலே இந்த சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் டிரம்ப் தான்
பொதுவாக அமெரிக்க டாலர் மதிப்பு எப்போதும் நிலையாக இருக்கும். அதாவது நமது ரூபாய், ஜப்பான் யென் ஆகிய கரன்சிகள் அடிக்கடி ஏறும் அல்லது குறையும். ஆனால், அமெரிக்க டாலர் மதிப்பு இதுபோல திடீரென ஏறவோ குறையவோ செய்யாது. இருப்பினும், தற்போது அதிபராக உள்ள டிரம்ப் எடுக்கும் கொள்கைகளால் டாலரின் மதிப்புமே கூட சரிகிறது. இதனால் புளோரிடா மக்களுக்கு அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு ஒரு ஆப்ஷனை வழங்குவதே இதன் நோக்கம் என்றும் கவர்னர் டிசாண்டிஸ் கூறினார். பெடரல் அரசின் கொள்கை மற்றும் பணவீக்கத்தால் டாலர் மதிப்பு குறைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பலன் தரும்
இது தொடர்பாக டிசாண்டிஸ் கூறினார் கூறுகையில், "இந்த HB 999 மூலம் புளோரிடா மக்களுக்கு அதிக நிதி சுதந்திரம் கிடைக்கும். கடினமாகச் சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்கக் கூடுதல் கருவியாக இது இருக்கும்.. இந்த சட்டம் பணவீக்கத்தை மிஞ்சும் சொத்துக்களை (தங்கம், வெள்ளி) ஆதரிக்கிறது.. எனவே புளோரிடா மக்களின் செல்வம் நமது பெடரல் அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் அழிந்து போகாது" என்றார்.
மேலும், தங்கம், வெள்ளி மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு விற்பனை வரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும். தங்கம், வெள்ளியை வெறும் சொத்தாக மட்டுமில்லாமல் தினசரி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவே வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications