தங்க நகைகள் விலை குறையுதா? உச்சாணிக்கு ஏறிடுச்சே தங்கம்.. இதுவா காரணம்? தங்கத்தால் தடுமாறும் மக்கள்
சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 70,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ 8,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ 4360 உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலை நேற்று முன்தினம் விலைக்கே தற்போதும் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை எப்போது குறையும் என்ற கவலை பொதுமக்களை சூழ்ந்து கொண்டுள்ளது. இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் சொல்வதென்ன?
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது... அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது, அந்நாட்டு அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால், பல நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், அதன் விலை உயர்ந்து வருகிறது.

அதாவது, டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு குறிப்பாக சீனா மீதான அதிக வரி விதிப்பு தான் தங்கம் விலை உயர்வுக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. இந்த பரஸ்பர வரி விதிப்பை பல்வேறு நாடுகளுக்கும் தற்காலிகமாக நிறுத்திவைத்தாலும், சீனாவுக்கு 125% வரி விதித்துள்ளார்.
டிரம்ப் போட்ட வரிவிதிப்பு
டிரம்ப்பின் 125 சதவீத வரி விதிப்பால் சீனா அமெரிக்காவில் உள்ள கடன் பத்திரங்களை விற்றுவிட்டு தங்கத்தின் மீதான முதலீட்டில் கவனத்தை திருப்பியுள்ளது. எனவேதான், தங்கத்தின் விலை அதிகரித்தவாறே உள்ளதாகவும், இந்த விலையேற்றம் இனியும் தொடரும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்து கூறுகிறார்கள்.
அந்தவகையில், இந்த வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலை 15 சதவீதம் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக, டிரம்ப் கடந்த ஜனவரியில் அதிபராக பதவியேற்ற பிறகு சர்வதேச சந்தையில் 15வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.. இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்து கொண்டேயிருக்கிறது.. நேற்று முன்தினம் சென்னையில் 70,160 ரூபாயாக தங்கம் அதிகரித்தது. அதாவது, ஜனவரி 1ம் தேதி தங்கம் சவரனுக்கு 57,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது, 70 ஆயிரத்தை தாண்டிவிட்டது.
தங்க நகை வியாபாரிகள்
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி, ஒரு சேனலுக்கு தந்த பேட்டியில் சொல்லும்போது, "தன்னுடைய நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வரி விதிப்பு அமல்படுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்துவிட்டு பிறகு, 90 நாட்களுக்கு அந்த அறிவிப்பை நிறுத்தி வைப்பதாகவும், சீனாவுக்கு மட்டும் வரி விதிப்பு தொடரும் என்றும் அறிவித்தார். இதையடுத்து, சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பை அறிவித்தது.
பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் வரும் என்று கணித்து, பெரிய முதலீட்டாளர்களும் தங்களது பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்தனர். மேலும், பெரும்பாலான நாடுகள், வரி விதிப்பை சமரசமாக முடித்து கொள்ள அமெரிக்காவை அணுகின. இதனால் பங்கு சந்தைகள் வீழ்ச்சியை நோக்கி சரிந்தன. இதுபோன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துவிட்டது.
கடந்த, 7ம் தேதி சர்வதேச சந்தையில், 2.57 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட, 31.10 கிராம் எடை உடைய தங்கம் விலை இப்போது, 2.78 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால், நம்முடைய நாட்டிலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டேயிருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
எப்போது தங்கத்தின் விலை குறையும்
இப்படி நாளுக்கு நாள் தங்கத்தின் விலை பொதுமக்களுக்கு அச்சத்தை தந்து வருகிறது.. இந்த ஆண்டு தங்கத்தின் விலை வெறும் 4 மாதங்களில் 23 சதவீதம் உயர்ந்துள்ளது.. அதுமட்டுமல்ல, டிரம்ப், புதின், ஜி ஜின்பிங் போன்றோர் அதிகாரத்தில் இருக்கும்வரை புவிசார் அரசியல் பதற்றங்கள் முடிவுக்கு வராது என்றும் இதனால் தங்கம் விலை 38 சதவீதம் குறைய வாய்ப்பு மிக மிக குறைவு.. அப்படியே குறைந்தாலும் சவரனுக்கு 3,000 ரூபாய் வரை குறையுமே தவிர அதிகமேல் குறையாது என்றெல்லாம நிபுணர்கள் கருத்து கூறுகிறார்கள்.
அதுமட்டுமல்ல, டிரம்ப் சீனா மீது தொடர்ந்து வரியை 145% உயர்த்தியதால், சீனாவும் பிடிவாதமாக வர்த்தக போரில் ஈடுபடலாம் என்பதால் தங்கம் விலை இப்போதைக்கு ஏறத்தான் செய்யும்..
ஒருவேளை ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வருவது போன்றவற்றால் மட்டுமே தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.. அந்தவகையில், இப்போதைக்கு தங்க விலையில் ஏற்ற, இறக்கத்தை உறுதியாக கணிக்க முடியாத நிலைமை உள்ளதாக நிபுணர்கள் கணித்து சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications