மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் இத்தனை நன்மைகளா? இவ்வளவுநாள் இதுதெரியாம போச்சே
இன்றைய அவசர உலகில் உடற்பயிற்சி செய்வதற்கான நேரமே கிடைப்பதில்லை என்பதுதான் பலரது புலம்பலாகவும் உள்ளது. இந்நிலையில், காலை நேர உடற்பயிற்சியில் மட்டுமல்ல மாலை நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சியிலும் பல்வேறு நன்மைகள் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். மாலை நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சியால் கிடைக்கும் பலன்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..
பொதுவாக உடற்பயிற்சி என்பது உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. இது உடலுக்கு புத்துணர்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்துவதோடு பாசிட்டிவான வைபையும் ஏற்படுத்தும். தினந்தோறும் ஒரு மணி நேரம் எதாவது ஒரு எளிமையான உடற்பயிற்சியை செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்வது நமக்கு பல நன்மைகளை அளிக்கும். உடற்பயிற்சி செய்வதால் முதுகு வலி, இடுப்பு வலி, தசைபிடிப்பு போன்றவை குறையும். கொழுப்பைக் குறைத்து உடல் எடை குறைய உதவும்.

மூட்டுகளின் அசைவை அதிகரித்து மூட்டில் ஏற்படும் உராய்வைத் தடுக்கும். மூட்டு தேய்மானமும் தடுக்கப்படும். இதயத் துடிப்பை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்கும். மேலும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், கட்டுக்கோப்பான உடல் அமைப்புக்கும் உடற்பயிற்சி செய்வது சிறந்த தேர்வாக இருக்கும். காலை நேர உடற்பயிற்சியில் பல நன்மைகள் இருப்பினும், மாலை நேரத்தில் செய்யும் உடற்பயிற்சி பல்வேறு பலன்கள் கிடைப்பதாக உடற்பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வலிமை, செயல்திறனை அதிகரிக்கும்: மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது நமது உடலின் வலிமை மற்றும் செயல்திறன் சிறப்பாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதாவது, நாளின் பிற்பகுதியில் உடலின் வெப்பநிலை அதிகமாக இருக்கும். தசைகள் வெப்பமாகவும், நெகிழ்வாகவும் இருக்கும். அப்போது, நாம் உடற்பயிற்சி செய்யும்போது ஒட்டுமொத்த உடற்பயிற்சியின் செயல்திறன் மற்றும் வலிமையை அதிகரித்து அதிக பலன் கிடைக்கச் செய்யும்.
கூடுதல் கவனம்: காலை உடற்பயிற்சியின்போது வீட்டிற்கு சென்று சமையல் வேலைகளை முடிக்க வேண்டும். அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற பல்வேறு யோசனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால், மாலை நேர உடற்பயிற்சி அந்த அவசரகதியைத் தவிர்த்து மனதை அமைதியாக்குவதோடு, உடற்பயிற்சியில் கூடுதல் கவனம் செலுத்த உதவும். இந்த தெளிவான மனநிலையோடு உடற்பயிற்சி செய்வதால் நமக்கு சிறப்பான பலன்கள் கிடைப்பதோடு, உடற்பயிற்சியின்போது ஏற்படும் காயங்களையும் தவிர்க்க உதவும்.
மன அழுத்தம் குறையும்: நாள் முழுக்க ஓடிக் கொண்டே இருக்கும் நமது மனநிலையை சீராக்கி, ஸ்ட்ரெஸை குறைக்க உதவும். இது எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுவிடுவதால், உடலின் இயற்கையான மனநிலையை உயர்த்தி, பதட்டத்தைக் குறைக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
ஆழ்ந்த தூக்கம்: மாலை நேர உடற்பயிற்சி செய்வதால் நமது தூக்க முறை சீராகும். சிறந்த தூக்கத்திற்கான ஹார்மோன்களான செரோட்டனின் மற்றும் மெலோட்டனின் உற்பத்தியை அதிகரித்து, ஆழ்ந்த மற்றும் அமைதியான தூக்கத்துக்கு உதவும்.












Click it and Unblock the Notifications