பிளாக் பாரஸ்ட் + ரெட் வெல்வெட் சாப்பிட்டால் கேன்சர்? வந்த வார்னிங்.. கேக் சாப்பிடும் முன் இதை கவனிங்க
பெங்களூர்: நீங்கள் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி இருப்பீர்கள். நீண்ட நாட்கள், நல்ல ஆயுளோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே கேக் வெட்டி கொண்டாடுவீர்கள். ஆனால், அந்த கேக் உங்கள் உயிருக்கு எமனாக மாறலாம் என்று கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கர்நாடகாவில் உள்ள சில பேக்கரிகளில் விற்கும் கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் சில கெமிக்கல்கள் இருப்பதாகக் கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் மஞ்சூரியன், பானி பூரி, கேபாப் உள்ளிட்ட ஸ்ட்ரீட் புட்களில் கார்சினோஜென்ஸ் எனப்படும் ஆபத்தான கெமிக்கல் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இப்போது உணவு பாதுகாப்புத் துறை பேக்கரியில் விற்கப்படும் கேக் குறித்தும் கவலை எழுப்பியுள்ளது.
ஆபத்து: இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆகஸ்ட் மாதம் சுமார் 235 கேக் மாதிரிகளை ஆய்வு செய்தோம். அதில் 223 கேக் மாதிரிகள் பாதுகாப்பாக இருந்தன. ஆனால் 12 கேக்களில் செயற்கை வண்ணங்கள் ஆபத்தான அளவில் இருந்தன.
குறிப்பாக Allura Red (ஒரு வகை சிவப்பு), சன்செட் மஞ்சள், ஸ்ட்ராபெரி சிவப்பு, எலுமிச்சை மஞ்சள் மற்றும் மரூன் போன்ற செயற்கை நிறங்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். இது கேன்சர் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமின்றி... மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்" என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
எந்த கேக் ரொம்ப ஆபத்து: ரெட் வெல்வெட் மற்றும் பிளாக் பாரஸ்ட் போன்ற கேக்குகள் தான் பெரும்பாலும் அதிகளவில் செயற்கை வண்ணங்களுடன் தயாரிக்கப்படுவதால் அதுவே அதிக ஆபத்தானதாக உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
இது குறித்து உணவு பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகையில், "பொதுவாக இதுபோன்ற செயற்கை கலர்களை குறைந்த அளவிலேயே பயன்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்புத் துறை பரிந்துரை அதுதான். இந்த கெமிக்கல்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போதே பிரச்சினை வருகிறது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் நாம் சாப்பிடும் கேக்கில் கெமிக்கல் கலர் அதிகமாக இருக்கிறதா இல்லை சரியாக இருக்கிறதா என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது.
எச்சரிக்கை: பார்க்க கேக் நல்லா பிரகாசமாகவும், அழகாகவும் இருக்கிறது என்பதற்காக வாங்கி சாப்பிட்டால் அது உங்கள் உடல்நிலையைக் காவு வாங்கிவிடும். மக்கள் இதுபோல ஓவர் பிரகாசமாக இருக்கும் கேக்குகளை விரும்புவதாலேயே செயற்கை வண்ணங்களை அதிகம் சேர்க்கிறார்கள். இது மட்டுமின்றி பேக்கிங் செய்யப்பட்ட பல உணவுகளில் டைட்டானியம் டை ஆக்சைடு உள்ளது. இது நமது உடலுக்கு ரொம்பவே ஆபத்தானது. இந்தியாவில் இதைப் பயன்படுத்த அனுமதி உள்ள போதிலும் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் இது தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும்" என்கிறார்கள்.
எதைத் தவிர்க்க வேண்டும்: என்ன வகையான செயற்கை நிறம் என்ன மாதிரியான ஆபத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "நீலம் டைப் 2 செயற்கை நிறம் மூளையில் கட்டிகளை ஏற்படுத்தலாம்.. டைப் 3 பச்சை சிறுநீர்ப்பை புற்றுநோயுடன் தொடர்புடையது. டைப் 3 மஞ்சள் லேசான ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். டைப் 6 மஞ்சள் அட்ரீனல் சுரப்பிகள் மற்றும் சிறுநீரகங்களின் புற்றுநோய்களை ஏற்படுத்தும். டைப் 3 சிவப்பு தைராய்டு கட்டிகளைக் கூட ஏற்படுத்தும்" என எச்சரிக்கிறார்கள்.
கேக் என்பது நாம் ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டுமே சாப்பிடும் பொருள். இருந்தாலும் அதில் இவ்வளவு பெரிய ஆபத்து இருப்பதால் முடிந்தவரைச் செயற்கை நிறங்களைத் தவித்துவிட்டு இயற்கையாக இருக்கும் கேக்களை மட்டும் நாம் சாப்பிட வேண்டும்.












Click it and Unblock the Notifications