சுக்கான் கீரை.. ரத்தத்தை சுத்திகரிக்கும் கீரை.. இதயம் முதல் குடல்வரை காக்கும் ஆச்சரிய சுக்கு இலைகள்
சென்னை: நாம் பெரும்பாலும் உணவில் பயன்படுத்தப்படாத கீரைதான் "சுக்கான்" கீரை.. இதிலுள்ள சத்துக்கள் என்னென்னவென்று தெரிந்துகொண்டால், அவ்வளவு லேசில் இந்த கீரையை விட்டுவிட மாட்டோம்.
சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, மணிச்சத்து, வைட்டமின் A, C, தயாமின், என ஏகப்பட்ட சத்துக்களை இந்த கீரை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது.. குடல் ஆரோக்கியத்தை காப்பதில் இந்த கீரைக்கு பெரும்பங்கு உண்டு.

சுக்கான் கீரை: சுக்குக் கீரை, சொக்கான் கீரை என்றும் இந்த சுக்கான் கீரையை சொல்வார்கள்.. பொதுவாக கீரைகளை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. ஆனால், இந்த சுக்கான் கீரையோ, குடலையே சுத்தப்படுத்தக்கூடியது.. கழிவுகளையும், நச்சுக்களையும் எளிதில் வெளியேற்றக்கூடியது. அஜீரணத்தை போக்கக்கூடியது.. இதனால் பசி நன்றாக எடுக்கும். வாயுத்தொல்லைகள் தீரும்..
வழக்கமான கீரைகளை போலவே, இந்த கீரையையும் சமைத்து சாப்பிடலாம். அல்லது சட்னி போல செய்து சாப்பிடலாம்.. குடலில் புண்கள் ஆற வேண்டுமானால், இந்த கீரையை, பாசிபருப்புடன் சேர்த்து சமைக்கும்போது, புளி சேர்க்காமல் சமைத்து சாப்பிட வேண்டும். மற்றபடி சட்னி போல செய்து சாப்பிட வேண்டுமானால், இந்த சுக்கான் கீரையோடு பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி சட்னி அரைத்து சாப்பிடலாம். அஜீரண கோளாறுகள் இருப்பவர்களுக்கு இந்த சட்னி மிகுந்த தீர்வை பெற்றுத்தரும்.
கல்லீரல்: அதேபோல, சுக்கான் கீரையில் சூப் செய்து குடிக்கலாம்.. போதை பழக்கத்தினால், பலருக்கு கல்லீரலில் பாதிப்புகள் ஏற்பட்டுவிடும். இந்த ஆபத்தை போக்க வேண்டுமானால், சுக்கான் கீரை சூப் செய்து குடித்து வரலாம்.. அந்தவகையில் ஈரலை காக்கக்கூடியது இந்த கீரை.. பித்தம் குறைவதுடன், கல்லீரலும் பலப்படும்... மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்தாக இது பயன்படுகிறது.
ஏதாவது ஒரு பருப்புடன் இந்த கீரையை சமைத்து சாப்பிட்டால் நெஞ்செரிச்சலும் நீங்கும். தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும், எலும்பு தேய்மானம் பிரச்சனை உள்ளவர்களும்கூட, ஆர்த்ரைடிஸ் பிரச்சனை உள்ளவர்களும்கூட இந்த சூப்பை குடித்து வந்தால், போதுமான பலன்கள் கிடைக்கும்.
ரத்த அழுத்தம்: மற்றொருபுறம் இதயத்தை பாதுகாக்கக் கூடியது.. குறிப்பாக, ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களுக்கு, இந்த கீரை ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.. ரத்த அழுத்தம் சீராக இருந்தாலே, இதயம் காக்கப்படும். அந்தவகையில், உணவில் சுக்கான் கீரையை சாப்பிட்டு வருவது, ரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து காக்கிறது. அத்துடன் ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. வயதாவதால் ஏற்படும் எலும்பு தேய்மானத்தையும், மூட்டுவலியையும் இந்த கீரை தடுக்கிறது.
கால்சியம் சத்துக்கள் நிறைந்த இந்த கீரை, எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை தருகின்றன.. அதனால்தான், இந்த கீரையை பல்துலக்கவும் பயன்படுத்துவார்கள்.. கீரையை நிழலில் உலர்த்தி தூளாக்கி, அதில் தேய்த்து வருவதால், பற்கள் ஆரோக்கியம் காக்கப்படும். கால்சியமும், இரும்புச்சத்தும் நிறைய உள்ளதால், குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கலாம்.












Click it and Unblock the Notifications