நல்வேளைக்கீரை.. நல்லதை செய்யும் நல்வேளை கீரை.. ஒரு கைப்பிடி தைவேளை கீரையில் இவ்ளோ நன்மை? அடேங்கப்பா
சென்னை: கீரைகள் என்றாலே நமக்கு நன்மைகளை தரக்கூடியது என்றாலும், எத்தனையோ பலன்தரத்தக்க கீரைகளை, அன்றாட வாழ்வில் தவிர்த்து விடுகிறோம். அப்படிப்பட்ட அருமருந்தாகும் கீரைதான் நல்வேளைக்கீரை.
இந்த கீரையின் பெயரே வித்தியாசமாக இருக்கும்.. தைவேளை என்றும் வேளைக் கீரை என்றும் சொல்வார்கள்.. இந்த செடியிலுள்ள பூக்கள், பகல் வேளையில், தலை குனிந்திருக்குமாம்.. சாயங்காலம் வேளையில் மலர்ந்திருக்குமாம். அதனால்தான், "வேளை" என்பதை வைத்து, இந்த கீரையின் பெயர் வந்திருக்கலாம் என்பார்கள்.

வெள்ளை கலர் பூக்களுடன், நீளமான காய்களை கொண்டவை.. தரிசு இடத்திலும், சாலையோரங்களிலும், வேலிகளிலும், தானாகவே வளரக்கூடிய இந்த செடி அபார மருத்துவ குணத்தை கொண்டது.
பக்குவம்: இது ஒரு சூட்டை கிளம்பும் தாவரம்.. சைனஸ், சளி, இருமல் பிரச்சனைக்கு பெரும்பாலும் பயன்படுத்துவார்கள்.. இந்த கீரையை மற்ற கீரைகளை போலவே, துவையல், மசியல் செய்து சாப்பிடாமல் வேறு வகைகளிலும் சாப்பிடலாம். ஒவ்வொரு பக்குவத்தில் சமைக்கும்போதும், ஒவ்வொரு உடல்நல பிரச்சனைகளை தீர்க்கிறது.
குறிப்பாக, இந்த இலையை பறித்து வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, வதக்கி சாப்பிட்டால், மூட்டுவலி, முதுகுவலி, உடல் வலி தீரும்.. பருப்புடன் வேக வைத்து குழம்பாக சாப்பிட்டால், கழுத்து வலி தீரும்.. இந்த கீரையை சுத்தம் செய்து, சற்று காரம் அதிகமாக சேர்த்து, புளிக்குழம்பு போல செய்து சாப்பிட்டால் வாதநோய் குணமாகும்.
குடல் புழுக்கள்: ஒரு கைப்பிடி கீரைக்கு, 4 மிளகு, சிறிது மஞ்சள் சேர்த்து விழுதாக அரைத்து வெறும் வயிற்றில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால், வயிற்றிலுள்ள பூச்சிக்கள் வெளியேறிவிடும். இப்படி பல வகைகளில் இந்த கீரை உதவுகிறது.
இந்த நல்வேளை கீரையுடன் பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கி, விழுதாக அரைத்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறையுமாம். அல்லது இந்த கீரையுடன் குடமிளகாய், பூண்டு சேர்த்து அரைத்து துவையல் போல செய்து சாப்பிட்டு வந்தாலும், உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்துவிடுமாம்.
கட்டிகள்: ஒற்றை தலைவலி இருந்தால், இந்த கீரையை அரைத்து, தலையில் விழுதாக தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் போதும்.. நிவாரணம் கிடைக்கும். வெறுமனே இந்த இலைகளை பறித்து, உடலில் ஏற்படும் புண்கள், கட்டிகள் மீது கட்டிவைத்தால், அவை பழுத்து உடைந்துவிடும்..
இலையின் சாறுடன், தேங்காய் எண்ணெய்யும் சேர்த்து காய்ச்சி, புண்களின் மீது தடவிவந்தால், விரைவில் அவை ஆறிவிடும்.. காது வலி இருந்தால், இந்த இலைகளை கசக்கி, அதன் சாறுகளை 2, 3, துளி விட்டால் தீர்வு கிடைக்கும்.
காய்ச்சல், சளி: இந்த நல்வேளைக்கீரை செடியில் இலைகள் மட்டுமல்லாமல், பூக்கள், விதைகள் என அத்தனையும் மருத்துவ குணம் கொண்டது.. இந்த பூக்களை பறித்து, கசக்கி சாறு எடுத்து, அதில் சிறிது தாய்ப்பாலையும் சேர்த்து, குழந்தைகளுக்கு தந்துவந்தால், காய்ச்சலும், சளியும் குணமாகும்.

இந்த பூக்கள் நெஞ்சில் கட்டியிருக்கும் கோழைகளை அகற்றக்கூடியது.. இந்த செடியிலுள்ள பட்டை, தோலில் ஏற்படும் காயத்தை போக்கக்கூடியது. இந்த செடியின் விதைகளோ, குடல் வாயுவையும், குடல் புழுக்களையும் வெளியேற்றக்கூடியது.. இந்த விதைகளை இடித்து பொடித்து, விளக்கெண்ணெய்யுடன் கலக்கி குடித்தாலும், வயிற்றுப் புழுக்கள் வெளியேறிவிடும்
நீர்கோர்ப்பு: இந்த விதையிலிருந்து தயாராகும் எண்ணெய், சருமத்தில் ஏற்படும், சொறி, சிரங்கு, புண் போன்றவற்றிற்கு மிகவும் நல்லது. அதேபோல இதன் இலையை அரைத்து சாற்றை பிழிந்துவிட்டு, அந்த சக்கையை மட்டும் தலையில் வைத்து துணியால் இறுக்கிக்கட்டினாலும், தலையில் கோத்துள்ள நீர் முழுக்க வெளியேறிவிடும்.
இந்த அளவுக்கு ஏகப்பட்ட நன்மைகளை தரும் இந்த நல்வேளைக்கீரையை, ஒதுக்கிவிடாமல், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, மருந்தாக எடுத்து கொண்டால் கோடிபலன்கள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications