பனங்கிழங்கு.. பலே கிழங்கு.. இம்யூனிட்டி முதல் ரத்தசோகை வரை ஓடிரும்.. பனங்கிழங்கின் "புழுக்கொடியல்"
சென்னை: பல்வேறு பலன்களை தரக்கூடியது பனங்கிழங்கு.. இந்த பனங்கிழங்கு சாப்பிட்டால் கிடைக்ககூடிய பலன்கள் என்னென்ன? எப்படியெல்லாம் பனங்கிழங்கை, ஆரோக்கிய உணவாக எடுத்து கொள்ளலாம் தெரியுமா?
வைட்டமின் B, C நிறைந்த இந்த பனங்கிழங்கில் பாதாமுக்கு இணையான சத்துக்கள் உள்ளன.. அதனால்தான், பசித்தவனுக்கு பனங்கிழங்கு என்பார்கள்.. உடல் பலவீனமாக இருப்பவர்கள், மெலிந்த தேகம் உடையவர்கள் யாராக இருந்தாலும், இந்த கிழங்கு பலத்தை தந்துவிடும்.

பனங்கிழங்கு: 100 கிராம் பனங்கிழங்கில் 87 கிலோ கலோரிகளும், 77 கிராம் நீர்ச்சத்தும் உள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த கிழங்கு பெருக்குகிறது.. ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்ற எலும்பு கோளாறுகளை தடுக்ககூடிய சக்தி இந்த கிழங்குக்கு உண்டு..
ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள், பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள், பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். குடல் புழுக்களை வெளியேற்றும் தன்மை இந்த கிழங்குக்கு இருக்கிறது.
எலும்பு முறிவு: ரத்தக் கொழுப்புக் கட்டிகள் உருவாவதை தடுப்பதால், இதய நோய்களையும் நம்மை நெருங்கவிடாமல் செய்கிறது.. கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால், எலும்புகளுக்கு உறுதித்தன்மையை கூட்டுகிறது. இதனால் எலும்பு முறிவு, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு போன்ற பாதிப்புகள் குறைகிறது.. அதுமட்டுமல்ல, மெக்னீசியமும் இதில், இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது.
நீரிழிவு நோயாளிகள், நார்ச்சத்து நிறைந்த இந்த கிழங்கை, மிதமான அளவு சாப்பிடலாம்.. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியது என்பது மட்டுமல்ல, பனங்கிழங்கில் உள்ள சில சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்கிறது. அதனால், சர்க்கரை நோயாளிகள் எப்போதாவது, மிக குறைவான அளவில் இந்த கிழங்கை சாப்பிடலாம்.
கருப்பை கோளாறு: விந்து எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், அதன் வீரியத்தை பெருக்குவதிலும் சிறப்பாக செயலாற்றுகிறது... பெண்களின் கருப்பை ஆரோக்கியத்தை பாதுகாப்பதில், இந்த கிழங்குக்கு பெரும் பங்கு உண்டு.
இந்த கிழங்கை வேகவைத்து, தூளாக்கி அதில் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் கருப்பை வலுப்பெறும். அல்லது இந்த பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால், பெண்களின் கர்ப்பப்பை உட்பட உடல் உறுப்புகள் பலம் அடையும். உடல் பலவீனமானவர்கள், இந்த கிழங்கை நறுக்கி, காயவைத்து இடித்து மாவாக்கி, அதனுடன், கருப்பட்டி சேர்த்து உருண்டை பிடித்து சாப்பிட்டால் உடல் தேறும்..
புழுக்கொடியல்: இந்த பனங்கிழங்கை தண்ணீர் விட்டு அவித்து, பிறகு மாவாக்கி புட்டு, கூழ் போன்ற உணவு வகைகள் செய்யலாம். கிராமங்களில், இந்த கிழங்கை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்து பயன்படுத்துவார்கள். இதற்கு "புழுக்கொடியல்" என்று பெயர்.. இந்த புழுக்கொடியலை நேரடியாகவே சாப்பிடலாம். பல நாட்களுக்கு கெட்டுப்போகாது.. முன்பெல்லாம் தமிழ்நாட்டில் பஞ்சம் வந்தபோது, ஏழை எளிய மக்களுக்கு இதுதான் உணவாக விளங்கியது.. பலரது உயிரையும் காத்தது..
இந்த பனங்கிழங்கை அவித்து, காயவைத்து, பொடி செய்து, சர்க்கரை, தேங்காய் கலந்து சாப்பிடலாம் அல்லது கிழங்கை அவித்து வேகவைத்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு அரைத்து, துவையலாகவும் சாப்பிடலாம்.
குளிர்ச்சி காய்: இந்த கிழங்கில், பித்தம் அதிகமாகவே உள்ளதால், மிளகு சேர்த்து சாப்பிடுவது நல்லது. அதேபோல, சிலருக்கு வாயுத்தொல்லை ஏற்படலாம். அதனால், இந்த பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து மாவாக்கிவிட்டு, அதற்கு பிறகு சமைத்தால், தொந்தரவு வராது.. அதேபோல, அதிக குளிர்ச்சியை உடையவர்கள், இந்த குளுகுளு பனங்கிழங்கை தவிர்த்துவிடலாம்.












Click it and Unblock the Notifications