Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு வந்த ராட்சத ஆப்பிரிக்க நத்தை! சளி பட்டாலே மூளைக் காய்ச்சல்தான்! மருத்துவர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடந்த ஆண்டு மழை வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட ராட்சத ஆப்பிரிக்க நத்தையால் இருக்கும் ஆபத்து குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனையின் மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார். மேலும் நத்தைகளை தடுப்பது எப்படி என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: ராட்சத ஆப்ரிக்க நத்தை (Giant African Snail) இதனுடைய விலங்கியல் பெயர் லிசாசாட்டினா ஃபுலிக்கா (Lissachatina fulica) எப்படி ஆப்ரிக்க கெளுத்தி மீனால் பல பூர்வகுடி மீன் இனங்களுக்கும் ஆபத்து இருக்கிறதோ அது போல ராட்சத ஆப்ரிக்க நத்தையானது சுமார் 500 வகையான தாவரங்களை உண்டு புசித்து வாழக் கூடியதாக இருக்கிறது.

health dr farook abdulla snail

எனவே விவசாயிகள் முதல் தோட்டங்கள் வைத்திருப்பவர்கள் வரை , இந்த நத்தை எதிரியாகும். பப்பாளி, கத்திரி, பீன்ஸ், வெண்டைக்காய் இவற்றின் முக்கியமான உணவுகள். இலை, தண்டு, பழங்கள், பூ என எதையும் விட்டுவைக்காமல் வீணாக்காமல் உண்ணும் பழக்கம் உள்ள நத்தை இது.

இது இருபாலுடலி (HERMAPHRODITE) வகையைச் சேர்ந்த உயிரினம். ஆண் பெண் இரு பாலினத்துக்கான இனப்பெருக்க உறுப்புகளும் ஒரே உடலில் இருக்குமாறு அமைப்பு. நிலப்பரப்பின் மேற்பகுதியில் மண்ணின் மீது 50-200 மஞ்சள் நிற முட்டைகளை இடும்.

அந்த முட்டைகள் ஒரு வாரத்தில் குஞ்சு பொரிக்கும். அங்கிருந்து இனப்பெருக்க வயதை ஒருவருடத்தில் அடையும். இதன் ஆயுள் காலம் 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும். இதனுடைய ஓடு 19 செண்டிமீட்டர் வரை வளரும் என்பதாலும் நிலத்தில் வாழும் மிகப்பெரிய நத்தை என்பதாலும் இதற்கு ராட்சத நத்தை என்று பெயர் வந்தது.

மழைக்காலங்களில் பல்கிப் பெருகும். இரவு நேரங்களில் சுறுசுறுப்பாக செயல்படும். மழைக்காலம் ஓய்ந்ததும் நீண்ட உறக்க நிலைக்குச் சென்று விடும். கிழக்கு ஆப்ரிக்க பூர்வகுடியான இந்த நத்தைகள்

அங்கிருந்து இந்தியாவிற்கு வர்த்தகம் செய்த கப்பல்கள் வழியே வந்தடைந்தன. இந்திய தீபகற்பத்தின் தென்பகுதி மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் இந்த நத்தைகள் வாழ்ந்து வருகின்றன. முதலில் வனங்களில் வாழ்ந்து பிறகு கழனிகளில் வாழப்பழக்கப்பட்டு

இப்போது நகர்புறங்களிலும் மனிதர்கள் வாழும் இல்லங்களிலும் வாழப் பழகி விட்டன. இப்போது இந்த நத்தைகள் குறித்து மனிதர்களாகிய நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என்ற பகுதிக்குள் செல்வோம். ஆஞ்சியோஸ்ட்ராங்கைலஸ் (Angiostrongylus) எனும் நுண்ணிய ஒட்டுண்ணி உயிரி உள்ளது. இது எலிகளில் தொற்று ஏற்படுத்தி அதன் உடலினுள் பலுகிப் பெருகக் கூடியது.

தொற்றுக்குள்ளான எலிகள் அதன் கழிவுகளில் இந்த ஒட்டுண்ணியை வெளியேற்றும். அந்தக் கழிவுகளை உண்ணும் ராட்சத நத்தைகளுக்கும் தொற்றுப் பரவல் நடக்கும். இடையே, இந்த நத்தை நேரடியாக தொடுவதாலும் தொட்டபின் தெரியாமல் கைகளை வாயில் வைப்பதாலும், இந்த நத்தையின் சளிச்சவ்வுபட்ட நீர் மற்றும் உணவை உண்பதாலும்,

இந்த நத்தையை சரியாக சமைக்காமல் சாப்பிடுவதாலும் ஆஞ்சியோஸ்ட்ராங்கைலஸ் தொற்று நத்தையிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவி விடுகிறது.

இதன் விளைவாக காய்ச்சல், பின்கழுத்துப் பகுதி வலி, இறுக்கம், பிதற்றல் நிலை, மூர்ச்சை நிலை என மூளைக் காய்ச்சல் ஏற்படலாம். இதை ஈசினோஃபிலிக் மெனிங்கோ எண்கஃபாலிட்டிஸ் (EOSINOPHILIC MENINGO ENCEPHALITIS) என்று அழைக்கிறோம். அரிதான நோய் தான். இதற்கு ஸ்டீராய்டு சிகிச்சை அதனுடன் அல்பெண்டசோல் எனும் ஒட்டுண்ணி கொல்லும் மருந்தும் சிகிச்சையாக இருக்கிறது.

எனினும் மழைக் காலங்களில் நகர்ப்புறங்களை குறிப்பாக வீடுகளில் இந்த நத்தைகள் அதிகரிக்கக்கூடும் என்பதால் மனிதர்களுக்கும் இந்த நத்தைக்கும் இடையே தொடர்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் இது குறித்து நாம் அறிந்து வைத்திருப்பது காலத்தின் தேவையாக இருக்கிறது. செப்டம்பர் முதல் நவம்பர் 2024இல் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னை மாநகரின் புனித தாமஸ் மவுண்ட், திரிசூலம், பெருங்களத்தூர் குன்றுப் பகுதிகள் ஆகியவற்றில் இந்த நத்தைகள் அதிகமாக வாழ்ந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம் என்பதாலும் வெள்ளப் பெருக்கினால் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதாலும் இந்த நத்தைகள் மனிதர்களின் வாழ்விடங்ளுக்குள் மழைக் காலங்களில் வரும் வாய்ப்பு அதிகம்.

இந்த நத்தைகள், சென்னை அன்றி சிதம்பரம், கோவை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களிலும் இருக்கலாம். இந்த நத்தையினால் வரும் பிரச்சனையை தடுக்க சில வழிகள்

- இந்த நத்தைகள் வசிக்க ஏதுவான மறைவான இடங்களைக் கண்டறிந்து இவற்றை கையுறை அணிந்த கைகளால் எடுத்து உப்பிலோ/ சுண்ணாம்பிலோ/ ப்ளீச்சிங் பவுடரிலோ போட்டால் இறந்து விடும்.

- நத்தைகள் மீது உப்பு / ப்ளீச்சிங் பவுடர் / சுண்ணாம்பு போன்றவற்றை போடும் போது இறந்து விடும்

- பப்பாளி இலைகளை ஈரப்பதம் கொண்ட சாக்குப்பைக்குள் போட்டு ஒரு இடத்தில் வைத்தால் அனைத்து நத்தைகளும் அதை உண்பதற்கு அங்கு வந்துவிடும் என்ற டெக்னிக்கும் உள்ளது.

- நத்தைகள் வசிக்கும் இடங்களில் அரிசி உமியுடன் 5% மெட்டால்டிஹைடு (Metaldehyde) கலந்து போட்டு விட வேண்டும்.

- குழந்தைகளை சிறார்களை இந்த நத்தைகளுடன் விளையாட அனுமதிக்கக் கூடாது.

- ஏரி, குளங்களில் இருந்து கிடைக்கும் நண்டுகள், இறால் வகைகள் இந்த நத்தைகளை புசித்து இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அவற்றுக்கும் ஆஞ்சியோஸ்ட்ராங்கைலஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே, நத்தை, இறால், நண்டு போன்றவற்றை முறையாக அதிக வெப்பத்தில் சமைத்து உண்ண வேண்டும். இந்த ஆஞ்சியோஸ்ட்ராங்கைலஸ் தொற்றினால் மனிதர்களிடையே மரணம் என்பது 0.5% மட்டுமே. எனவே அச்சம் தேவையில்லை. மூர்ச்சை நிலை அடைந்த பிறகு சிகிச்சைக்காக செல்லும் போது 90% மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் விழிப்புணர்வு அவசியம் எனப்பட்டது.

நம் வீட்டில் நத்தைகள் வாழ்ந்து வந்தால், நமக்கு வாந்தி, குமட்டல், காய்ச்சல், தலை சுற்றல், பின் கழுத்துப் பகுதி இறுக்கம் ஆகிய அறிகுறிகள் தோன்றினால் மருத்துவர்களிடம் இந்த நத்தைகள் குறித்து கூறிட வேண்டும்.

உடனே அதற்குரிய பரிசோதனைகள் செய்து விரைவாக ஸ்டீராய்டு + அல்பெண்டசோல் சிகிச்சை கொடுத்து குணப்படுத்திட ஏதுவாக அமையும்.

நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள், உயிரினங்கள் மற்றும் அவற்றால் நமக்கு உண்டாகும் நோய்கள் குறித்து அறிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+