கொல்கத்தா பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்! கூட்டு பலாத்காரமா? டாக்டர் சொல்வது என்ன?
சென்னை: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நடந்த சில உண்மை சம்பவங்கள் என்னென்ன என்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் வன்புணர்வு மற்றும் கொலை செய்யப்பட்டது குறித்து சில உண்மை விளக்க அப்டேட்கள். அன்னாரது பிரேத பரிசோதனையை மூன்று சட்ட மருத்துவத் துறை நிபுணர்கள் செய்துள்ளனர்.

அவரது பிரேதப் பரிசோதனை ஆவணத்தின் படி இறப்பிற்கான காரணமாக கழுத்து நெரிக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் மரணம் சம்பவித்துள்ளது. பிறப்புறுப்பில் இருந்து விந்து திரவம் சேகரிக்கப்பட்டுள்ளது. எனினும் 151 மில்லி கிராம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது கர்ப்பபை உள்ளிட்ட இனப்பெருக்க உறுப்புகளின் மொத்த எடை என்பது புலனாகிறது. அது விந்து திரவத்தின் எடை அல்ல என்பதும் விளங்குகிறது.
அடுத்து அவரது உடலில் உள்ள எலும்புகள் எதிலும் முறிவு ஏற்படவில்லை. எலும்பு மூட்டுகள் எங்கும் விலகி இருக்கவில்லை. இடுப்பெலும்பு உடைக்கப்பட்டது போன்ற அனைத்தும் வதந்திகள் என்பது தெரிகிறது. அவரது உடலில் பலவந்தமாக வன்புணர்வு செய்யப்பட்ட போது ஏற்படும் நகக் காயங்கள், கடித்ததால் ஏற்படும் காயங்கள் உள்ளதாக தெரிகிறது.
காயங்கள் அனைத்தும் இறப்பிற்கு முன் நேர்ந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறப்பின் காரணத்திற்காக அறிக்கையில் பாலியல் வன்புணர்வு நடந்திருப்பதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்வில் ஆய்வு செய்து வந்த சிபிஐ அதிகாரி ஒருவர் இனி இந்த விசயத்தில் ஆய்வு செய்ய முடியாது என்று தனது விலகல் கடிதம் கொடுத்திருப்பதாக வரும் படங்கள் பொய்யானவை.
இந்த கொடுஞ்செயலைக் கண்டித்து நீதி வேண்டி மருத்துவர்களின் நாடு தழுவிய போராட்டத்தின் விளைவாக சில நன்மைகள் நடந்துள்ளன. அவை பின்வருமாறு: கொல்கத்தா மருத்துவர் வன்புணர்வுக் கொலை வழக்கை சுவோ மோட்டோ வழக்காக( சுயமாக நீதிமன்றம் எடுத்துக் கொள்ளும் வழக்கு) பதிவு செய்து இன்று செவ்வாய்க்கிழமை வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய பெஞ்சுக்கு நீதி விசாரணைக்கு வருகிறது.
நடுவண் அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரிகளில் பெண்களின் பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய கமிட்டி அமைத்துள்ளது. தமிழ்நாடு அரசு உத்தரவின்படி காவல் துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் அரசு மருத்துவமனைகளில் பெண்களின் பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமராக்களின் இயக்கம், காவலாளிகளை நிற்க வைப்பது, போலீஸ் பீட் போன்றவை தொடர்ந்து நிகழுமாறு மாவட்டந்தோறும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
16 நிமிடங்களுக்கு ஒருமுறை வன்புணர்வு நிகழ்வுகள் நம் நாட்டில் பதிவு செய்யப்படுகிறது (பதிவு செய்யப்படாத வழக்குகள் இன்னும் இருக்கலாம்) என்பதை எண்ணும் போது மனம் அச்சம் கொள்வதைத் தடுக்க முடியவில்லை. இந்த நிலை மாற வேண்டும்.
நம்மிள் இருந்து அந்த மாற்றம் தொடங்க வேண்டும். தொடர்ந்து நல்ல மாற்றத்தை நோக்கி முன்னேறுவோம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications