தேனீக்களை கடிக்க வைத்து, விஷத்தை ஊசியாக ஏற்றி சிகிச்சை அளிக்கலாமா? இத்தனை நன்மைகளா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேனீக்களை கடிக்க வைத்து சிகிச்சை செய்யும் முறையை செய்யலாமா , செய்யக் கூடாதா, என்பது குறித்தும் அந்த சிகிச்சையால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் சிவகங்கை அரசு மருத்துவமனையின் மருத்துவர் டாக்டபர் பரூக் அப்துல்லா விவரித்துள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியிருப்பதாவது: தேனீக்களை கடிக்க வைத்து சிகிச்சை செய்யும் முறை குறித்த அறிவியல் பார்வை. தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் , தேன் மகரந்தப் பொடி , ராயல் ஜெல்லி, ப்ரொபாலிஸ் ஆகியவற்றை மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் முறை "ஏப்பி தெரபி" ( Apitherapy)என்று அழைக்கப்படுகிறது.

dr farook abdulla honey bee

இதில் ஏபிஸ் மெல்லிஃப்ரா எனும் சேவகம் செய்யும் தேனீக்கள், ஒருவரைக் கொட்டும் போது அவை வெளிப்படுத்தும் நஞ்சுப் பொருளில் 88% தண்ணீரும் அதனுடன் "மெலிட்டின்" ( MELITTIN) எனும் புரதப் பொருள் முக்கியப் பொருளாக உள்ளது. இந்த மெலிட்டின், தேனீ கொட்டும்போது ஏற்படும் வலிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த மெலிட்டின் கொண்டு எலிகளில் செய்யப்பட்ட ஆய்வில் அந்தப் பொருளில் வைரஸ் கொல்லி, பாக்டீரியா கொல்லி செயல்பாடு இருப்பது தெரியவந்தது. இந்த மெலிட்டின் எனும் புரதத்தை உருவாக்கும் மரபணுக்கள் வேறெந்த உயிரினத்திலும் காணப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு முறை கொட்டும் போதும் 50 முதல் 140 மைக்ராகிராம் நஞ்சு வெளிப்படுகிறது.

தேனீயின் கொடுக்கில் இருந்து வெளிப்படும் மெலிட்டினுடன் கூடவே அபாமின், அடோலாபின் ஆகியவற்றிலும் அழற்சியை சரிசெய்யும் குணம் இருப்பது தெரிகிறது. இவையன்றி உடலுக்கு ஊறு செய்யும் பாஸ்ஃபோலைபேஸ் ஏ2, லைஸோ பாஸ்ஃபோலைபேஸ், ஹையாலாருணிடேஸ் ஆகியவற்றையும் சேர்த்தே விஷத்தில் அடங்கியிருக்கும்.

தேனீ கொட்டும் போது வெளிப்படும் இந்த நஞ்சை எடுத்து அதிலிருந்து களிம்பு , சத்து மாத்திரைகள் , ஈரப்பதம் தக்கவைக்கும் களிம்புகள் , ஊசி மருந்து ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. தேனீ கொடுக்கில் இருக்கும் இந்த நஞ்சை - முடக்குவாதம் , மல்டிபில் ஸ்க்லிரோசிஸ், மூட்டு வலி, பார்கின்சோனிசம் போன்றவற்றில் ஏபி தெரபி எனும் பெயரில் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

எனினும் தேனீயின் நஞ்சை ஊசி மூலமோ அல்லது நேரடியாகக் கடிக்க விடுவதன் மூலம் உடலில் ஒவ்வாமை தோன்றவும் வாய்ப்பு உள்ளது. இந்த ஒவ்வாமையின் விளைவாக
- வலி
- வீக்கம்
- சிவந்து போதல்
- நிறமாற்றம் ஏற்படுதல் போன்றவை தோன்றும்.
இதனுடன் அரிதாக அனாஃபிலாக்சிஸ் எனும் தீவிர ஒவ்வாமை நிலை ஏற்படும்.

இதன் விளைவாக திடீரென மூச்சுத் திணறல், உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டு , ரத்த அழுத்தம் குறைந்து மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு உள்ளது. 2018 ஆம் ஆண்டு ஸ்பெயினில் 55 வயது பெண்மணி ஒருவருக்கு தேனீ நேரடியாக கொட்ட விடப்பட்ட போது அனாஃபிலாக்சிஸ் ஏற்பட்டு மரணமடைந்தது ஆய்வு முடிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுத்தீகரிக்கப்பட்ட தேனீயின் நஞ்சை அமெரிக்காவின் எஃப் டி ஏ தேனீக் கடி மூலம் அடிக்கடி ஒவ்வாமைக்கு உள்ளாகுபவர்களுக்கு சிகிச்சையாகப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. எனினும் வேறு எந்த நோய்க்கும் தேனீயின் நஞ்சை மருந்தாகப் பயன்படுத்தும் அனுமதியை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு நிர்வாகம் இன்னும் வழங்கவில்லை.

2018 இல் பிரேசில் அரசாங்கம் தேனீக்கடி சிகிச்ச, களிமண் சிகிச்சை, மலர் சிகிச்சை ஆகிய பத்து மாற்று மருத்துவ சிகிச்சைகளை அங்கீகரித்த போது, மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் பரிசோதனைகளின் தரத்தை நிர்ணயம் செய்யும் காக்ரேன் , தேனை தீக்காயத்துக்கு கட்டு போடுவதற்கும், தேனீக்கடி மூலம் உண்டாகும் ஒவ்வாமைக்கு சிகிச்சையாகவும் பயன்படுத்த ஆய்வு முடிவுகள் ஆதரவளிக்கின்றன.

எனினும் அதை மனிதர்களுக்கு வேறு நோய்களுக்கு சிகிச்சையாக தேனீயின் நஞ்சை பயன்படுத்த ஆய்வு ரீதியான தரவுகள் இல்லை என்று வெளியிட்டது. நிலைமை இப்படியிருக்க ஒரு கிராம் தேனீ நஞ்சுக்கு சந்தையில் மதிப்பு ரூபாய் 5000 முதல் ரூபாய் 15000 ஆகும். தேனீ நஞ்சின் சந்தை மதிப்பு 2022 இல் 330 மில்லியன் டாலர்கள் என்று இருக்கிறது.

2030 இல் இந்த சந்தை மதிப்பு 530 மில்லியன் டாலர்களாக உயர்வதற்கும் வாய்ப்பு உள்ளது என்கின்றன ஆய்வுகள். தேனீக்களை நேரடியாக கடிக்க விடுவது அல்லது தேனீ நஞ்சை ஊசி மூலம் செலுத்துவது சில நன்மைகளைக் கொண்டிருந்தாலும் அறிவியல் ஆய்வுகளில் அதன் பலன்களை சந்தேகத்திற்கு இடமின்றி இன்னும் நிரூபிக்க இயலவில்லை.

மேலும் இந்த சிகிச்சையினால் உயிருக்கு ஆபத்தான முறையாகும். இதன் காரணமாகவே இந்த முறைக்கு அறிவியல் அங்கீகாரம் பெற இயலவில்லை. இத்தகைய சிகிச்சையை மருத்துவரிடமோ/ மருத்துவரல்லாதோரிடமோ பெறுவது உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு பெற வேண்டுகிறேன். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+