ஷிஹான் ஹுசைனிக்கு வந்தது ஏப்ளாஸ்டிக் அனீமியா! நோயின் அறிகுறிகள் என்ன? டாக்டர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கராத்தே, வில்வித்தை வீரரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனிக்கு வந்த ஏப்ளாஸ்டிக் அனீமியா என்பது என்ன என்பது குறித்தும் அந்த நோயின் அறிகுறிகள் என்ன என்பது குறித்தும் சிவகங்கை அரசு மருத்துவமனை டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரபல கராத்தே வீரரும் பல்துறை வித்தகருமான ஷீஹான் ஹூசைனி அவர்கள் இன்று (நேற்று) அதிகாலை மரணமடைந்திருக்கிறார். கடந்த இருபத்தி இரண்டு நாட்களாக "ஏப்ளாஸ்டிக் அனீமியா" எனும் குருதி சார்ந்த நோய் ஏற்பட்டு அதனுடன் போராட்டம் நடத்தியதை தனது முகநூல் வாயிலாக நாம் அனைவரும் பார்த்தோம்.

health dr farook abdulla shihan hussaini

மரணம் கண் முன் தெரிந்தும் கூட அதை தைரியமாக எதிர்கொள்பவர்கள் நம்மிடையே மிகவும் குறைவு.
எனினும் மனவலிமை படைத்த அவர் தனது மரணத்திற்கு முன்பு சட்டப்படி செய்ய வேண்டிய பல விஷயங்களை மருத்துவமனையில் இருந்த படி செய்தது உள்ளபடி நமக்கெல்லாம் நிகழ்கால பாடமாக அமைந்தது.

அன்னாரை இழந்து வாடும் அவர் தம் சீடர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக. இப்பதிவின் மூலம் அரிதான நோயான ஏப்ளாஸ்டிக் அனீமியா குறித்து விளக்குகிறேன்.

நமது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் , தட்டணுக்கள் ஆகிய மூன்று வகை அணுக்கள் உள்ளன. இவற்றில் வெள்ளை அணுக்கள் - நமது உடலுக்குள் வரும் எதிரிகளான கிருமிகள்/ விஷமிகள் போன்றவற்றுடன் போர் புரிந்து போராடும் ராணுவ வீரர்கள் ஆவர். சிவப்பு அணுக்கள் - நமது ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனையும் ஊட்டச் சத்தையும் மூளை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் செல்களுக்கும் எடுத்துச் செல்லும் பணியைச் செய்கின்றன.

தட்டணுக்கள் - ரத்த உறைதலில் பங்காற்றுகின்றன. இந்த மூன்று வகை செல்களும் நமது பெரிய எலும்புகளின் உள்ளே உள்ள மஜ்ஜைகளில் இருந்து உண்டாகின்றன. நாம் மட்டன் சாப்பிடும் போது எலும்பை தட்டி உறிஞ்சி சாப்பிடுவோம் தானே... அது தான் எலும்பு மஜ்ஜை.

அந்த எலும்பு மஜ்ஜைகளில் இருந்து தோன்றுபவையே இந்த மூன்று வகை செல்களும் ஆகும். திடீரென ஒருவருக்கு அவரது நோய் எதிர்ப்பு சக்தியானது அவரது உடல் அங்கங்களில் ஒன்றையோ பலவற்றையோ குறி வைத்து தாக்குதல் நடத்தினால் அதை ஆட்டோ இம்யூனிட்டி என்று அழைக்கிறோம். அதாவது நமது நாட்டு ராணுவ வீரர்கள் எதிரியை அழிப்பதோடு தவறுதலாக நம் நாட்டு மக்களையும் சேர்த்து அழித்தால் எப்படி இருக்கும்?

அது உடலில் நிகழும் போது ஆட்டோ இம்யூன் நோய் உருவாகிறது.
இங்கு ஏப்ளாஸ்டிக் அனீமியாவில், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி செல்களான டி - செல்கள் , மூன்று வகை ரத்த அணுக்களை உருவாக்கும் எலும்பு மஜ்ஜை செல்களையும் ஒரு சேர அழித்தொழிக்கின்றன.

இதனால் எலும்பு மஜ்ஜைகளால் இவ்வகை செல்களை உருவாக்க இயலாமல் போகின்றது. நிகழும் இவ்வகை ஏப்ளாஸ்டிக் அனீமியாக்களில் மூன்றில் இரண்டிற்கு இது தான் காரணம் என்று வரையறை செய்து கூற இயலவில்லை. மரபணுக்களும் சுற்றுப்புறக் காரணிகளும் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை எலும்பு மஜ்ஜை செல்களுக்கு எதிராகத் தூண்டுகின்றன.

புற்று நோய்க்கு பயன்படுத்தப்படும் கீமோதெரபி மருந்துகள் , சில ரசாயனங்கள் , வைரஸ் தொற்றுகள் ஆகியவற்றால் இவ்வகை ஏப்ளாஸ்டிக் அனீமியா ஏற்படுவது தெரிகிறது. இந்த நோய் எந்த வயதினருக்கும் இருபாலினருக்கும் ஏற்படலாம் என்று அறியப்பட்டாலும் பெண்களை விட ஆண்களுக்கு சற்று அதிகமான அளவில் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நோயின் அறிகுறிகளாக
- அயற்சி
- சோர்வு
- இடைவிடாது ஏற்படும் தொற்றுகள்
- உதிரப்போக்கு
- ஈர்களில் ரத்தக் கசிவு
- மூக்கில் இருந்து ரத்தக் கசிவு
- வெளுத்துப் போன தோற்றம்
- இதயத்துடிப்பு சீரற்ற நிலை
- மூச்சுத் திணறல்
ஆகியவை வெளிப்படும்.

ரத்த செல்களை பரிசோதனை செய்து பார்த்தால் சிவப்பு , வெள்ளை மற்றும் தட்டணுக்கள் மூன்றுமே அளவில் மிக மிகக் குறைந்து காணப்படும். இந்நோயை உறுதிப்படுத்த எலும்பு மஜ்ஜை செல்களை எடுத்து ஆராய்ச்சிக்குட்படுத்தப்படும். இந்நோய் தீவிரத்தன்மை பொருத்து மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகிறது.

தீவிரமற்ற நோய், தீவிரமான நோய், அதி தீவிரமான நோய். நோயாளியின் வயது, மரபணுக் காரணிகள்,
நோயின் தன்மை கூடவே பல்வேறு இணை நோய்கள் நோயாளியின் உடல் நிலை ஆகியவற்றை பொருத்து நோய் தீவிரமெடுக்கிறது. ஹூசைனிக்கு ஏற்பட்டது அதி தீவிர நோயாக இருக்கலாம்.

இந்த நோய்க்கு குணப்படுத்தக் கூடிய சிகிச்சை என்பது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையாகும். நோயாளியின் மரபணுக்களுடன் ஒத்துப்போகும் ஒருவரிடம் இருந்து எலும்பு மஜ்ஜை செல்கள் பெறப்பட்டு அவை நோயாளிக்கு மாற்றம் செய்யப்படும் போது அந்த செல்களை நோயாளியின் உடல் ஏற்றுக் கொண்டால் நோய் குணமாகிறது.

எனினும் இந்த சிகிச்சை செய்வதற்கு முன்பு நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை குன்றச் செய்யும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இன்னும் எலும்பு மஜ்ஜை மாற்று தள்ளிப் போகும் நிலையில் நோயாளியின் எதிர்ப்பு சக்தியை தீவிரமாக குன்றச் செய்யும்
ஆண்ட்டி தைமோசைட் குளோபுளின் மருந்து மற்றும் சைக்லோஸ்போரின் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

கூடவே தற்சமயம் எல்ட்ரோம்போபேக் எனும் தட்டணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கும் மருந்தும் வழங்கப்படுகிறது. இதன் விளைவாக தற்கால நவீன சிகிச்சையால் ஏப்ளாஸ்டிக் அனீமியா பாதிக்கப்பட்ட நபர்கள் நோய் நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

நோய்க்கு சிகிச்சை பெறும் பட்சத்தில் அந்த சிகிச்சை அந்த நோயாளிக்கு ஒத்துக் கொள்ளும் நிலையில் சராசரியாக 12.5 வருடங்கள் வரை ஆயுள் நீட்சி ஏற்படுகிறது. பல ஆய்வுகளில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை அல்லது எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் மருந்துகள் பெற்றவர்கள் முப்பது ஆண்டுகள் வரை கூட நல்ல நிலையில் வாழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே ஏப்ளாஸ்டிக் அனீமியா ஏற்பட்டுள்ள ஏனைய சகோதர சகோதரிகள் அச்சம் கொள்ள வேண்டாம். ஹூசைனியைப் பொருத்தவரை அவருக்கு எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் மருந்துகளின் விளைவால் ஏற்பட்ட அபாயகரமான கிருமித் தொற்றின் விளைவாக மரணம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

இது துரதிருஷ்டவசமானது. எனினும் இது சிகிச்சையின் வரம்புகளுக்கு உட்பட்டது என்பதை அனைவரும் ஏற்கத் தான் வேண்டும். தற்கால ஏப்ளாஸ்டிக் அனீமியா சிகிச்சையில் அவ்வப்போது ரத்த சிகப்பு செல்கள் மாற்றுவது, தட்டணுக்கள் ஏற்றுவது, ரத்த செல்களை உற்பத்தி செய்யும் மருந்துகளை வழங்குவது கிருமித் தொற்று பூஞ்சைத் தொற்று ஏற்படாமல் இருக்க ஆண்டிபயாடிக் ஆண்ட்டி ஃபங்கல் மருந்துகள் வழங்குவது ஆகியவற்றுடன் எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

நோயாளிகளின் நீட்சிக்கு இந்த சிகிச்சைகள் உதவுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம்மால் இயன்ற உதவியாக இத்தகைய நோயாளிகளுக்குத் தேவைப்படும் சிவப்பு அணுக்களையும் தட்டணுக்களையும் தானமாக
ஆரோக்கியமாக வாழும் நாம் அனைவரும் தொடர்ந்து குருதி தானம் வழங்குவதை உறுதி ஏற்போமாக..

அதுவே ஹூசைனியின் மரணத்தால் நம்மிடையே ஏற்படும் மாற்றமாக இருக்கட்டும். துயில் கொள்ளுங்கள் ஹுசைனி நீங்கள் முன்சென்று விட்டீர்கள் , நாங்கள் பின் வர இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+