டெங்கு காய்ச்சல் மொத்தம் 3 வகை இருக்கு.. கடைசி 2 ஸ்டேஜ் மிகவும் ஆபத்து.. டாக்டர் பரூக் விளக்கம்
சென்னை: டெங்கு காய்ச்சல் வந்தால் எதை எல்லாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: முகில்கள் தாழ்திறந்தால் மண்ணில் கார்காலம்..
மண்ணில் மழை பொழிந்தால் தொடங்கும் டெங்குவுடன் போர்க்கோலம். டெங்கு எனும் நோய் ஃப்ளாவி வைரஸ் (Flavi virus) எனும் தீநுண்மியால் வரும் நோயாகும். டெங்கு ஏடிஸ் எனும் கொசு கடிப்பதினால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது
இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது. பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது.

டெங்குவின் அறிகுறிகள்
1. கடுமையான காய்ச்சல் (101 டிகிரிக்கும் மேல்)
2. தலைவலி
3. உடல் அசதி
4. உடல் வலி
5. வாந்தி
6. வயிற்றுப்போக்கு
7. வயிற்று வலி
8. உடல் முழுவதும் சிவப்பு நிற படை தோன்றும்
முதல் மூன்று நாட்கள் கடும் ஜூரம் அடித்து அதற்கடுத்த நாள் உள்ளங்கை கால் பாதம் குளிர்ந்து போகும் தன்மை தென்பட்டால் வந்திருப்பது டெங்குவாக இருக்கலாம். இந்த நோயின் முதல் மூன்று நாட்கள் febrile phase என்று அழைக்கப்படும்
அடுத்த மூன்று நாட்கள் critical phase அதன் பிறகு Recovery phase. அதிகமாக காய்ச்சல் அடிக்கும் போது சுதாரித்து நீராகாரங்களை கொடுக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ் திரவத்தை கொடுக்க வேண்டும். உண்ண குடிக்க முடியாத அளவு காய்ச்சல் இருந்தால் ரத்தநாளம் வழியாக திரவங்களை ஏற்ற வேண்டும்.
அதற்கடுத்த மூன்று நாட்களில் தான் ரத்த நாளங்களில் அதிக நீரிழப்பு ஏற்படும்.
மேலும் ப்ளாஸ்மா எனும் நீர்மச்சத்து அதிகமாக ரத்த நாளங்களை விட்டு வெளியேறி விடும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து முறையாக ரத்த ஓட்டத்தை பேண இயலாமல் பல முக்கிய உறுப்புகளும் செயலிழந்து விடும். கூடவே வைரஸுடன் நடக்கும் போர்களத்தில் தட்டணுக்கள் உடைபடும்.அவற்றால் அதன் வேலையான ரத்தத்தை உறைய வைக்கும் வேலையை செய்ய முடியாது. இதனால் ரத்த நாளங்களில் இருந்தும் ரத்தக்கசிவு ஏற்பட்டு நிலைமையின் தீவிரத்தை கூட்டி விடும்.
டெங்குவில் மூன்று வகை உண்டு
1 .சாதாரண டெங்கு ஜூரம்
(Dengue Fever)
2. உதிரப்போக்குடன் கூடிய டெங்கு ஜுரம்( Dengue Hemorrhagic Fever)
3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம் (Dengue Shock Syndrome)
இதில் முதல் வகை வந்தால் இன்ன பிற காய்ச்சல் போல வந்த வழி தெரியாமல் சென்று விடும். மற்ற வைரஸ் காய்ச்சல்கள் போல அதிக உடல் உஷ்ணம் (104 டிகிரிக்கு மேல்) , இருமல், சளி, தலைவலி, உடல் வலி என்று இருக்கும். இரண்டாவது மற்றும் மூன்றாம் வகை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டது. இவற்றில் மேற்சொன்ன அறிகுறிகளுடன் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு , ரத்த தட்டணுக்களை ( platelets ) குறைத்து பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல் , மலத்தில் சிறுநீரில் ரத்தம் செல்லுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். அதை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு மற்றும் ரத்த போக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும்.
டெங்குவிற்கு ரத்த பரிசோதனை
ரத்தத்தில் எலிசா (ELIZA) எனும் பரிசோதனை மூலம் டெங்கு வைரஸ் இருப்பதை கண்டறியலாம்.
டெங்குவிற்கான சிகிச்சை முறை
• டெங்குவிற்கான தலையாய சிகிச்சை நீரிழப்பை சரிசெய்வதாகும். ஓ ஆர் எஸ் எனும் திரவத்தை காய்ச்சல் பாதித்த நோயாளிகள் அதிகமாக பருக வேண்டும்.
• வாயால் பருக இயலாதவர்களுக்கு, சிரை (intravenous hydration) வழியாக மருத்துவமனையில் திரவங்களை ஏற்ற வேண்டும்.
• காய்ச்சலை குறைக்க பாராசிடமால் மாத்திரை போதுமானது.
• குளிர்ந்த நீரை கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது மிகுந்த நன்மை பயக்கும்
• டெங்கு ஒரு வைரஸ் நோயாதலால் இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் அவசியம் இல்லை
• மேலும் ரத்த தட்டணுக்களை பாதித்து ரத்த போக்கை உருவாக்கும் வியாதியாதலால் தேவையற்ற ஊசிகளை தவிர்த்து விட வேண்டும்.
• காய்ச்சல் ஏற்படின் மருத்துவரை அணுகவேண்டும் . அதைவிடுத்து மருந்தகங்களில் சுயமாக மருந்து மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்
• போலி மருத்துவர்களிடம் சென்று தேவையற்ற ஊசிகளை போட்டுக் கொள்வது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.
• மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற சொன்னால் அதை உதாசீனப்படுத்தாமல் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டும்
டெங்கு பரவுவதை எப்படி தடுப்பது ?
மிக மிக எளிது டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவானது நல்ல நீரில் முட்டையிட்டு பொறிக்கக்கூடியது. ஆகவே நம் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் சட்டி சாமான்களை மூடியிட்டு வைக்க வேண்டும். வீட்டை சுற்றி பழைய டயர் , காலி பாட்டில்கள், பேப்பர் கப்கள் , சிரட்டைகள் , இளநீர் கூடுகள் எதையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டெங்கு கொசு முட்டையிட பத்து மில்லி நன்னீர் போதும் என்பதை கருத்தில் கொள்க. தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் அந்த கொசு முட்டையிட்டு வளரும். அதை கவனியுங்கள் .
தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு வாரம் ஒருமுறையேனும் தேய்த்து கழுவ வேண்டும் . ஏடிஸ் கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் கொசு. ஆதலால் நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் பத்தாது. நம் பிள்ளைகள் பகலில் நேரத்தை செலவிடும் பள்ளிகள் , நாம் பணிபுரியும் அலுவலகங்கள் அனைத்தையும் டெங்கு ஏடிஸ் கொசு இல்லாத இடங்களாக பராமரிக்க வேண்டும்.
கடைசியாக தண்ணீரை கட்டாயம் காய்ச்சி பருக வேண்டும். மலம் கழித்த பின்னும், உணவு உண்ணும் முன்னும் கட்டாயம் கைகளை வழலை (சோப்பு) கொண்டு கழுவ வேண்டும் . இந்த இரண்டு விசயங்களை கடைபிடித்தால் பல தொற்றும் நோய்கள் நமக்கு வருவதை தவிர்க்கலாம். டெங்கு வந்தபின் சிகிச்சை செய்வதை விடவும். டெங்குவை வருமுன் தடுப்பது மிக எளிது . இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications