ஃபாஸ்டிங், சாப்பிட்ட பிறகு சுகர் நார்மல்! அப்போ 3 மாத சர்க்கரை அளவு மட்டும் ஆவுட் ஆப் கன்ட்ரோல் ஏன்?
சென்னை: ஒருவருக்கு சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட்ட பின்பும் நீரிழிவு நோயின் அளவு எடுத்து பார்க்கும் போது அது கட்டுக்குள் இருந்தால் சர்க்கரை நோய் இல்லை என்று அர்த்தமா?
இது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது: காலை வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்த க்ளூகோஸ் அளவும் சாப்பிட்டு இரண்டு மணிநேரங்கள் சென்ற பின் எடுக்கும் க்ளூகோஸ் அளவும் நோயரையும் மருத்துவரையும் சேர்த்தே ஏமாற்றும் தந்திரம் கொண்டவை.

கடந்த சில வருடங்களாக நீரிழிவுடன் வாழும் என்னை சந்திக்க வந்த சகோதரர் ஒருவருக்கு காலை வெறும் வயிற்றில் சுகர் - 118 mg/dL மட்டுமே. உணவு சாப்பிட்ட பின் + மாத்திரை போட்ட பின் - 127 mg/dl மட்டுமே. இந்த இரண்டும் நார்மல் என்று பார்த்துக் கொண்டிருந்தால் நிச்சயம் நானும் அவரும் நீரிழிவின் தந்திரத்தால் ஏமாற்றப்படுவோம்.
எனவே இவருக்கு மூன்று மாத ரத்த க்ளூகோஸ் அளவுகளை அறியும் Hba1c (glycosylated Hemoglobin)பரிந்துரை செய்தேன். அதில் அவரது கடந்த மூன்று மாத ரத்த க்ளூகோஸ் அளவுகள் கட்டுக்குள் இல்லாமல் இருப்பது திட்டவட்டமாகத் தெரிந்தது. Hba1c = 8.6% இருக்கிறது.
Hba1c எப்போதும் 7 க்குள் இருப்பது நீரிழிவு நோயரைப் பொருத்தவரை நல்ல கண்ட்ரோல் என்று கொள்ளப்படும். அதுவே 8 ஐ தாண்டினால் பாதகமான அளவு என்று கொள்ளப்படும்.
7 க்கும் 8 க்கும் இடையில் இருப்பது மதில் மேல் பூனை என்ற நிலை அன்னாருக்கு காலை வெறும் வயிற்றில் சுகர் ஓரளவு நல்ல கண்ட்ரோலில் இருப்பது என்பது இரவு உணவுக்குப் பிறகு 12 மணிநேரம் ரத்த க்ளூகோஸ் ஓரளவு நல்ல கண்ட்ரோலில் இருப்பதைக் காட்டுகிறது. இவருக்கு கணையத்தின் பீட்டா செல்கள் கையிருப்பு நல்ல நிலையில் உள்ளது என்பதையும்
அதன் மூலம் இன்சுலின் சுரப்பும் நல்ல நிலையில் இருப்பதை இரவு ஐந்து தோசை சாப்பிட்ட பின்பும்
காலை வெறும் வயிற்று க்ளூகோஸ் மற்றும் காலை உணவாக ஆறு இட்லிகள் உட்கொண்ட பின்பும் உணவு சாப்பிட்ட பின் வரும் கட்டுக்குள் இருக்கும் க்ளூகோஸ் அளவுகள் காட்டுகின்றன.
ஆயினும் ஏன் Hba1c கூடியது? இதற்கு காரணம் இவர் கடும் வெயிலில் கடின உழைப்பு கோரும் வேலை செய்பவர் என்பதால் அடிக்கடி சீனி கலந்த தேனீர் அருந்துவது வழக்கம். மேலும் மதிய உணவை சரியான நேரத்தில் உண்ண இயலாத வேலை புரிவதால் , உணவு கிடைக்கும் போது கோரப்பசி ஏற்பட்டு மதிய உணவை நன்றாக மேலதிகமாக சாப்பிட்டு விடுகிறார்.
நாம் காலை வெறும் வயிற்றிலும் காலை உணவு சாப்பிட்ட பிறகும் மட்டுமே க்ளூகோஸை பார்த்துக் கொண்டிருந்தால் ஒருவரது அதற்குப் பின்பான வாழ்வியல் மற்றும் உணவு உட்கொள்ளும் விகிதம் பொருத்து ஏறும் இறங்கும் க்ளூகோஸ் அளவுகளை சரியாக கணிக்க இயலாது. எனவே இவருக்கு Hba1c எடுத்ததன் மூலம் கட்டாயம். இனி தேனீர் இனிப்பு போட்டு அருந்தக் கூடாது எனவும் மதிய உணவை அளவுக்குள் உண்ண வேண்டும் என்றும் இவருக்காக அவரது கடினமான பணிச் சூழலுடன் பொருந்திப் போதுமாறு பிரத்யேகமான உணவுப் பரிந்துரை வழங்கப்பட்டது.

மேலும் 24 மணிநேரங்களும் ரத்த க்ளூகோஸ் அளவுகளை கட்டுக்குள் வைக்குமாறு மருத்துவ சிகிச்சை மாற்றி அமைக்கப்பட்டது. Fasting & PPBS அளவுகள் கட்டுக்குள் இருந்தும் கூட அன்னாருக்கு நீரிழிவினால் ஏற்படும் நியூரோபதி ( நரம்பு மண்டல அழற்சி) ஏற்பட்டது கண்டறியப்பட்டது. எனவே நீரிழிவு நோயர்களே உங்களது காலை வெறும் வயிற்று சுகர் , காலை உணவு சாப்பிட்ட பின் சுகர் மட்டும் பார்க்காமல் கூடவே மூன்று மாதம் ஒருமுறை Hba1cஐயும் ஒரு கண் பார்த்து வர வேண்டும்.
கட்டாயம் மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும். மருத்துவரின் கண்காணிப்பு என்பது நோய் நிலை முற்றுவதில் இருந்தும் காக்கும் விசயமாகும். நீரிழிவை சிறப்பாக கட்டுக்குள் வைக்க உணவு உடற்பயிற்சி சார்ந்த வாழ்வியல் மாற்றம் கூடவே மருத்துவ அறிவுரையின் பேரில் சிகிச்சை & கண்காணிப்பு அவசியமானதாகிறது. இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications