கருவாட்டுக்குழம்பு செய்றீங்களா.. "சென்னாகுன்னி"யை விட்றாதீங்க.. சென்னாகுனியை இப்படி க்ளீன் பண்ணுங்க
சென்னை: கருவாடுகளிலேயே, சென்னாகுன்னி கருவாடுக்கென்றே, ஸ்பெஷல் மவுசு உண்டு.. காரணம், சென்னாகுன்னியின் ருசி மற்ற கருவாடுகளில் இருப்பதில்லை. சிலர் இதை சென்னாகுனி என்பார்கள்.. சிலர் இதை கூனி கருவாடு என்பார்கள்.
இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை.. கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம்.

அதிக சத்து: கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும்போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும்,
இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன.. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்றுநோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.
இறால் தலை: வெட்டியெறியப்படும் இறால் தலையிலும் நிறைய சத்துக்கள் உள்ளன.. அதனால் இதை வைத்து சமையல் செய்வார்கள்.. சிலர் பஜ்ஜி போல செய்து சாப்பிடுவார்கள். சிலர், தூக்கி எறியப்படும், இந்த தலை, வால், ஓடு இவைகளை எல்லாம் சேர்த்து சூப் வைத்தும் சாப்பிடுவார்கள். இறால் மீனை காயவைத்தால், அதுதான் சென்னாகுன்னி கருவாடு...
இறால் மீனை காயவைத்தால், அதுதான் சென்னாகுன்னி கருவாடு... சென்னாகுனி அல்லது சென்னகுன்னி அல்லது கூனி கருவாடு என்பார்கள்.. லைட் ஆரஞ்சு கலரில் அதாவது பொன்னிறத்தில் இருக்கும்.. சில கருவாடு வெள்ளையாகவும் இருக்கும். கடைகளில் படியில்தான் அளந்து தருவார்கள்..
இது ஒரு பொடி கருவாடு.. பொடி செய்து வைத்து கொண்டால், சமையலில் அவசரத்துக்கு இது உதவும்.. அல்லது இட்லி பொடி போலவும் செய்யலாம்.
கருவாடுகள்: எப்போதுமே இந்த சென்னாகுன்னியை சரியாக சுத்தம் செய்ய வேண்டும்.. முழுக்க முழுக்க மணல் கலந்து இருப்பதால், மற்ற கருவாடுகளை போல இதை கழுவ முடியாது.. அதனால், ஒரு பாத்திரத்தில் இந்த சென்னாகுனியை கொட்டி, லேசாக தேய்த்து, அதிலுள்ள உமி, அல்லது மண்ணை புடைத்து எடுத்துவிடுவார்கள்.
பிறகு, அடுப்பில் வாணலை வைத்து, சின்னாக்குன்னியை கொட்டி, லேசாக வறுப்பார்கள்.. ஒருவித மணம் அதிலிருந்து வரும்.. இதுதான் சரியான பதம். அதை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, அதே வாணலில் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்க வேண்டும்.. பிறகு, பொட்டுக் கடலையையும் லேசாக சூடு செய்து கொள்ளவேண்டும். இப்படி தனித்தனியாக வறுத்து ஆறுவைத்து, இதனுடன் கல் உப்பு சேர்த்து அரைத்து, சலித்து எடுத்து கொள்ள வேண்டும். இதுதான் சென்னாகுன்னி இட்லி பொடி.
சென்னாகுன்னி: அல்லது சென்னாகுன்னியை ஒரு பாத்திரத்தில் கொட்டி, தேய்த்து, புடைத்து எடுத்து கொண்டு, வாணலில் லேசாக வறுத்து பொடித்து வைத்து கொள்ளலாம். வெறுமனே இந்த பொடியை, காரக்குழம்பு, புளிக்குழம்பு, முட்டைக்குழம்புகள் செய்யும்போது பயன்படுத்தலாம்.. சாராணமாக குழம்புகளை வைத்துவிட்டு, கடைசியாக இந்த வறுத்த பொடியை தூவி இறக்கிவிடுவார்கள்.

அல்லது காய்கறி கூட்டுகள், பொரியல்கள் எது செய்தாலும், கடைசியாக இறக்கும்போது, இந்த பொடியை தூவுவார்கள். சுவை இரண்டு மடங்காக இருக்கும்.
கருவாடு துவையல் : சிலர் இதில் துவையல் செய்வார்கள்.. இந்த சென்னாக்குன்னி கருவாட்டை தண்ணீரில் அலசி, உலர வைத்து எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கருவாட்டை சேர்த்து வறுக்க வேண்டும். ஆனால், அடுப்பை குறைத்து வைத்துதான் வறுக்க வேண்டும்.. மொறுமொறுப்பாக வரும்வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
பிறகு, அதே வாணலியில் மறுபடியும் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயை சேர்த்து அதையும் வறுத்து தனியே எடுத்துவைத்து கொள்ள வேண்டும்.. அதே வாணலியில் சீரகம், சின்னவெங்காயம், பூண்டு, புளி, சிறிது தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்க வேண்டும்.. அனைத்தும் பொன்னிறமாக வரும் வரை வறுத்துவிட்டு, கல் உப்பு சேர்த்து ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்தால், சென்னாக்குன்னி துவையல் ரெடி.. இதையும், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications