சரியான நேரத்தில் சாப்பிடலேன்னா இதெல்லாம் நடக்கும்.. இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதால் எக்கச்சக்க நன்மை
சென்னை: இரவு 7 மணிக்குள் இரவு உணவை முடித்து கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துவது ஏன் தெரியுமா? தவறான நேரத்தில் உணவு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பணிச்சுமை, சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பலரால் இரவு 10, 11 மணிக்குதான் சாப்பிட நேரிடுகிறது. சிலருக்கு வேலைநேரம் முடியவே, இரவு 9, 10 மணி ஆகிவிடுகிறது. ஆனால், தவறான நேரத்தில் உணவு சாப்பிடுவதே, பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாகிறது என்கிறார்கள்.

காலை உணவு: எப்போதுமே காலை 10 மணிக்குள் உணவு சாப்பிட வேண்டும். காரணம், முதல்நாள் இரவுக்கு பிறகு உணவு சாப்பிடாததால் காலை 9 மணிக்குள் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். அதேபோல் மதியம் 2 மணிக்குள்ளும், இரவு 8 மணிக்குள்ளும் உணவு சாப்பிடுவது அவசியம்... இதில் காலதாமதம் ஆனால், அல்சர் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
அதுமட்டுமல்ல, எப்போதுமே சாப்பிட்ட 2 மணி நேரத்தில் உணவு செரிமானம் ஆகிவிடும் என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. தாமதமாகும்போது, குளுகோஸின் கிரகிக்கும் தன்மை குறைகிறது... அத்துடன், வயிற்றில் புண், நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.
சர்க்கரை நோயாளி: அதனால்தான் சர்க்கரை நோயாளிகளை மேற்குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட சொல்கிறார்கள். இல்லாவிட்டால், சர்க்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில், சிலர் காலை உணவை சாப்பிடாமல், நேரடியாகவே மதிய உணவை சாப்பிடுவார்கள். இவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயம் உள்ளது..
இரவு நேரத்தில் சாப்பிட்டவுடனே தூங்க செல்வது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்... செரிமானம் சீராக நடக்காமல், அஜீரண கோளாறு ஏற்படும், தூக்கமின்மையை தந்துவிடும். அஜீரணம் இருந்தால், எவ்வளவு சத்தான உணவு சாப்பிட்டாலும், அதிலுள்ள ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு சென்றடையாது. இதனால் உடல் பலவீனம் அடைந்துவிடும்.
கலோரிகள்: இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால், இதயத்திலும் பாதிப்பை உண்டாக்கலாம். அதிக கலோரிகள், ஆரோக்கியமற்ற உணவு, போன்றவற்றால், இதயத்துக்கு தொந்தரவு வரலாம்.
இரவு சாப்பிட்டதும் தூங்க போனால், புவியீர்ப்பு விசையானது நம்முடைய செரிமான பாதைக்குள் உணவு நகர்ந்து செல்வதை தடை செய்கிறது. மேலும், இரவில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவை உட்கொள்ளும் பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கக்கூடும்..
உடல் எடை: ஒருவேளை இரவில் பால் குடிக்கும் பழக்கம் இருந்தால் , தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே குடித்துவிட வேண்டும். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இரவு 7 மணிக்குள் சாப்பிட வேண்டும். குறிப்பாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைத் தவிர்த்துவிட்டால் இன்னும் நல்லது. இரவு நேரம் சாப்பிடும்போது, டிவி, மொபைல் போன்றவற்றைத் தவிர்ப்பதும் நல்லது என்கிறார்கள்.
இரவு உணவிற்குப்பிறகு 20 நிமிடம் வாக்கிங் செய்வதால், செரிமானம் எளிதாகும். சரியான நேரத்தில் சாப்பிட்டு, சரியான நேரத்தில் தூங்குவதால், நம்முடைய உடலில் நடைபெற வேண்டிய செயல்கள் சீரான வகையில் எந்தவிதமான பிரச்சனையுமின்றி நடைபெறும். இரவில் உடலுக்கு ஓய்வு ஓய்வு கொடுப்பதால், எந்தவித அழுத்தமுமின்றி, உடலின் நச்சுத்தன்மையை வெளியேற்றும் வேலையை கல்லீரலால் சீராக செய்ய முடிகிறது.












Click it and Unblock the Notifications