கற்பூரவள்ளியை விடுங்க.. பலே "ரஸ்தாளி".. ஆமா, சர்க்கரை நோயாளி வாழைப்பழம் சாப்பிடலாமா.. இதை கவனியுங்க
சென்னை: வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் எப்போதுமே இணையத்தில் உலா வந்துகொண்டேயிருக்கும். டாக்டர்களின் அனுமதியுடன், நீரிழிவு நோயாளிகள் ஒருசில பழங்களை மட்டுமே சாப்பிடலாம் என்கிறார்கள்.. அதுவும் குறைந்த அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அது என்னென்ன பழங்கள்?
பொதுவாக, வாழைப்பழத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை அறிந்தாலே அதன் மகத்துவம் தெரிந்துவிடும்.. வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், போன்றவை அடங்கி உள்ளன..

ஒரே ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மட்டும், மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய, ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது என்கிறார்கள். வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.. இதன்காரணமாகவே, பலரும் வாழைப்பழத்தை தவிர்த்து விடுகிறார்கள்.
கற்பூரவள்ளி: ஆனால், இதுதான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்கிறார்கள் நிபுணர்கள்.. உதாரணமாக, கற்பூரவள்ளி வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி - 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. அதனால், இவை அனைத்துமே உடல் எடையை குறைக்க உதவுகிறதாம்.. மேலும், இதில், அதிக அளவு செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் நிறைந்துள்ளதால், ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது...
கால்சியம் அதாவது, மேங்கனீஷ், மெக்னிஷியம் மிகுதியாக உள்ளதால், எலும்புகளுக்கு நன்மை பயக்கிறது.. வலு சேர்க்கிறது. அதேபோல, உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும், தோலில் ஏற்படும் சொறி, சிரங்குகள், புண்கள் விரைவில் ஆறுவதற்கும், கற்பூரவள்ளியே பெரிதும் துணைநிற்கிறது..
காலை நேர உணவை தவிர்ப்பவர்களுக்கு இந்த கற்பூரவள்ளி பேருதவி புரிகிறது.. காலையில் இந்த பழத்தை சாப்பிடும்போது, நாள் முழுவதும் ஆற்றலை தருகிறது.. களைப்பை அண்டவிடாது என்கிறார்கள்.
பச்சை வாழைப்பழம்: பச்சை நிறத்தில் உள்ள பழுக்காத வாழைப்பழத்தில் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக்ஸ் இன்டக்ஸ்) குறைவாக இருப்பதாலும் செரிமானத்தை தாமதப்படுத்தும் நார்ச்சத்து கூடுதலாக இருப்பதாலும் நீரிழிவு நோயாளிகள், இந்த பழுக்காத பச்சை நிற வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்கிறார்கள்.
பச்சை வாழைப்பழத்திலுள்ள ஸ்டார்ச் கார்போஹைட்ரேட்டுகள், செரிமானத்தை மெதுவாக்கி, ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதையும் தடுக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.. மேலும், இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி, ரத்த சர்க்கரை அளவையும் நிர்வகிக்க உதவுகிறதாம்.
நீரிழிவு நோயாளிகள்: அதேபோல, நீரிழிவு நோயாளிகள் நார்ச்சத்து அதிகமாக உள்ள செவ்வாழை, நேந்திரம், போன்ற வாழைகளையும் சாப்பிடலாம். ஆனால், ஒரு நாளைக்கு ஒரு சிறிய வாழைப்பழம் மட்டுமே சாப்பிட வேண்டுமாம்.
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் நோயாளிகள், மஞ்சள் வாழைப்பழங்களை கூட டாக்டர்களின் ஆலோசனை பெற்று சாப்பிடலாம் என்கிறார்கள். ஆனால், வாரத்துக்கு 2 சிறிய பழங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.. இவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டியது பூவம்பழம், ரஸ்தாளி போன்ற வாழைப்பழங்களாகும்.
மந்தத்தன்மை: இந்த ரஸ்தாளியை எடுத்துக்கொண்டால், மருத்துவ குணங்கள் குறைவுதான்.. இதில் முக்கியமாக காமாலையை தடுப்பதில் ரஸ்தாளிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.. வளரும் குழந்தைகளுக்கு இந்த பழம் கட்டாயம் தர வேண்டும். ஆனால், ரஸ்தாளிபழம் சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பியது போன்ற உணர்வை தரும் என்றாலும், சாப்பாடு சாப்பிட்டதுமே இதை சாப்பிடக்கூடாதாம்.. காரணம், மந்த தன்மையை தந்துவிடுமாம்..

ஆக, எல்லாவகையான பழங்களிலும் சர்க்கரைச்சத்து இருக்கும்போது, வாழைப்பழத்தில் அது சற்று அதிகமாகவே உள்ளது.. ஆனால், வாழைக்காயில் சர்க்கரை குறைவாக உள்ளது..
பழங்கள்: எனவே, சர்க்கரை நோயாளிகள், சர்க்கரைச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து சற்று அதிகமாகவும் உள்ள ஆப்பிள், கொய்யாக்காய், பேரிக்காய், சாத்துக்குடி போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒன்று என்று எடுத்து கொள்ளலாம்.. இதுவே பப்பாளியை எடுத்துக்கொண்டால், முற்றிலும் பழுக்காத, செங்காயாக உள்ள பப்பாளியை, 2 அல்லது 3 துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்..அதுவும், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் மட்டுமே மேற்கண்ட பழங்களை எடுத்து கொள்ள முடியுமாம்.












Click it and Unblock the Notifications