மார்பு பகுதி தோல் ஆரஞ்ச் பழத் தோல் போல் இருக்கிறதா.. உடனே மருத்துவரை பாருங்கள்.. டாக்டர் பரூக்
சென்னை: புற்றுநோய் என்றால் சிகிச்சையே இல்லை என்பது மக்கள் மனதில் எழுந்த தவறான எண்ணம் ஆகும் என்றும் சில அறிகுறிகள் குறித்தும் டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: புற்று நோயைப் பொருத்தவரை அதன் சிகிச்சையில் மக்களிடம் உள்ள தவறான நம்பிக்கை யாதெனில் இன்னும் புற்றுநோயை சரிசெய்யும் சிகிச்சை வரவில்லை என்பதாக இருக்கிறது.
ஆனால் புற்று நோய் சிகிச்சை மற்றும் மருத்துவம் நவீன அறிவியலின் துணை கொண்டு நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. புற்றுநோய்க்கு உள்ளாகும். பெரும்பான்மை மக்கள் தங்களுக்கு வரும் ஆரம்பகட்ட அறிகுறிகளை உதாசீனம் செய்து பொன்னான காலத்தை கடத்தி விட்டு புற்றுக்கட்டி உடலின் வேறு இடங்களுக்குப் பரவிய பிறகு மருத்துவரை சந்திக்கின்றனர்.

ஆரம்ப அறிகுறிகளிலேயே சுதாரித்துக் கொண்டு மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பான்மையினர் பூரண குணம் அடைகின்றனர். இந்தக் கட்டுரையில் பல்வேறு புற்று நோய்களின் ஆரம்ப நிலை அறிகுறிகளைக் காண்போம். மார்பகங்களைப் பொருத்தவரை மார்புக்குள் கக்கம் பகுதியில் கட்டி தோன்றுவது இயல்புக்கு மாறானது. மேலும் முலைக்காம்பில் இருந்து ரத்தம்/ நீர் போன்ற திரவம் வருவது முக்கிய அறிகுறி.
மார்புப்பகுதியில் உள்ள தோல் ஆரஞ்சுப் பழத்தின் தோல் போல சொரசொரப்புடன் புள்ளி புள்ளியாக பள்ளம் விழுந்து காணப்படும். உடனே மருத்துவரை சந்தித்து மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது. சிறுநீர் கழிக்கும் போது குறைவாக செல்வது / சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவது / சிரமத்துடன் சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவது / சிறுநீரில் ரத்தம் கலந்து செல்வது போன்றவை பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் கோளாறு, மாதவிடாய் உதிரப்போக்கு அளவுக்கு அதிகமாக செல்வது, மாதவிடாய் நின்று மெனோபாஸ் அடைந்து விட்ட நிலைக்குப் பின்பும் திடீரென உதிரப்போக்கு ஆவது - கர்ப்ப பை சார்ந்த புற்று நோயின் முக்கிய அறிகுறியாகும்.
ப்ராஸ்டேட் சுரப்பி / சிறுநீர்ப்பை சார்ந்த புற்று நோயின் ஆரம்ப கட்ட அறிகுறியாக இருக்கலாம். நன்றாக மலம் கழித்து வந்த நிலையில் திடீரென மலச்சிக்கலோ அல்லது அடிக்கடி மலம் வெளியேறும் நிலையோ ஏற்படுவது. மலத்தில் ரத்தம் வெளியேறும். அடிவயிற்றுப் பகுதியில் வலி ஏற்படுவது. மலக்குடல் பகுதியில் புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம். கவனம் தேவை. சாப்பிட்ட உணவு வயிற்றுக்கு இறங்காமல் நெஞ்சிலேயே அதிக நேரம் நிற்பது, நெஞ்செரிச்சல் , உணவை விழுங்குவதில் சிரமம், மேல் வயிற்றுப் பகுதியில் வலி , குமட்டல் , வாந்தி , பசி உணர்வு குறைதல் போன்றவை உணவுக்குழாய் / இரைப்பை போன்ற பகுதிகளில் புற்று நோய் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
அடிக்கடி காரணமில்லாமல் இருமல் , தொண்டை கரகரப்பு ( எந்த சிகிச்சைக்கும் அடங்காமல் தொடரும் இருமல்) இருமும் போது ரத்தம் சளியுடன் வெளியேறுவது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதை புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம். வாயில் நாக்கில் ஈர்ப்பகுதியில் ஆறாத புண் / சதைக்கட்டி போன்றவை ஏற்படும். நாக்கு மற்றும் வாயில் இருந்து அடிக்கடி ரத்தக் கசிவு மற்றும் வலி ஏற்படுவது , நாக்கில் வெள்ளையாகவும் சிவப்பாகவும் படை தோன்றுவது வாய் மற்றும் தொண்டைப் பகுதி புற்றுநோயாக இருக்கக்கூடும்.
அடிக்கடி காரணமின்றி தலைவலி , வலிப்பு , பார்வை இரண்டாகத் தெரிவது, காது கேட்டலில் குறைபாடு, நடை தடுமாறுவது , கண் இமை கீழறிங்கித் தொங்குவது போன்றவை மூளையில் புற்று நோய் கட்டி இருப்பதற்கு அறிகுறியாக இருக்கலாம். தோல் பகுதியில் சதைக்கட்டிகள் திடீரென தோன்றுவது உருவத்தில் பெரிதாக மாறுவது கட்டிகளில் இருந்து ரத்தம் கசிவது
ஆறாத புண்கள் புதிதாக மச்சம் தோன்றுவது அல்லது ஏற்கனவே இருக்கும் மச்சம் உருவத்தில் பெரிதாவது வீங்குவது போன்றவை சருமம் சார்ந்த புற்றுநோய்க்கு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.
கழுத்து , கக்கம் , வயிற்றுப் பகுதி , இடுப்புப் பகுதியில் கட்டிகள் தோன்றுவது தீராத காய்ச்சல் இரவு நேரத்தில் வியர்த்துக் கொட்டுவது, காரணமே இல்லாமல் திடீரென உடல் எடை வெகுவாகக் குறைந்தாலோ திடீரென கூடினாலும் அதை அலட்சியம் செய்யாமல் கவனிக்க வேண்டும். நான் மேற்சொன்ன அறிகுறிகள் யாவும் பல்வேறு விதமான புற்று நோய்களின் ஆரம்ப நிலை அறிகுறிகள் இவற்றை உதாசீனம் செய்யாமல் உடனே சிகிச்சைக்கு வந்தால் புற்று வேறெங்கும் பரவும் முன்னமே பூரண குணம் அடைய முடியும். இவ்வாறு
டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications