ஏழைகளின் பெர்ரி! மணி மணியாய் காய்க்கும்.. மிளகு சைஸ்தான்.. ஆனாலும் இதன் பயன்கள் இருக்கே! அப்பப்பா!
சென்னை: வயிற்றுப்புண்களை ஆற்றுவதற்கு மிகச் சிறந்த மருந்து ஒன்று இருக்கிறது. மருந்து என்றால் இயற்கை மருந்துதான். இதன் விலையும் கூட குறைவுதான். ஆனால் நாம் தான் அதை கண்டுக்கொள்வதே இல்லை.
அந்த காலத்தில் நோய் நொடி இல்லாமலும், 90 வயதிலும் மூதாட்டி குச்சியில்லாமல் ராஜநடை நடந்து வந்ததையும் பார்த்திருப்போம். ஆனால் இன்று சிறிய வயதிலேயே முட்டி வலி, கால் வலி, இடுப்பு வலி என ஏகப்பட்ட வலிகள்.

இதற்கெல்லாம் காரணம் ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதுதான். எத்தனையோ அருமருந்துகளை முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அதன் மகத்துவத்தை தெரிந்து கொண்டு நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். இன்று நாம் பார்க்க இருக்கும் அருமருந்து- மணத்தக்காளிதான்.
மணிமணியாக காய்களும், பழங்களும் இருக்கும். கொத்து கொத்தாக காய்க்கும். இவற்றை எடுத்து அப்படியே மோர் உப்பில் ஊற வைத்து வற்றல் போட்டு காரக்குழம்பு செய்யலாம். இதன் கீரையை பொரியல், கூட்டு, கடையல் செய்யலாம். விலை ஒரு கட்டு சத்தியமாக ரூ 30 மேல் போகாது. குறைந்த செலவில் அதிக ஆரோக்கியம்!
நீண்ட நாட்களாக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வற்றல் சிறந்த மருந்து. பசியை அதிகரித்து உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். காய்ச்சலால் நாவில் ஏற்படும் கசப்பு சுவையை போக்கும். சுவையை அதிகரிக்கும். வாந்தி உணர்வை கட்டுப்படுத்தும். நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கவும், சிறுநீர் பெருக்கை அதிகரித்து சிறுநீர்ப்பாதை தொடர்பான நோய்களையும் குணமாக்கும்.
வாய்ப்புண்ணை போக்கும் அருமருந்து. வயிற்றில் பிரச்சினை இருந்தால் வாயில் துர்நாற்றம் மூலம் தெரியும் என்பார்கள். இந்த கீரையை கசக்கி தண்ணீரில் கலந்து வாய்க் கொப்பளிக்கலாம். தாகத்தை தணிக்கும், பசியை தூண்டிவிடும். மலமிளக்கியாக பயன்படும். இந்த கீரையில் வைட்டமின் இ, டி ஆகியவை உள்ளன.
வயிறு மட்டுமல்ல, உள்ளுறுப்புகளிலும் ஏற்படும் புண்களை கட்டுப்படுத்தும். இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும். நல்ல உறக்கத்தை கொடுக்கும். கண் பார்வை தெளிவாகும். உடல் சூட்டை தணிக்கும். காச நோயாளிகள் இந்த கீரையை சாப்பிடுவது மிகவும் நல்லது. இத்தனை மருத்துவக் குணங்கள் கொண்ட இந்த கீரையையும் அதன் பழங்களையும் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லதா?












Click it and Unblock the Notifications