மாணவருக்கு ஒரே நாளில் 6 முறை நின்ற இதயம்! மீண்டும் துடிக்க வைத்த அந்த சிகிச்சை! மெடிக்கல் மிராக்கிள்
டெக்சாஸ்: அமெரிக்காவைச் சேர்ந்த 21 வயது இந்திய வம்சாவளி மாணவருக்கு ஒரு நாளில் 6 முறை இதயம் நின்றுவிட்ட நிலையில் அவரது உயிரை காப்பாற்றிய பிரிட்டன் மருத்துவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
டெக்சாஸில் உள்ள பெய்லர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய அமெரிக்க மாணவர் அதுல் ராவ். இவர் ஜூலை 27 ஆம் தேதி சாலையில் சரிந்து விழுந்து கிடந்தார். அவரை பார்த்த சக மாணவர்கள் லண்டன் ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர்.

அந்த ஆம்புலன்ஸ் வருவதற்குள் ராவுக்கு இம்பீரியல் கல்லூரியின் பாதுகாவலர்களால் சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வந்ததும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்ததில் ரத்தம் உறைந்து இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலைக்கு பெயர் நுரையீரல் தக்கையடைப்பு (pulmonary embolism) என அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள் இரவு முழுவதும் அதுல் ராவை உயிருடன் வைத்திருக்க முயன்றனர்.
இதையடுத்து அடுத்த நாள் ஆபத்தான நிலையில் செயின்ட் தாமஸ் மருத்துவமனைக்கு அதுல் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எக்மோ கருவி சிகிச்சை தேவைப்பட்டது. இந்த கருவியானது இதயம், நுரையீரலின் செயல்பாட்டை முழுவதுமாக மாற்றியமைத்து நோயாளி குணமடைய நேரம் கொடுக்கிறது.
இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் மருந்துகள், ரத்தம் உறைதலை தடுக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர் எக்மோ இல்லாமல் சிகிச்சை மேற்கொள்ள தொடங்கினார். இதுகுறித்து மருத்துவர் லூயிட் தகுரியா கூறுகையில் அதுல் முழுமையாக காப்பாற்றப்பட்டார். இது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஏனென்றால் அதுலின் இதயத் துடிப்பு ஒரு நாளில் 6 முறை நின்றுவிட்டது என்றார்.
அதுல் கூறுகையில் நான் கண் விழித்த போதுதான் நான் உயிருடன் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். எனக்கு உயிர் வாழ கிடைத்திருக்கும் இரண்டாவது வாய்ப்பு இது. இந்த வாய்ப்பில் மற்றவர்களுக்கு நான் உதவ விரும்புகிறேன் என்றார். ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த துணை மருத்துவர் கூறுகையில் நான் கடைசியாக அதுலை பார்த்த போது அவர் உயிர் பிழைப்பார் என்று நினைக்கவே இல்லை. இது போல் 6 முறை இதயம் நின்றவர் உயிர் பிழைத்து மீண்டும் அவருடைய பெற்றோருடன் பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என் 18 ஆண்டு கால அனுபவத்தில் நான் பார்த்ததில்லை என்றார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் அதுல் சாலையில் விழுந்தவுடன் அவருக்கு சிபிஆர் கொடுக்கப்பட்டுவிட்டது. இதுவே நோயாளி உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மாரடைப்பு ஏற்பட்டு 1 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதுதான் கோல்டன் ஹவர் என்கிறோம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications